ஓர்காக்களின் உறக்கம்
கொல்லும் திமிங்கிலம், ஓர்கா (Orca) என்றெல்லாம்
பல்வேறு பெயர்கள் கொண்ட கருங்குழவி ஓங்கல்களைப் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவுகள்
உள்ளன.
பெருஞ்சுறாவையே வேட்டையாடி வீழ்த்தக்கூடிய
வலிய கடலுயிரினமான கருங்குழவி ஓங்கல்களின் உறக்கம் பற்றி இந்தப் பதிவில் சொல்வோம்.
கருங்குழவி ஓங்கல்கள், இரவு பகல் என்று
இல்லாமல் கிடைக்கும் இடைவேளைகளில் 1 முதல் 6 மணிநேரம் உறக்கம் கொள்ளும். உறங்கும்போது
ஓங்கல்களுக்குகே உரித்தான வித த்தில் ஒரு கண்ணை மூடிக் கொண்டே உறங்கும்.
அதாவது கருங்குழவி ஓங்கலின் வலதுபக்க மூளை
உறங்கிக் கொண்டிருந்தால் இடது கண் திறந்திருக்கும். அதேப்போல இடதுமூளை தூங்கிக் கொண்டிருந்தால்
வலதுகண் விழித்திருக்கும்.
கருங்குழவி ஓங்கல்கள் உறங்கும்போது ஒன்றையொன்று
மிகவும் அருகில் நெருங்கியடி மெதுவாக நீந்தியபடியே உறக்கம் கொள்ளும். ஒரே சீராக அனைத்து
கருங்குழவி ஓங்கல்களும் மூச்சுவிட்டபடி இருக்கும்.
இதில் கருங்குழவி ஓங்கல் குட்டிகளின் கதை
தனித்துவமானது. பிறந்த சில மாதங்களுக்கு கருங்குழவி ஓங்கல் குட்டிகள் தூங்காது. எனவே
தாய் கருங்குழவி ஓங்கல்கள் உறங்கும்போது குட்டிகள் தாயைச் சுற்றிச்சுற்றி நீந்தியபடியே
இருக்கும்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. தாயின் அருகே நீந்துவதுதான் குட்டிக்குப் பாதுகாப்பு. 2. கருங்குழவி ஓங்கல் குட்டிகளுக்கு
பிறந்த புதிதில் உடலில் குளிரைத் தாங்குவதற்கு வசதியான கொழுப்புச்சத்து (Blubber) இருக்காது.
எனவே தொடர்ச்சியாக நீந்தி விளையாடுவதன் மூலம்
குட்டிகள் வளரவும் செய்யும். கடலின் குளிர்ச்சியைத் தாங்கி உடலைக் கதகதப்பாக கொழுப்புசத்து
உருவாகவும் செய்யும்.