மயில்
அடல் (Peacock Flounder) (Bothus lunatus)
‘பார்க்கத்தான்
நான் மயில், ஆனா நிஜத்தில் நான் பச்சோந்தி‘… இப்படி தமிழ்த்திரைப்பாட பாணியில்
வசனம் பேசத் தகுந்த ஒரு மீன் மயில் அடல்மீன். பூ அடல் என்ற பெயரும் இதற்கு உண்டு.
பழுப்பு
அல்லது சாம்பல் கலந்த நிறத்தில், வெளிர்நீலப் புள்ளிகள், வட்டங்களுடன் மயில்
அடல்மீ ன் காணப்படும். 14 முதல் 18 அங்குல நீளம் வரை இந்த மீன் இருக்கலாம்.
அடல்மீன்களுக்கே
உரித்தான விதத்தில் மயில் அடல்மீனுக்கும் அதன் இரு கண்களுமே உடலின் ஒரு பக்கமாக
அமைந்திருக்கும். குமிழ் விளக்குகள் போல எட்டிப்பார்க்கும் இந்த இரு விழிகளுக்குக்கும்
இடையில் தாராள இடைவெளியும் உண்டு. ஆண் மீனாக இருந்தால் இந்த இடைவெளி இன்னும்
அதிகமாக இருக்கும். மணலில் பதிந்திருந்தபடி, இந்த இருவிழிகளை மட்டும் வெளியே
நீட்டி, ஒரே நேரத்தில் முன்னும், பின்னும், இருவேறு திசைகளில் ஏன் 360 பாகையில்
அடல்மீனால் பார்க்க முடியும். இதனால், அருகில் நெருங்கி வரும் இரைமீனை ‘லபக்‘கென
கவ்விக் கொள்ளவும், கொல்ல வரும் மீனிடம் இருந்து தப்பவும் மயில்அடலால் முடிகிறது.
பச்சோந்தி போல
நிறம் மாறும் திறன் மயில் அடலுக்கு உண்டு. வெறும் 8 நொடியில், பின்னணி
நிறத்துக்கேற்ப மயில் அடல் தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும். ஒரே நேரத்தில் உடலின்
பல்வேறு பகுதிகளை பல்வேறு வண்ணங்களாக தேவைக்கேற்ப மாற்றும் திறனும் அட,ல்மீனுக்கு
உண்டு. கறுப்பு, வெள்ளை நிறமான சதுரங்கப் பலகையின் மேல் மயில் அடலை வைத்தால்கூட,
அந்த சதுரங்கப் பலகைப் போலவே தன்னை அது உருமறைப்பு செய்து கொள்ளும்.
ஆனால்,
மயில் அடலின் ஒரு கண் குருடானாலோ அல்லது பழுது பட்டாலோ அதனால் நிறம்மாற முடியாது.
தனது நிறத்தையும், பின்னணி நிறத்தையும் கண்ணால் பார்க்க முடிந்தால் மட்டுமே மயில் அடலால்
நிறம்மாற முடியும். அதுபோல இருகண்களில் ஒரு கண்கூட வெளியில் நீட்டியபடி நிற்காமல்
மணலில் புதைந்திருந்தால் மயில் அடலால் நிறம்மாற முடியாது.
கடல்மணலில்,
மயில் அடல் தன் உடலை அசைக்கும்போது மட்டுமே அதை நாம் காணலாம். அசைவு நின்ற அடுத்த கணம்
மயில் அடல் மணலோடு மணலாக நிறம்மாறி மாயமாய் மறையக்கூடியது.
மயில்
அடலுக்கு சிறிய ஈரடுக்குப் பற்கள் உண்டு. கடலில் 20 மீட்டர் ஆழத்தில் பார்கள், தூய
குருத்து மணல், கடல்புற்களில் மயில்அடல் காணப்படும். சிறுமீன்கள், கணவாய்கள் இதன்
உணவு. அடல்மீனின் வலதுபக்கமே அதன் இருகண்களும் அமைந்திருப்பதால் தனது இடது பக்கத்தைத்
தரையில் பதித்தே மயில் அடல் பள்ளிகொள்ளும்.
மயில்
அடல்மீன்களில் பெண்மீன்கள் 30 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியவை. பகை மீனான முள்பேத்தா
மீனின் நஞ்சைக்கூட மயில் அடல் தாக்குப்பிடிக்கக் கூடியது.
அடல்களில்
மிகப்பெரிய கூரிய பற்கள் உள்ள அடல்கள் ‘நாய் அடல்‘ (Haliput) என
அழைக்கப்படுகின்றன. மற்ற இன அடல்கள் ஆங்கிலத்தில் Flounder என்ற பெயர் உள்பட
பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. (அடல்களைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே
உள்ளது)