Thursday, 26 March 2020


வலைகடியன் கடல் பாம்பு (beak/Hook nosed Sea Snake)
சிறப்பான நீச்சல்
கடல் பாம்புகளில் 22 வகை பாம்புகள் இருக்கலாம். ஆனால், அத்தனை கடல் பாம்புகளிலும் அதிக பரவலாகக் காணப்படும் கடல் பாம்பு, வலைகடியன் பாம்புதான். அதிக அளவில் மீனவர்களின் கண்களில் தட்டுப்படுவதால் சாதாரண கடல்பாம்பு என்ற பெயரும் இவருக்கு உண்டு. வலைகடியனின் அறிவியல் பெயர் Enhydrina Schistosa.
வலைகடியனின் நீளம் வெறும் 4 அடிகள்தான். இதன் மூக்கு பறவையின் அலகு போல சற்று துருத்தியபடி, வாயைநோக்கி கவிழ்ந்திருப்பதால் ஆங்கிலத்தில் இதற்கு அலகுமூக்கு பாம்பு என்று பெயர் வந்துவிட்டது. வலைகடியன் என்ற இதன் பெயர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இருந்து வந்த சொல். அதிக அளவில் மீனவர்களின் வலைகளில் சிக்கி இந்த வகை பாம்பு வந்துவிடும் என்பதால் ‘வலையைக் கடிக்கும் பாம்பு’ என்ற பொருளில் வலைகடியன் என்று இது அழைக்கப் படுகிறது.
கடல் பாம்புகளில் அதிக நஞ்சுள்ள பாம்பு வலைகடியன்தான். கடலில் ஏற்படும் பாம்பு கடிகளில் 50 விழுக்காடு கடிகள் வலைகடியனின் கைவண்ணங்கள்தான். கடலில் கடல்பாம்பு கடிகளால் ஏற்படும் மரணங்களில் 90 விழுக்காடு கடிகள் வலைகடியனின் கைங்கரியமே. அதாவது கடல்பாம்பு கடி  இறப்புகளில் பத்தில் ஒன்பது இறப்பு வலை கடியனாலேயே ஏற்படுகிறது.
வலைகடியன் ஒரு கடியில் 7.9 முதல் 9.0 மில்லிகிராம் நஞ்சை வெளிப்படுத்தக் கூடியது. ஆனால் மனிதர்களைக் கொல்ல இதன் 1.5 மில்லிகிராம் நஞ்சே போதும். இந்த 1.5 மில்லிகிராம் அளவுள்ள நஞ்சு மட்டுமே, நல்ல பாம்பின் நஞ்சைவிட 4 முதல் 8 மடங்கு வீரியம் மிக்கது என்றால் வலைகடியனின் திறமையை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
தரையிலும் ஊரும்
வலைகடியன் தடித்த உடலும், சிறிய தடிவாலும் கொண்ட கடல்பாம்பு. இதன் வால்நுனி நீந்துவதற்குத் துடுப்புப் போலப் பயன்படுகிறது. வலைகடியனின் உடல் பக்கவாட்டுவாக்கில் தட்டையாகக் காணப்படும். பாம்பின் மேற்புறம், மங்கலான ஒலிவப் பச்சை அல்லது சாம்பல் பச்சை நிறத்தில் தடித்த கோடுகள், பட்டைகளுடன் காணப்படும். பாம்பின் வயிற்றுப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக விளங்கும். இதன் தலை உடலைவிட சற்றுப் பெரியது. ஆனால் மற்ற பாம்புகளின் தலையைவிட சிறியது.
வலைகடியன் பாம்பு மண்டியும், சகதியும் கலந்த கலங்கலான கடற்பகுதிகளில் விரும்பி வாழும். குறிப்பாக ஆழம்குறைந்த கழிமுகப்பகுதி, மாங்குரோவ் காடுகளை அடுத்த திறந்த கடற்பகுதிகளில் இது அதிகம் காணப்படும். துறைமுகப் பகுதிகள், ஆழம் குறைவான வளைகுடா பகுதிகளிலும்கூட இது தென்படும்.
வலைகடியன் பாம்பு இரவிலும், பகலிலும் நடமாடும். இரவில் அதிக சுறுசுறுப்பாக இது இரையை வேட்டையாடக் கூடியது. இது 330 அடி ஆழம் வரை முக்குளித்துச் செல்லக்கூடிய கடல்பாம்பு. கடலின் அடியாழத்தில் 5 மணிநேரம் வரை இந்த பாம்பால் தங்கியிருக்க முடியும். அதன்பின்னரே இது மூச்செடுக்க கடல்மட்டத்துக்கு வரும்.
வலைகடியன் பாம்பு கலங்கலான கடல்நீரில் விரும்பி வசிப்பதால் இரை தேடும்போது கண்பார்வையை நம்பாது. பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி மோப்பத்தின் மூலம் இது இரைதேடும். தொடு உணர்வாலும் இரையை அறியும்.
இந்த வகை பாம்பு, கெழுது மீன் (Cat Fish), பேத்தாமீன், விலாங்கு மீன் இவற்றுடன் இறால், கணவாய் போன்றவற்றை இரையாக்கும். ஆனாலும், வலைகடியனின் முதன்மையான இரை கெழுது மீன்கள்தான். மற்ற கடல் பாம்புகளைப் போல கிடைத்த மீன்களை உண்ணாமல் கெழுது மீன்களை இந்தப் பாம்பு தேடி வேட்டையாடும். மீனவர்களின் வலையில் கெழுது மீன்கள் அதிகம் பட்டிருந்தால் அந்த வலையுடன் சேர்த்து வலைகடியன் பாம்பும் சிலவேளைகளில் வந்துவிடும். மீனவர்கள் கவனமாக இந்த பாம்பின் வாலைப்பிடித்து கடலில் வீசியெறிவார்கள்.
வலைகடியனின் பற்கள் 4 மில்லிமீட்டர் நீளத்துக்கும் குறைவானவை. ஆனால் வாய் இந்த பாம்பின் கழுத்தை விட இருமடங்கு விரியக் கூடியது. மிக வேகமாக நீந்தக்கூடிய பாம்பான வலைகடியன், இரைமீனை கடித்து அதை ஓடவிடாமல் செய்யும். நிலைகுலைந்து இனிமேல் போராட முடியாது என்ற நிலைக்கு மீன் வந்ததும், அதை சுழற்றி விட்டு மீனை முழுதாக விழுங்கத் தொடங்கும். மீனின் தலையில் இருந்து விழுங்குதலைத் தொடங்கி வாலில் முடிக்கும்.
வலைகடியனின் உடலில் ஒருவகை நொதிப்பொருள் (Enzyme) உண்டு. இரையை விழுங்கிய உடன் இந்த நொதிப்பொருள் அதன் செரிமான வேலையத் தொடங்கி விடக்கூடியது. ஆனாலும்கூட, தின்ற இரை முழுக்க செரிக்க சற்று நேரமாகும். கடல்நீரின் தட்பவெப்பநிலையைப் பொறுத்து இந்த செரிமான நேரம் மாறக் கூடியது.
அதிக நஞ்சுள்ள அரவம்
வலைகடியன் 30 குட்டிகள் வரை போடக்கூடியது. ஆழம்குறைந்த கழிமுகப்பகுதி, மாங்குரோவ் காடுகளையொட்டிய கடற்பகுதிகளில் வாழும் குட்டிகள் பெரிதாக வளர்ந்தவுடன் திறந்த கடற்பகுதிகளுக்குச் செல்லும். ஆனால் வலைகடியனின் குட்டிகளில் ஒருசில குட்டிகளே உயிர்பிழைத்து முழு வளர்ச்சியை எட்ட வாய்ப்புண்டு. பெரிய வலைகடியன்கள் மிக நஞ்சுள்ள பாம்புகள் என்றாலும் சிலவகை மீன்கள், கழிமுகப்பகுதி சதுப்புநில முதலைகளுக்கு இவை இரையாக வாய்ப்புண்டு.
வலைகடியன் பாம்பு எளிதில் சினமடையக்கூடியது. உடலில் ஒட்டுண்ணிகள் அதிகரித்து உடல் பாரம் அதிகமாகி, நீந்துவதில் சிரமம் ஏற்பட்டால் இது தோலை உரித்துக் கொள்ளும். வலைகடியன் பாம்பு அரிதாக நிலத்துக்கும் வந்து செல்லும். ஆனால் வந்த வேகத்தில் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

Monday, 9 March 2020


கூரல்
கத்தாளை இன மீன்களை ஆங்கிலத்தில் Croaker என்று அழைப்பார்கள். வயிற்றில் உள்ள பள்ளை என்ற காற்றுப்பையை அசைத்து ஒருவகை கரகரப்பொலியை எழுப்புவதால் இந்த வகை மீனுக்கு Croaker என்ற பெயர் வந்து விட்டது.
கத்தாளை மீன்களில் அளக்கத்தாளை, ஆண்டிக் கத்தாளை, ஆனக் கத்தாளை, ஆனவாயன் கத்தாளை, ஓலைக் கத்தாளை, கருங் கத்தாளை, கீறு கத்தாளை, சதைக் கத்தாளை, வரிக் கத்தாளை, மொட்டைக் கத்தாளை என்று பலவகை மீன்கள் உள்ளன.
சரி! கூரல் மீனைப்பற்றித்தானே பேச வந்தோம். ஏன் இப்போது கத்தாளை மீனைப் பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. கூரல் மீன் என்பது ஒருவகை கத்தாளை மீன் என்றே கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் கூரல் மீனை கருந்திட்டு கத்தாளை (Black Spotted Croaker) என்றே அழைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கூரல்களில் மஞ்சள் கூரல் மீன், அளக்கத்தாளை இனத்து மீனாகக் கருதப்படுகிறது. பன்னா மீனும் சிலவேளைகளில் கத்தாளை இனத்துடன் சேர்ந்து கொள்ளப்படும்.
ஆக, கத்தாளை, கூரல், பன்னா ஆகிய மூன்று மீன்களையும் பிரித்தறிந்து பார்ப்பது சற்று கடினம்தான். இந்த குழப்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் விதத்தில் கத்தாளை பன்னா, கரும்பன்னா, கருங்கத்தாளை போன்ற சிலவகை மீன்களின் பெயர்களும் உள்ளன. வரும் நாள்களில் கத்தாளை, கூரல், பன்னா ஆகிய மூன்று மீன்களையும் இனம் பிரித்தறிய நாம் முயற்சிப்போம்.
இப்போது கூரல் மீனைப் பற்றிப் பார்ப்போம். கூரல்களில் வெள்ளைக்கூரல், கருங்கூரல், மஞ்சள் கூரல், கொடுவாய்க் கூரல் போன்ற பல கூரல்கள் உள்ளன. கடலின் மிக விலைமதிப்புள்ள மீன் கூரல் மீன்தான். இந்த மீனை, ‘கடல் தங்கம்என்று அழைப்பார்கள்.
வளர்ந்த கூரல் மீன் 30 கிலோ வரை எடையிருக்கக்கூடியது. ஆண் கூரல் மீனாக இருந்தால் அது 5 முதல் 6 லட்சம் வரை விலைபோக வாய்ப்புள்ளது. பெண் கூரலாக இருந்தால் 1 முதல் 2 லட்சம்.
விலை அதிகம்
கூரல் மீனின் தூவி, அதன் வயிற்றில் உள்ள பள்ளை, தோல், சதை அனைத்துமே விலைமதிப்பு மிக்கவை. கூரல் மீனின் தூவி 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகக் கூடியது. கூரல் மீனின் சதை ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விலைபெறக் கூடியது.
கூரல் மீனின் தூவி மருந்து நிறுவனங்களுக்குப்  பயன்படுகிறது. மதுவை சுத்திகரிக்கவும் இது பயனுறுகிறது. கூரல் மீனின் தோலில் கொலுஜன் (Collagen) என்ற பொருள் உள்ளது. இது மருந்தாகவும், ஒப்பனைப் (Cosmetic) பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது. கூரல் மீனின் தோலை நீரில் கொதிக்க வைத்தால் அதில் இருந்து ஜெலட்டின் தோன்றும். கூரல் மீனின் பள்ளை என்ற உறுப்போ மிகமிக மதிப்பு கூடியது. இது பலவகை மருந்துகள் செய்ய துணைபுரிகிறது.
கூரல் மீனைப்போலவே, ஓலைக்கத்தாளை மீனின் வயிற்றில் உள்ள மெட்டி என்ற பொருளும் மருந்துப் பொருள்கள் உருவாக்கத்துக்கு மிகவும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, 3 March 2020


பெரும்பல்லன் சுறா (Megalodon Shark)
மனிதனோடு ஒப்பிட்டு கற்பனை
நமது கடல்களில் இப்போதுள்ள சுறாக்களில் மிகப்பெரிய சுறா அம்மணி உழுவை (பெட்டிச்சுறா) என அழைக்கப்படும் Whale Sharkதான். (உலகின் மிகப்பெரிய மீன் இதுதான்). இதற்கு அடுத்தபடி மிகப்பெரிய சுறா, மேய்ச்சல் சுறா என அழைக்கப்படும் Basking Shark. ஆனால் மேலே சொன்ன இரண்டு சுறாக்களுமே, மனிதர்களுக்கோ மற்ற பெரிய கடலுயிர்களுக்கோ எந்த ஆபத்தும் தராத அமைதியான சுறாக்கள்.
ஆனால், இவற்றுக்கு அடுத்தபடி மூன்றாவது இடத்தில் உள்ள சுறா, பெருஞ்சுறா (Great White Shark). இது மிகப்பெரிய இரைகொல்லிச் சுறா. கடலுயிர்கள் பலவற்றை நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய சுறா பெருஞ்சுறாதான்.
ஆனால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நமது பூவுலக கடல்களில் பெருஞ்சுறாவைவிட மூன்று மடங்கு பெரிய சுறா ஒன்று வாழ்ந்திருக்கிறது என்றால் அது வியப்புதானே? அந்த சுறாவின் பெயர் ‘பெரும்பல்லன்’ சுறா. ஆங்கிலத்தில் மேகலோதன் சுறா (Megalodon Shark).
23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரும்பல்லன்’ சுறா தோன்றியிருக்கும் என நம்பப்படுகிறது. அதன்பின் உலகக் கடல்களை பலகாலம் அது ஆண்டிருக்கிறது. அதாவது மைசீன் காலத்தில் இருந்த பிளையோசீன் காலம் வரை இதன் அரசாட்சி நடந்திருக்கிறது. 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது மறைந்து போயிருக்கிறது.
பெரும்பல்லன்’ சுறா வாழ்ந்த காலத்தில் உலகத்தின் மிகப்பெரிய மீன் அதுதான். அதன் நீளம் 12.65 மீட்டர் (41.50 அடிகள்). உடல் எடை 60 டன். தற்போது நம்காலத்தில் உலகில் வாழும் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவையைவிட (Whale Shark) பெரும்பல்லன் சுறா பெரியதாக, நீளமாக இருந்திருக்கிறது. இந்த மிகப்பெரிய சுறாவின் எடையுடன் ஒப்பிடும்போது அம்மணி உழுவை சும்மா காற்றடைந்த பலூன் மாதிரியானது. அதாவது எடை குறைந்தது.
அதுபோல தற்போதைய நம்காலத்து பெருஞ்சுறாவை விட பெரும்பல்லன் சுறா மூன்று மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது.
பெரும்பல்லன் எனப்படும் மேகலோதன் சுறா, பெருஞ்சுறாவின் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. பெரும்பல்லன் தனித்துவமான ஓர் இனத்தைச் சேர்ந்த அரக்கச் சுறா. உலகில் தென் முனையான அண்டார்ட்டிகா பனிக்கண்ட கடற்பகுதியைத் தவிர்த்து உலகின் அனைத்துக் கடல்களிலும் பெரும்பல்லன் சுறா பரவி வாழ்ந்திருக்கிறது.
பெரியவர் இவர்தான்..
பெரும்பல்லன் சுறாவின் பல் 7 அங்குல(!) நீளம் கொண்டது. பலவரிசைப் பற்கள் கொண்ட பெரும்பல்லன் சுறாவின் வாயில் ஒரு வரிசையில் மட்டும் 276 பற்கள்(!) இருந்திருக்கின்றன. ஆவென வாயைத் திறந்தால் அந்தச் சுறாவின் வாயின் அகலம் மட்டும் 3.4 மீட்டர் வரை விரிந்திருக்கிறது. அப்படி விரிந்தால் ஒரே விழுங்கில் இரண்டு மனிதர்களை பல்படாமல் அந்த மெகா சுறாவால் விழுங்க முடியும்.
சுறாக்களுக்கு அவற்றின் வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்துகொண்டே இருப்பது வழமை. சுறாவின் வாய்க்குள் கன்வேயர் பெல்ட் போல பலவரிசைப் பற்களின் அணிவரிசை தயாராகக் காத்திருக்கும். ‘விழவிழ எழுவோம்’ என்பதுபோல பழைய பற்கள் விழவிழ, அவற்றின் இடத்தைப் புதிய பற்கள் பிடித்துக் கொள்ளும். அப்படிப் பார்த்தால் பெரும்பல்லன் சுறா அதன் வாழ்நாளில் மொத்தம் 40 ஆயிரம் பற்களைக் கொண்டிருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்பல்லன் சுறாவின் பற்கள் அண்டார்ட்டிக் கடற்பகுதி தவிர்த்து உலகம் முழுவதும் இன்றும் கிடைத்து வருகிறது. மற்ற சுறாக்களின் பற்களைப் போலவே பெரும்பல்லன் சுறாவின் பற்களும் கடலடியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுகின்றன. சிலஇடங்களில் அவை குவியலாகக் காணப்படுகின்றன.
சரி. இந்த பெரிய சுறாவின் இரை என்ன? இறைச்சித் தின்னியான இந்த அரக்கச் சுறா, திமிங்கிலங்கள், இதர பெரிய சுறாக்களை வேட்டையாடித் தின்றிருக்கிறது. சிறுதிமிங்கிலம், ஓங்கல், ஆவுளியா, கடற்சிங்கம் போன்றவற்றை சும்மா சிற்றுண்டி போல உண்டிருக்கிறது. இந்த பெரிய சுறாவின் ஒருநாள் உணவுத்தேவை ஒரு டன்!
அது போகட்டும். பெரும்பல்லன் சுறா இனம் எப்படி அழிந்தது? பெரும்பல்லன் சுறா உலகம் முழுவதும் எல்லா கடல்களிலும் பரவி வாழ்ந்தது என்று முன்பே கூறினோம் அல்லவா? இது வெப்பம் நிறைந்த கடல்களில் அதிகம் வாழ்ந்திருக்கிறது. குளிர் ஆகாது என்பதால் துருவக்கடற்பகுதிகளை பெரும்பல்லன் சுறா தவிர்த்து வந்திருக்கிறது.
3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிளையோசின் காலத்தில் உலகம் குளிர ஆரம்பித்திருக்கிறது. கடலும் ஜில்லென குளிர்ச்சி அடையத் தொடங்கியதால் பெரும் பல்லனின் உயிர்ச்சூழல் ஆட்டம் காண ஆரம்பித்தது. குளிர்ந்த கடல்களால் இரை உயிர்களும் அருகத் தொடங்கியிருக்கின்றன. இதனால் பெரும்பல்லன் சுறாக்களுக்கு இரை பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
சுறாக்கள் அவற்றின் குட்டிகளை கரையோரத்தில் ஈனுவதே வழக்கம். கரைப் பகுதிகளில் உயிர்க்காற்று அதிகம் என்பதுடன், அங்கே கொன்றுண்ணி உயிர்களும் குறைவு என்பதால் குட்டிகள் கரைப்பகுதிகளில்தான் ஆபத்தின்றி வாழ முடியும்.
இதேப்பழக்கத்தை பெரும்பல்லன் சுறாவும் கையாண்டிருக்கிறது. ஆனால், பனிஉருகி கடல்நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த சுறா இனத்தின் குட்டிகள், பல்லுள்ள திமிங்கிலங்களுக்கு இரையாகத் தொடங்கியிருக்கின்றன.
இதற்கிடையே பெரும்பல்லன் சுறா இனத்துக்கு இன்னொரு வில்லனும் கடலில் முளைத்திருக்கிறார். அவர் இப்போது நம்காலத்தில் வாழும் பெருஞ்சுறாவின் (Great White) மூதாதை. பெருஞ்சுறாக்கள் ஒருகாலத்தில் பசிபிக் கடலில் மட்டுமே வாழ்ந்திருக்கின்றன. பிறகு இவை பல்வேறு கடல்களுக்குப் பரவி, பெரும்பல்லன் சுறா இனத்துக் குட்டிகளைத் தின்று தீர்த்திருக்கின்றன. அடுத்த தலைமுறையை அழித்திருக்கின்றன.
எவ்வளவு பெரிய பல்!
கடல்கள் அக்காலத்தில் குளிர்ந்ததால் 43 விழுக்காடு ஆமையினங்களும், 35 விழுக்காடு கடற்பறவைகளும்கூட அழிந்திருக்கின்றன. குளிர்காரணமாக கடலில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்தப் போட்டியில் பெருஞ்சுறாக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரும்பல்லன்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
பெரும்பல்லன் சுறா இனம் அழிந்து இன்று புதைபடிவமாக (Fossil) மட்டுமே அவை கிடைக்கின்றன. பெருங்கடலின் அடி ஆழங்களில் இன்றும்கூட ஒன்றிரண்டு பெரும்பல்லன் சுறாக்கள் உயிர் வாழக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பெரும்பல்லன் சுறாக்களைப் (Megalodon Shark) பற்றி ஏராளமான புத்தகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வந்திருப்பது தனிக்கதை.