Wednesday, 9 September 2015

கிளாத் மொனே

இம்ப்ரசனிச ஓவிய இயக்கத்தின் மிக மூத்த முன்னோடியாக கருதப்படுபவர் கிளாத் மொனே.
பாரிஸ் நகரத்தில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சியில் கிளாத் மொனேயின், சூரிய உதயம் ஒரு பதிவு என்ற ஓவியமே, இம்ப்ரசனிசம் என்ற பெயர்சூட்டலுக்கு காரணமாயிற்று. இம்ப்ரசனிசம் என்ற பெயரை அருளிச் செய்ததன் மூலம், இம்ப்ரசனிச இயக்கத்தின் தலைமகனானார் மொனே.

அர்ஜென்டியுல் ஒரு பிரெஞ்சு நகரம்.
19ஆம் நூற்றாண்டு பாரிஸ் நகரத்தின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் பிடிக்காத ஓர் ஓவியர் கூட்டம் அர்ஜென்டியுல் நகரத்தைத் தங்கள் தங்கு தளமாக்கிக் கொண்டது.
பாரிஸ் நகரத்தின் இறுக்கத்தை வெறுத்த இந்த இம்ப்ரசனிச ஓவியக் குழாமுக்கு கிளாத் மொனே தலைவரானார்.
இந்த ஓவியர்கள், தங்கள் ஓவியங்களால் அர்ஜென்டியுல் நகரத்துக்கு சாகாவரம் தந்தார்கள். இந்த ஓவியர்களின் கைவண்ணத்தால் அந்த நகரம் இறவா வரம் பெற்றது.
அர்ஜென்டியுல், நகரம் பாரிஸ் நகரத்துக்கு 11 கி.மீ. வடமேற்கே அமைந்திருந்தது. பாரிஸ் நகரத்தைப் போல இந்த நகரமும் சீன் நதிக்கரையில் அமைந்திருந்தது.
சீன் நதி மிக அகலமாகவும், ஆழமாகவும் ஓடியது அர்ஜென்டியுல் நகரத்தில்தான்.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை கோதுமை வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், அஸ்பரகாஸ்.
1851ல் பாரிஸ் நகரத்துடன் அர்ஜென்டியுல் நகரத்தை இணைந்து இருப்புப்பாதை போடப்பட்டது.
ஆனால், அர்ஜென்டியுல் அதன் அழகை இழக்கவில்லை.
வார இறுதியில், பாரிஸ் நகரத்தவர்கள் ஒருநாள் பொழுதைக் கழிக்கும் உல்லாசத் தளமாக அர்ஜென்டியுல் விளங்கியது.
அதிலும் சீன் நதியில் படகு விட்டு பாரிசியர்கள் உளம் மகிழ்ந்தார்கள். நீராவிப் படகுப் போட்டிகளையும் நடத்தினார்கள்.
சீன் நதியின் அழகு, நதியின் மீதுள்ள பாலங்கள், சிற்றூர்த்தனம் நிறைந்த புறநகர்க்காட்சிகள், தெருக்கள், இவற்றை அந்த ஓவியர் குழாம் வரைந்து தள்ளியது.
இம்ப்ரசனிசம் உடைபட்ட தூரிகைத் தீற்றல்கள், பிரிக்கப்பட்ட ஒளி வண்ணங்கள் என இம்ப்ரசனிச பாணி ஓவியங்களால் இந்த நகரம் உயிர் பெற்றது.
குறிப்பாக கிளாத் மொனே இந்த நகரத்துக்கு எழில் ஊட்டினார்.
எதுவர்ட் மனே, அகஸ்தின் ரினாய்ர், ஆல்பிரட் சிஸ்லி போன்றவர்கள் ஒருவரை ஒருவர் வரைந்தார்கள். அடுத்தவர்களின் குடும்பங்களையும் ஓவியமாகத் தீட்டினார்கள்.
இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய கிளாத் மொனே, 1872ல் மட்டும் இந்த நகரத்தை மையப்புள்ளியாக வைத்து 60 ஓவியங்களைத் தீட்டினார்.
1872ல் சிஸ்லி, மொனேயைச் சந்தித்தார். ஒரே கருப்பொருளை வைத்து இரு ஓவியர்கள் ஒரே நேரத்தில் ஓவியம் வரையும் முறையை இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார்.
நகரின் முக்கிய ஹெலாய்ஸ் சதுக்கம், மரச் செறிவு ஆகியவற்றை இவர்கள் கூட்டாக வரைந்தார்கள்.
1874ல் ரெனாய்ர், மொனே ஆகியோர் 5 இணை ஓவியங்களை வரைந்தார்கள். அதே ஆண்டு இவர்கள் வரைந்த பாய்மரப் படகுகள் ஓவியம் மிகவும் புகழ்பெற்றது.

Sunday, 6 September 2015

நதி

உடைந்த நீர்த்துளிகளின் ஊர்வலம்!
கரைபுரளும் கண்ணாடிச் சாறு!
ஆதாமின் குளியல் தொட்டி!
ஏவாள் முகம் பார்த்த முதல் கண்ணாடி!
நதி, நகரும் மீன்காட்சி அரங்கம்!
நதி, வானவில்லின் ஏழு வண்ணத்தில் நீல வரியை மட்டும் நெளிய விட்ட அழகு!
நதி ஒரு நகரும் சாலை. இந்த நீலச்சாலையின் நெடுகே விழுந்தால் இது நம்மையே இழுத்துச் செல்லும் நவீன சாலை!
நதி படகுளை தன் முதுகில் விட்டும் பயணம் செய்யும். குழந்தைகளாக குடங்களுக்குள் வந்தும் குடிபுகும்!
   -மோகனரூபன்
வண்ணத்துப்பூச்சி


சித்திரச் செவ்வானம்! சிறகுகளில் தானும்
ஒத்திகைகள் பார்த்து வரலாச்சு! _அது
    ஓவியமாய் பூத்திரியும் வண்ணத்துப் பூச்சி!

மஞ்சளிலே நீந்தும்! மங்கை நகச்சாந்தும்
எஞ்சியதில் பட்டுவிடலாச்சு! _அது
    ஏழுநிறமாய்த் திரியும் வண்ணத்துப்பூச்சி!

குங்குமத்தின் குலவை! கூட்டும் வண்ணக்கலவை!
அங்கமெல்லாம் கொட்டி வரலாச்சு! _ அது
Mohan Reuban's photo.   ஆகாயப் பூப்பறக்கும் வண்ணத்துப்பூச்சி!

ஓவியப்பூவொன்று ஓரிருநாள் சென்று
தாவிவந்து வான் பறக்கலாச்சு! _அது
   தான் மலரில் தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சி!
................
ஒரு பூவை பொட்டு வைத்த பொழுது

பிறை விட்டமானதை 
குறைபட்டுப் போனதை 
நிறைவட்டமாக்கினாள் மாது!_ அவள்
   நெற்றியில் பொட்டிடும் போது!

நெற்றியில் ஒருவிரல் 
ஒற்றிய பிறகவள்
சுற்றியதென்னடி மாயம்?_ அதில்
   சூரியன் தந்ததா சாயம்?

வண்ணத்துப் பொட்டாள்!
வானவில் தொட்டாள்!
எண்ணினேன் தினமொரு வண்ணம்!_நான்
   ஏழ்நிறம் காண்கிறேன் இன்னும்!

_மோகனரூபன்