காரச்சங்கு (DogWhelk) (Nucella lapillus)
துளையிடும் இயந்திரங்கள் தோன்றி, உலகம் தொழில்வளர்ச்சி
அடையாத காலத்திலேயே, முதன்முதலாக துளையிடும் வித்தை தெரிந்த, அதற்காக ‘காப்புரிமை‘
பெற்ற ஒரு கடலுயிர் என்றால் அது காரச்சங்குதான்.
சங்குகளில் சிறியசங்கு காரச்சங்கு. இதன் அளவே இரண்டங்குலம்தான்.
ஆனால், சிறிய சங்கானாலும், சுத்தியலால் கூ
ட அடித்து உடைக்க முடியாத அளவுக்கு வலிமையான சங்கு இது.
‘நகரும் நத்தை‘ போல கடல் பாறைகள், மணல்வெளிகளில் நகர்ந்து
வரும் காரச்சங்குக்கு அங்குமிங்கும் நகர முடியாத கடற்காய்களும் (Mussel), கொட்டலசுகளும்தான்
(Barnacles) முதன்மை இரை.
காரச்சங்குகளில் சில, கடல்நீரை செவுள்பைகளில் செலுத்தி,
கடல்நீரை சுவை பார்த்து, அதன்மூலம் இரையைத் தேடி வரும். சதைப்பற்றுள்ள இரு உணர்கொம்புகளும்கூட
பாறைகளில் ஒட்டியிருக்கும் இரையை உணர காரச் சங்குக்குப் பயன்படும்.
இரையைப் பார்த்தாகி விட்டதா? இனி, துளையிடும் வேலை
ஆரம்பமாகி விடும். ரம்ப முட்கள் கொண்ட நாக்கை நீட்டி கடற்காய் அல்லது கொட்டலசை காரச்சங்கு
துளையிடும். துளையிடும் வேலை முடிந்து விட்டதா? இனி, தன் உடலில் உள்ள செரிக்கவைக்கும்
திரவத்தை காரச் சங்கு அதன் இரையின் உடலுக்கு உள்ளே செலுத்தும். இந்த திரவம் இரையின்
மெல்லுறுப்புகளைக் கரைக்க, அந்த சூப்பை உறிஞ்சி காரச்சங்கு உணவாக்கும்.
சிலவேளைகளில் அடம்பிடிக்கும் இரையை அடக்க அதற்கு மயக்க
மருந்து செலுத்தி உணர்விழக்க வைக்கும் பழக்கமும் காரச்சங்குக்கு உண்டு.
ஒரு பருவம் முழுவதும் கடற்காய்களை விருந்தாக்கும்
காரச்சங்கு, மற்றொரு பருவத்தில் கொட்டலசுகளை விருந்துண்ணும். இதனால் கடற்பாறைகளில்
கொட்டலசுகள் அளவுக்கு அதிகமாக பெருக்கி கொட்டமடிக்க முடியாது. கடற்காய்கள் பெருகி கலாட்டா
செய்யவும் முடியாது. இவற்றின் இனம் அளவுக்கு அதிகமாகப் பெருகி விடாமல் சமநிலையைக் காரச்சங்கு
காக்கிறது. கடற்காய்கள், கொட்டலசுகளை மட்டுமின்றி பெரிய வலுவான பிற சங்கு களையும் கூட
காரச்சங்கு இரையாக்க வல்லது.
காரச்சங்கு பொதுவாக வெண்மை நிறமானது. ஆனால், சாம்பல்,
பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு, கிரீம் நிற காரச்சங்குகளும் உள. வரிகள், வடிவங்கள் கொண்ட
காரச் சங்குகளும் உள்ளன.
பாசிகளை உண்ணும் பிளமிங்கோ (Flanmingo) எனப்படும்
பூநாரை அல்லது கிளிமூக்கு நாரையின் சிறகுகளில் அந்த பாசியில் உள்ள நிறமி, எப்படி இளஞ்சிவப்பு
(Pink) வண்ணத்தையும் வனப்பையும் ஏற்றுகிறதோ, அதேப்போல காரச் சங்கு அது உண்ணும் இரைகளின்
அடிப்படையில் அடிக்கடி நிறம் மாறக்கூடியது.
கடற்காய்களை அதிகம் உண்ணும் காலத்தில் கரும்பழுப்பு
நிறமாகவும், கொட்டலசுகளை அதிகம் உண்ணும் காலத்தில் வெள்ளை நிறமாகவும் தோன்றுவது காரச்சங்கின்
பழக்கம்.
கடலடி பாறைகளின் கீழ் தொங்கியபடி வாழும் காரச்சங்குக்கு,
எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால், இளம் காரச் சங்குகளை, அவற்றின் தோடு முரடாக இருப்பதால்,
கடலோரப் பறவைகள் சில அப்படியே விழுங்க விடக் கூடும்.
ஒரு கடலோரப் பகுதியின் சூழல் நலத்தைச் சுட்டிக்காட்டும்
ஒரு கருவி காரச்சங்கு. இவற்றின் பெருக்கம், கடல் நலமாக இருப்பதை கண்ணாடி போல காட்டுகிறது.