Sunday, 24 November 2019


சுறாவுக்கு வயது 392!

கிரீன்லாந்து சுறா
ஆமைகள்தான் ஏதோ அதிக காலம் உயிர் வாழும் என்று படித்திருக்கிறோம். ஆனால், அந்த உலக சாதனையை கிரீன்லாந்து சுறாக்கள் ‘அசால்டாக’ முறியடித்து விடக்கூடியவை.
ஆம். கிரீன்லாந்து சுறாக்கள் சராசரியாக 272 ஆண்டுகள் முதல் 512 ஆண்டுகள் வரை உயிர் வாழ்பவை. பொதுவாக 400 ஆண்டுகள் வரை இவை உயிர்வாழ்ந்து இரை தேடும். இணையைத் தேடி இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
ஆர்ட்டிக் வட துருவப்பகுதி பனிக்கடலில் வாழும் 28 கிரீன்லாந்து வகை சுறாக்களை ஆய்வறி ஞர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஒரு சுறா வின் வயது குறைந்தது 392 என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 150ஆவது வயதில்தான் அந்த சுறா பருவம் அடைந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
சுறாவின் வயதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்வி எழும்பலாம். கதிரியக்க கரிமக் காலக்கணிப்பு எனப்படும் ரேடியோ கார்பன் முறையை பயன்படுத்தி அந்த சுறாவின் வயதை ஆய்வறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கிரீன்லாந்து சுறாக்களின் விழி ஆடிகளில் அவற்றின் வாழ்நாள் முழுவதும் புதிய படலங்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கும். மரத்தின் வளையங்களை வைத்து மரத்தின் வயதைக் கண்டுபிடிப்பது போல கிரீன்லாந்து சுறாவின் விழியாடியில் உள்ள படலங்களை வைத்து அதன் வயதைக் கணக்கிட்டு விடலாம்.
‘தூங்கும் சுறா’
இந்த கணக்கின்படி பார்த்தால் மேற்படி சுறா கி.பி.1505ம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும். அதாவது. பூமி போன்ற கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன என்பதைக் கண்டுபிடித்த அறிஞர் கலிலியோ பூமியில் பிறப்பதற்கு முன்பே பிறந்து விட்ட மூத்த சுறா இது.
இந்த பூவுலகத்தில் வாழும் முதுகெலும்புள்ள உயிர்களில் அதிக காலம் உயிர்வாழ்வது கிரீன் லாந்து சுறாக்கள்தான்.  நடுங்கவைக்கும் மைனஸ் ஒரு டிகிரி முதல் மைனஸ் பத்து டிகிரி தட்பவெப்பநிலையில் இந்த சுறாக்கள் வாழ்கின்றன. கடலடியில் 7 ஆயிரத்து 218 அடி ஆழத்துக்கு கிரீன்லாந்து சுறாக்களால் முக்குளிக்க முடியும். இவற்றின் எடை ஏறத்தாழ ஒரு தொன்! (ஆயிரம் கிலோ). கடலில் வெள்ளைச் சுறாவுக்கு அடுத்தபடி, இரண்டாவது மிகப்பெரிய கொன்றுண்ணி சுறா கிரீன்லாந்து சுறாதான்.
கிரீன்லாந்து சுறாக்கள் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட ஒரு சென்டிமீட்டர்தான் வளரும். ஏறத்தாழ 21 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்ட சுறாக்கள் இவை.
கிரீன்லாந்து சுறாக்களில் பல சுறாக்கள் விழிகுருடானவை. இவற்றின் விழிப்படலங்களில் பிங்க் நிற ஒட்டுண்ணிகள் படர்வதால் இவை பார்வைத்திறனை இழந்துவிடுகின்றன. ஆர்ட்டிக் கடலின் குளிர்ச்சியையும், அழுத்தத்தையும் தாங்க வேண்டியிருப்பதால் கிரீன்லாந்து சுறாக் களின் உடலில் இயல்பாகவே ஒரு நச்சுத்தன்மை உண்டு. ஆம். இவற்றின் இறைச்சி நச்சுத் தன்மை நிறைந்தது.
இருந்தாலும்கூட ஐஸ்லாந்து நாட்டில் இந்த வகை சுறாக்களை உண்ணும் பழக்கம் இருக்கிறது. கிரீன்லாந்து சுறாவின் இறைச்சியை 4 முதல் 5 மாதங்களுக்குத் தொங்கவிட்டால் அதன் நச்சுத் தன்மை நீங்கிவிடும்.
கிரீன்லாந்து சுறாக்கள் பெரிய வலிமை வாய்ந்த சுறாக்கள் என்றாலும் மனிதர்களை இவை தாக்குவதில்லை. கடலில் அழுகிய இறைச்சிகளை இது தின்று வாழும். வேட்டையாடியும் உண்ணும்.
இரையாகும் சீல்
கிரீன்லாந்து சுறாக்கள் கடலின் அடியாழத்தில் மிக மெதுவாக  நீந்தக்கூடியவை. மணிக்கு 0.76 மைல் அல்லது ஒரு நொடிக்கு 0.3 மீட்டர் வேகத்தில் இவை மெதுவாக நீந்தும். இவ்வளவு மெதுவாக நீந்துவதால் ‘தூங்கும் சுறா’ என்றுகூட இதை அழைப்பார்கள்.
கிரீன்லாந்து சுறாக்களைப் படம் பிடிப்பதோ, ஆய்வு செய்வதோ எளிதல்ல. 1995ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக இந்த வகை சுறாவை படம்பிடிக்கவே முடிந்தது. பனிநிறைந்த ஆர்ட்டிக் கடல் பகுதியில் ஆண்டுமுழுவதும் இவை குளிரைத் தாங்கிக் கொண்டு வலசை போகாமல் வாழ்கின்றன. கொல்லக்கூடியடி பெரிய எதிரிகள் எதுவும் கிரீன்லாந்து சுறாக்களுக்கு கிடையாது.
பெயரில் கிரீன்லாந்து என்று இருப்பதால் இந்தவகை சுறாக்கள் கிரீன்லாந்துப் பகுதியில் மட்டும்தான் வாழ்கின்றன என்று நினைத்து விடக் கூடாது. ஐஸ்லாந்து, நார்வே, கனடா பகுதி குளிர்க்கடல்களிலும் இவை வாழ்க்கை நடத்துகின்றன.
எல்லாவகை சுறாக்களையும் போல கிரீன்லாந்து சுறாக்களும் இப்போது அழிவின் விளிம்பில் இருப்பதுதான் வேதனைக்குரிய செய்தி.

Friday, 15 November 2019


தூண்டில் மீன் (Angler Fish)

தூண்டில் மீன்
ஒரு பூவே இங்கு பூவைத்துக் கொள்கிறது’, ‘ஒரு போண்டாவே இங்கு போண்டா தின்கிறதுஎன்பது மாதிரியான வசனங்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதுபோல, ‘ஒரு மீனே இங்கே தூண்டில் போடுகிறதுஎன்ற வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீன்களுக்கு நாம் தூண்டில் போடுவது இருக்க, மீனே தூண்டில் போட்டு மற்ற மீன்களை கவர்கிறது என்றால் அது வியப்பூட்டும் தகவல்தான் இல்லையா?
ஆம். நீலக்கடல்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, 200 வகையான தூண்டில் மீன்கள் (Angler Fishes) இருக்கின்றன.
தூண்டில் மீன்களில் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று கரைக்கு அருகில், ஆழம் குறைந்த பகுதிகளில் வாழும் தூண்டில் மீன்கள். இவை தரையோடு தரையாக தவழ்ந்து செல்லக் கூடியவை. மற்ற வகை தூண்டில் மீன்கள் வெளிச்சம் துளிகூட இல்லாத ஆழ்கடல்களில் வாழக் கூடியவை. கடலின் ஆழ்ந்த நடுப்பகுதியில் இவை தடுமாறிய படி நீந்தக்கூடியவை.
இந்த ஆழ்கடல் தூண்டில் மீன்கள், 3 ஆயிரம் அடியில் இருந்து 6 ஆயிரத்து 600 அடி வரை அதாவது ஏறத்தாழ 2 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை காணப்படக்கூடியவை. இப்படி கடல்மேற் பரப்பில் இருந்து கிலோ மீட்டர் கணக்கான ஆழத்தில் சூரியஒளி துளிகூட இருக்காது. உறைய வைக்கும் குளிர் இந்த ஆழத்தில் நிலவும். இதுபோன்ற சூழலில்தான் ஆழ்கடல் தூண்டில் மீன்கள் வாழ்கின்றன.
ஆழ்கடல் தூண்டில் மீன்கள் கூடைப்பந்து போன்ற தடித்த உடலைக் கொண்டவை. கருஞ் சாம்பல் அல்லது கரும்பழுப்பு நிறம் கொண்டவை. இந்த நிறம் காரணமாக இருள்சூழ்ந்த கடலில் மற்ற மீன்களின் கண்களுக்கு இது தென்படாது.
பெரிய தலையும், பிறைநிலா போல விரிந்த வாயும், அந்த வாய்நிறைய கூரிய உள்நோக்கி வளைந்த ஒளிவீசும் கொக்கிப் பற்களும் ஆழ்கடல் தூண்டில் மீன்களின் மற்ற அடையாளங்கள். மென்மையான சதையும், சிறிய கண்களும் இந்த வகை மீன்களின் மற்ற அடையாளங்கள்.
ஆழ்கடல் தூண்டில் மீன்களின் மிக முதன்மை உறுப்பு, அதன் தலைமேல் உள்ள ஒரு கொம்பு போன்ற சதைதான். ஆழ்கடல் தூண்டில் மீனின் முள்நிறைந்த ஒரு முதுகுத்தூவிதான் பரிணாம விதிப்படி காலப்போக்கில் பையப்பைய உருமாறி, இப்படி ஒரு தூண்டில்போன்ற அமைப்பாகியிருக்கிறது.
ஒளிரும் தூண்டில்
சதைப்பற்றுள்ள இந்த கொம்பின்நுனியில் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும். அதனால் இந்த தூண்டில்கொம்பின் நுனி பளபளவென மின்மினிப்பூச்சியைப் போல ஒளிவிடும். இந்த கொம்பை இடம் வலமாகவோ அல்லது முன்னும்பின்னுமாகவோ எப்படி வேண்டுமானாலும் தூண்டில் மீனால் திருப்ப முடியும். உடலை அசைத்து அதன்மூலம் கொம்புநுனியில் வெளிச் சத்தை ஒளிரச் செய்யவும் முடியும். அணைக்கவும் முடியும்.
தூண்டில் மீனின் இந்த பசுநீல நிற ஒளியை கடலின் அடியில் பார்க்கும் எந்த ஒரு மீனும் அந்த ஒளியால் கவரப்பட்டு தூண்டில் மீனை நெருங்கி வரும். அவற்றின் கவனம் முழுக்க முழுக்க ஒளியின் மீதே இருப்பதால் அருகில் உருமறைத்து வாயைப் பிளந்தபடி ருக்கும் தூண்டில் மீன் இரை மீனின் பார்வையில் படாது.
இப்படி அருகில் வரும் இரைமீன், போதிய அளவுக்கு நெருங்கி வந்ததும் தூண்டில் மீன் திடீர்ப் பாய்ச்சலாகப் பாய்ந்து இரை மீனை அப்படியே விழுங்கிவிடும். பெரிய வாய், பிளந்த தாடைகள், காரணமாக தன்னை விட இருமடங்கு பெரிய இரையைக்கூட தூண்டில் மீன் களால் விழுங்க முடியும். வாய் நிறைய கூரிய கொக்கிப்பற்கள் இருப்பதால் சிக்கிய மீனால் வெளியே தப்பவும் முடியாது.
இந்த வெளிச்ச தூண்டில்,  இரையை இப்படி ஏமாற்றி அருகில் அழைத்து அவற்றை விழுங்கு வதற்கு மட்டுமல்ல இணை சேருவதற்காக ஆண் மீனை அருகில் அழைக்கவும் பயன்படுகிறது.
தூண்டில் மீன்களில் பெண்மீன்களுக்கு மட்டுமே இப்படி ஒளிரும் தூண்டில் உண்டு. அவர்கள் மட்டும்தான் ‘கடலடியில் கைவிளக்கேந்திய காரிகைகள்’. ஆண் மீன்களுக்கு ஒளிரும் தூண்டில் இல்லை.
அதுமட்டுமல்ல, தூண்டில் மீன்களில் பெண்மீன்களை விட ஆண்மீன்கள் மிகவும் சிறியவை. அவற்றின் உருவம் கூட பெண்மீன்களைப் போல இருக்காது. பெண்மீன்கள் அவற்றின் வகைக் கேற்ப ஓரடி முதல் 3.7 அடி நீளம்வரை இருக்கும். ஆனால், ஆண்மீன்கள் அவற்றிலும் சிறியவை. கருப்பு நிற விரல் போன்ற உருவம் கொண்டவை.
ஆண்மீன்களிடம் தூண்டில் இல்லை என்பதால் அவற்றால் சொந்தமாக இரை தேட முடியாது. ஆகவே, பருவம் அடைந்தவுடன் கடலடியில் ஆண்மீன் செய்யும் ஒரே வேலை பெண் மீனைத் தேடுவதுதான். இருட்டில் தேடித்தேடி, பெண்மீனின் தூண்டில் முனை வெளிச்சத்தைக் கண்டு ஆண்மீன் பெண்மீனை நெருங்கும்.
தன் கூரிய சிறுபற்களால் பெண்மீனின் தோலைக்கடித்து ஒருவகை நொதிப்பு ஒன்றை ஆண் மீன் சுரக்கும். அந்த நொதிப்பு, பெண்மீனின் உடலுக்குள் ஊடுருவி, இரு மீன்களையும் ஒட்டி ஒன்றாக்கி விடும். இரு மீன்களின் ரத்தநாளங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்ளும். இதனால் பெண்மீன் உட்கொள்ளும் இரையின் ஊட்டத்தை ஆண்மீனும் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வளவு பெரிய வாய்?...
இப்படி ஒட்டுண்ணி போல உயிர் வாழும் ஆண்மீன் நாளடைவில் தனது கண்களை இழந்து விடும். அதன்பிறகு மெல்ல மெல்ல உள்ளுறுப்புகளையும் ஒவ்வொன்றாக அது இழக்கத் தொடங்கும். முடிவில் சுவையறியும் திறனைத் தவிர வேறு எதுவும் ஆண்மீனுக்கு மிஞ்சாது.
தனித்து இயங்க முடியாமல் பெண்மீனுடன் ஒட்டி உறவாடியபடியே ஆண்மீன் பயணிக்கும். ஒரே வேளையில் 6 ஆண்மீன்களை சுமந்தபடி பயணிக்கும் பெண்மீன்களும் உள்ளன.
சரி! ஆண் மீனின் பயன்தான் என்ன? பெண் மீன் வெளியிடும் முட்டைகளை கருவாக்குதல் மட்டுமே ஆண் மீனின் வேலை. இதற்காக விந்து தொழிற்சாலை போல ஆண்மீன் செயல்படும். கருவாகும் முட்டைகள் மிதந்து கடல்மேற்பரப்புக்கு வந்து கவுர் எனப்படும் மிதக்கும் நுண்ணுயிர்களை உண்ணும். பின்னர் உரிய காலத்தில் கடல்அடிஆழத்தில் அவை மீண்டும் மூழ்கி தூண்டில் மீன்களாக முழுவடிவம் பெறும்.


Wednesday, 6 November 2019


ஜெல்லி பெருகும் காலம்

சொறிமீன்..உயிருள்ள வலை..
உலகம் சுற்றும் வாலிபன்படத்தில் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலேஎன்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘செர்ரி பழத் துக்குத் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலேஎன அந்தப் பாடலின் அடுத்த வரி வரும்.
கொண்டாட்டம் இருக்கட்டும். லில்லி மலருக்குப் பதிலாக ஜெல்லி (Jelly) எனப்படும் சொறிமீன்கள் திடீரென அதிகரித்தால் பெருங்கடல்களுக்கு உண்மையில் அது பெரும் திண்டாட்டமாகி விடும்.
சொறிமீன்களை உங்களுக்குத் தெரியும்தானே? காற்றடைத்த கண்ணாடி பலூன்கள் போல கடல்களில் மிதந்து நீந்தும் அழகான உயிரினம் இது. இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 650 மில்லியன் ஆண்டுகளாக, உலகக் கடல்களில் சொறிமீன்கள் சுகமாக நீந்தி வருகின்றன.
பார்வைக்கு அழகாக இருந்தாலும் சொறிமீன்கள் ஆபத்தானவை. இவற்றின் மேல் உள்ள சின்னச்சின்ன முட்கள் நம்மீது பட்ட மாத்திரத்தில் நம்மை பாதிக்கக் கூடியவை. அவ்வளவு ஏன்? பாக்ஸ் (Box) ஜெல்லி பிஷ் எனப்படும் பெட்டிவடிவ சொறிமீனின் நஞ்சு, நல்லபாம்பின் கடி அளவுக்கு நம்மைப் பாதிக்கக் கூடியது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல நூறு உயிர்களை சொறிமீன்கள் பலிகொண்டு வருன்றன.
கிரேக்க புராணத்தில் வரும் மெடுசா என்ற பெண்ணுக்கு தலைமுடிகள் அனைத்தும் பாம்பு களாக நெளியும் இல்லையா? இந்த மெடுசா என்ற பயங்கர கற்பனைக்கு அடியெடுத்துக் கொடுத்தது ஒரு சொறிமீனாகத்தான் இருக்க வேண்டும்.
கண்ணாடி மேனி..
அதுபோல வெள்ளைக்காரன் தொப்பி என தமிழில் அழைக்கப்படும் போர்த்துக்கேய போர்க் கப்பல் (Portuguese man of War) என்ற சொறிமீன், 165 அடி நீள உணர்விழையைக் கொண்டது. மிகவும் ஆபத்தானது.
பளிங்கு போல, அழகாக ஊடுருவி பார்க்கும் வகையில் இருக்கும் சொறிமீன்கள், பார்வைக்கு நலிவான உயிர்களைப் போலத் தோன்றும். ஆனால், உண்மையில் இவை மிகத்திறன் வாய்ந்த கடல் உயிர்கள்.
இந்த சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு கடலின் எந்தவிதமான தட்பவெப்ப நிலையையும் இவை தாக்குப்பிடித்து வாழக்கூடியவை. அது அமிலத்தன்மை அல்லது உப்புத் தன்மை அதிகம் வாய்ந்த கடலோ,  ஒளியில்லாத இருள் நிறைந்த கடலோ,  குளிர்ச்சியோ, அதிக வெப்பமோ நிலவும் கடலோ, எதுவாக இருந்தாலும் சரி, சொறிமீன்களுக்கு அதுபற்றி கவலையில்லை. அவை எங்கும் வாழக் கூடிய திறமையுள்ளவை.
உலகின் அனைத்துக் கடல்களிலும் எல்லாவிதமான ஆழங்களிலும் சொறிமீன்கள் வாழ்கின்றன.
சொறிமீன்கள் அவற்றின் முட்டைகளையும் விந்துக்களையும் கடலில் செலுத்தக் கூடியவை. கருவுற்ற முட்டைகள் கடலடியில் அமிழ்ந்து ஜெல்லிக் குஞ்சுகளாக உருவெடுக்கும்.
சொறி மீன்கள் அபாரத் திறமை வாய்ந்தவை. ஒருவகை சொறிமீன் காயம்பட்டால், தன்னை நகலெடுத்து குளோனிங் முறையில் தன்னைப்போல மற்றொரு உயிரை உருவாக்கி மீண்டும் உயிர்த்தெழக் கூடியது.
இத்தனைக்கும் சொறிமீன்கள் மூளையற்ற உயிரினங்கள். உடலில் 95 முதல் 98 விழுக்காடு வரை நீரை மட்டும் கொண்ட உயிர்கள் இவை.
தரைதட்டிய போர்த்துக்கேய போர்க்கப்பல்
சொறிமீன்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கடல்களில் பலகோடியாக பல்கிப் பெருகுவதுண்டு. முன்பு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொறிமீன்களின் இந்தத் திடீர் பெருக்கம் ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போதோ சூழல்சீர்கேடு மற்றும் இதர சில காரணங்களால் அடிக்கடி, ஏன்? ஆண்டுக்கு ஆண்டு கூட சொறிமீன்களின் பெருக்கம் ஏற்பட்டு வருகிறது.
‘பெருவெடிப்பு’ (Big Bang) போல சொறிமீன்கள் இப்படி திடீரென்று பல்கிப் பெருக என்ன காரணம்? ஒன்று அதிக மீன்பிடிப்பு. சொறிமீன்களின் எதிரிகளான சூரை (Tuna) மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும், சொறி மீன்களின் இன்னொரு எதிரிகளான ஆமைகள் தவறு தலாக மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதாலும் சொறி மீன்களின் கொட்டம் கடலில் அதிக மாகிறது.
கவுர் (பிளாங்க்டன்) எனப்படும் நுண்மிதவை உயிர்களை உண்ணும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதால், கவுர்களின் எண்ணிக்கை கடலில் அதிகமாகிறது. இவற்றை அதிக அளவில் சொறிமீன்கள் உண்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
கடலில் உள்ள கவுர் (பிளாங்க்டன்) எனப்படும் நுண்மிதவை உயிர்கள் அளவுக்கு அதிகமானால் கடல்நீரில் உயிர்க்காற்று குறையும். இதனால் மீன்களும், கடல்உயிர்களும் வாழ முடியாத மரணப் பகுதிகள் (Dead Zones) கடலில் உருவாகும். ஆனால், இந்த மரணப் பகுதிகளால் சொறி மீன்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை எங்கும் வாழக்கூடியவை.
இழுவை வலைகளால் கடலின் பவழங்கள், கடற்பஞ்சு உயிர்கள், கடற்புழுக்கள் என அனைத்தும் கண்டபடி வாரியிழுக்கப்படுவதால், கடலில் சொறிமீன்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சொறிமீன்கள் தங்கள் எண்ணிக்கையை பன் மடங்காக ஆக்கிக் கொள்கின்றன.
பாராசூட் அல்ல...
நெகிழி குப்பைகள் கடலையும், கடல் உயிர்களையும் பாதித்தாலும் சொறிமீன்களுக்கு அவற்றால் பாதிப்பு இல்லை. நெகிழி குப்பைகள் இருக்கும் இடத்தில்தான் சொறிமீன்கள் அதிக அளவில் தங்கி முட்டையிடுகின்றன.
கடலில் ஏற்படும் சொறிமீன்களின் திடீர்ப்பெருக்கம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வலைகளில் அதிக அளவில் சொறிமீன்கள் சிக்குவதால் ஜப்பானில் மீன்பிடிப்புத் தொழில் தடைபடுகிறது. ஸ்வீடன் நாட்டு அணுஉலைகளுக்கு கடல்நீரை ஏற்றும் குழாய்களில் சொறிமீன்கள் சிக்குவதால் அங்கே மின்னுற்பத்தி பாதிக்கப்படுகிறது. பிரான்ஸ் போன்ற மத்தியத்தரைக் கடல் நாடுகளில் உல்லாசக் கடற்கரைகளில் சொறிமீன்கள் ஒதுங்கு வதால் அங்கு மக்கள் நடமாடத தடை விதிக்கப்பட்டு சுற்றுலா வருவாய் குறைகிறது.
சொறிமீன்களை மனிதர்கள் கொல்ல முயன்றால், அவை அதிக அளவில் முட்டைகளையிட்டு விட்டு இறந்து போகும்(!) இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து திகைத்து நிற்கும் கடல் ஆய்வாளர்கள், சொறிமீன்களை அதிகஅளவில் உணவாக, மருந்தாகப் பயன் படுத்த முடியுமா என ஆராய்ந்து வருகிறார்கள்.

Saturday, 2 November 2019


பருந்தலகு ஆமை, அழுங்காமை (Hawks bill turtle)

பருந்து போன்ற அலகு
பருந்தலகு ஆமை எனப்படும் அழுங்காமையைப் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உள்ளது. இருப்பினும் புதிய தரவுகளுடன் இந்தப் புதிய பதிவு.
பருந்தலகு ஆமை, எலிமூஞ்சி ஆமை, ஆமையோட்டு ஆமை (Tortoise Shell Turtle)… இப்படிப் பல பெயர்களில் அழைக்கப்படும் அழுங்காமை வண்ணமயமான ஓடு கொண்டது. இந்த ஆமையோடு, கடலின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப நிறம் மாறக் கூடியது.
பருந்தலகு ஆமை தனித்து வாழக்கூடியது. இரண்டு அல்லது இரண்டரை அடி நீளமே உள்ள இந்த ஆமை வேகமாக நீந்தக்கூடியது.
ஆமைகளில் மிக வேகமாக நீந்தக்கூடிய ஆமை இதுதான்.

கடலில் மிகநீண்டதொலைவுக்கு ஒரே மாதத்தில் 1800 கிலோ மீட்டர் தொலைவு வரை இது வலசை செல்லும். ஆனால் 65 அடி ஆழத்துக்கு கீழே இது காணப்படாது.
அழுங்காமை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். 50 ஆண்டுகள் வரை (மனிதர்கள் அனுமதித்தால்) உயிர்வாழும்.
வேகமான நீச்சல்..
பருந்தலகு ஆமை எனப்படும் அழுங்காமை, அதன் அலகால் பார்மீதுள்ள சிறிய கண்ணாடி ஊசிகள் போன்ற ஸ்பாஞ்ச் என்ற உயிரை அகற்றி உண்ணும். சொறிமீன் (இழுதுமீன்), கடல் சாமந்திகளுடன் பவழப்பாறைகளின் சிறுதுண்டுகளையும் இது கொறித்துத் தின்னும்.
அழுங்காமையின் இந்த செயல் மற்ற பார்வாழ் மீன்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்கிறது.
இந்த வகை ஆமைக்குப் பற்கள் கிடையாது என்ற நிலையில் இதன் அலகே இரையுண்ண இதற்கு மிகவும் பயன்படுகிறது. பார் இடுக்குகளில் அலகை நுழைத்து இரைகளை இது தேடித் தின்னுகிறது.
அழகான ஓடு!
ஆண்டுக்கு 1,200 வரை ஸ்பாஞ்ச்சுகளை அழுங்காமை உண்பதால் அவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு பவழப்பார்களின் சமநிலை பாதுகாக்கப்படுகிறது. ஸ்பாஞ்ச்சு களுக்கு அழுங்காமையைத் தவிர இயற்கையாக வேறு எதிரிகள் யாரும் இல்லை. மற்ற உயிரினங்கள் இந்த கண்ணாடி ஊசிகள் போன்ற உயிரினத்தை தின்னத் தயங்கும் நிலையில், அழுங் காமை ஒன்றே இதன் ஒரே கொல்லுயிராக இருந்து, பார்களைக் காக்கிறது.
ஸ்பாஞ்ச் எனப்படும் ஊசி உயிரினத்தின் நஞ்சு, அழுங்காமையை ஒன்றும் செய்யாது. ஆமை உண்ணும் நஞ்சு அதன் உடலில் பத்திரமாகச் சேகரித்து வைக்கப்படுகிறது.
ஆமைகளில் மிகமிக அழகான ஓடு கொண்ட ஆமை அழுங்காமைதான். இதன் செம்பழுப்பு நிற மேல்ஓடு, கூழாங் கற்கள் பதித்த கூரை போலவும், அடிப்புற ஓடு பொன்போலவும் திகழும்.
ஊர்வன இனத்தில் ஒளிரும் தன்மையுடன் (biofluorescent) கூடிய ஒரே உயிரினம் அழுங்காமைதான்.
மஞ்சள், பிங்க், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, பர்ப்பிள் நிறங்களில் அழுங்காமையால் ஒளிர முடியும்.

Friday, 1 November 2019

பலத்த கடி!

தலையில் கடி! தப்பிய சுறா!

அக்டோபர் 4ஆம்தேதி!
அட்லாண்டிக் கடலின் வடபகுதியில், நோவா ஸ்காஷியா அருகே ஒரு பெரிய ஆண் வெள்ளைச் சுறாவை ஆய்வாளர்கள் உயிருடன் பிடித்தனர். 528 கிலோ எடையுள்ள சுறா அது. அதன் நீளம் 12 அடி 9 அங்குலம். (3.8 மீட்டர்).
அந்தச் சுறாவின் தலையில் இருந்த இரண்டு காயங்கள் ஆய்வாளர்களை அதிர வைத்து விட்டன. அவ்வளவு பெரிய சுறாவின் தலையில் பலமான இரு கடிகாயங்கள். கீழ்த்தாடைப் பகுதி யில் இருந்த காயம் நாள்பட்ட காயம். அது நன்கு ஆறியிருந்தது. தலைமேல் இருந்த காயம் புத்தம் புதியது.
பிடிபட்ட ஆண் சுறாவுக்கு விமி என பெயரிடப்பட்டது. கழுத்தில் அடையாளப்பட்டியுடன், விமி எங்கே சென்றாலும் அதை கண்டுபிடிக்க வசதியாக டிராக்கர் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டது. அதன்பிறகு விமி கடலில் விடப்பட்டது.
அவ்வளவு பெரிய விமியை யார் கடித்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் ரொம்ப நேரம் மண்டையைப் போட்டுக் குடைந்து கொள்ளவில்லை.
கடலின் மிகப்பெரிய கொல்விலங்கான ஒரு வெள்ளைச் சுறாவை வேறு யார் கடித்திருக்க முடியும்? வேறு ஒரு வெள்ளைச்சுறாதான் கடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
அதிலும் விமியின் தலையில் இருந்த கடி, கடித்த விலங்கின் பல்அமைப்பை பளிச்செனக் காட்டியபடி இருந்தது. அந்த பல்பதிவுத் தடத்தை வைத்து, விமியைக் கடித்தது, அதைவிட பெரிய மற்றொரு வெள்ளைச் சுறாதான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துவிட்டனர்.
விமி என்ற வெள்ளைச்சுறா
வெள்ளைச் சுறாக்களின் உலகம் வன்முறை நிறைந்த உலகம். உணவுக்காக சில வேளைகளில் வெள்ளைச் சுறாக்களுக்குள் சண்டை மூளும்.
சிலவேளைகளில் பெண் மீனுடன் யார் உறவு கொள்வது என்பதில் ஆண் சுறாக்களுக்குள் போட்டி ஏற்பட்டு அது சண்டையாக உருமாறும். விமி அப்படி ஒரு இணை சேர்க்கைப் போட்டியில் இறங்கி, அதனால் தான் அதை விட பெரிய ஆண் சுறாவிடம் கடி வாங்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய் வாளர்கள்.
வெள்ளைச் சுறாக்களில், உடல்முழுக்க கடிகாயங்களுடன் திரியும் சுறாக்கள் அதிகம். சில சுறாக்கள் பிய்ந்து போன முதுகுத்தூவிகளுடன் சுற்றித் திரியும். ‘விழுப்புண்கள்’ இல்லாத வெள்ளைச் சுறாக்களைப் பார்ப்பது சற்று அரிதானது.
அதுபோல கருங்குழவி ஓங்கல்கள்  எனப்படும் கில்லர் வேல்களாலும் (Killer Whale) வெள்ளைச் சுறாக்களுக்கு ஆபத்து நேர்வதுண்டு.
ஆழ்கடல் அறிவியல் தற்போது அநியாயத்துக்கு முன்னேறி விட்ட நிலையில், சுறாவின் ‘லப்டப்’ இதயத்துடிப்பைக் கூட அல்ட்ரா சவுண்ட் கருவிகள் மூலம் ஆய்வாளர்கள் இப்போது அறிந்து கொள்கிறார்கள்.
பதற்றமற்ற  வேளையில் சுறாவின் இதயம் நிமிடத்துக்கு பத்துமுறை துடிக்குமாம். அதுபோல வெள்ளைச்சுறாக்கள் பெருங்கடல்களில் மிக நீண்ட தொலைவுக்கு வலசை செல்வதும், கடலின் அடியில் 1,128 மீட்டர் (3,700 அடி) ஆழம் வரை அவை செல்வதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
வெள்ளைச் சுறாக்கள் சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட, தனிப்பட்ட வெள்ளைச் சுறாவை கூட்டமாக சேர்ந்து குதறுவதும் உண்டு. அண்மையில் ஆஸ்திரேலியாவில் ஒரு வெள்ளைச் சுறா தூண்டிலில் பிடிபட்டது. அதை வெளியே எடுத்தபோது அதன் தலை மட்டுமே(!) வெளி வந்தது. உடலைக் காணவில்லை. அதே இனத்தைச் சேர்ந்த சுறாக்கூட்டம் ஒன்று, அந்த சுறாவின் உடலைத் தின்று தீர்த்து விட்டது தெரிய வந்தது.
அந்த வகையில் பார்த்தால் நம் விமியை அதிர்ஷ்டக்கார சுறா என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பெரிய அண்ணன்கள் பலருடன் போட்டி போட்டும் தலையில் மட்டும் கடி வாங்கிக் கொண்டு தப்பியிருக்கிறது நமது விமி.