Thursday, 30 May 2019


சிரட்டைக்குள் ஒளியும் சின்ன கணவாய்

இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் ஒரு சிறிய வகை கணவாய் தேங்காய் கணவாய் (Coconut Octopus).
கடலடியில் கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை அல்லது சிப்பியைச் சுமந்து கொண்டு திரிவதால் இந்தக் கணவாய்க்கு இப்படியொரு பெயர்.
தேங்காய் கணவாய் ஏறத்தாழ மூன்றங்குல நீளம் கொண்டது. இதன் கால்கள் அரையடி அதாவது ஆறங்குல நீளம் கொண்டவை. தேங்காய் கணவாயின் அறிவியல் பெயர் Amphioctopus Marginatus.
கணவாய் குடும்பத்துக்கே உரித்தான விதத்தில், இந்த சிறுகணவாயும் கூட நிறம் மாறக் கூடியதுதான். எனினும், இதன் இயல்பான நிறம் செம்பழுப்புநிறம். உடல் முழுக்க நரம்புகளைப் போல கருநிறக் கோடுகள் காணப்படுதால், தேங்காய் கணவாயை, நரம்புக் கணவாய் என்றும் சிலர் அழைப்பார்கள்.
பெண்கள் அணியும் குட்டைப்பாவாடையைப் போல இந்தக் கணவாயின் கால்களுக்கு இடையில் ‘ஸ்கர்ட்’ போட்டதுபோல சவ்வுப் பகுதி காணப்படும். மற்ற கணவாய்களுக்கு இல்லாத வகையில் இந்த சவ்வுப்பகுதி கால்நுனியை நோக்கி சற்று நீண்டிருக்கும். அதனால் பார்வைக்குத் தேங்காய் கணவாய், பாராசூட் போலவே தோற்றம் அளிக்கும்.
இந்த கணவாயின் உறிஞ்சுகுழல்கள் மஞ்சள் நிறமாகவும், உறிஞ்சுக் குழாய்களின் அடிப்பகுதிகள் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும் தோன்றும்.
கணவாய்களில், தேங்காய் ஓடு அல்லது கிழிஞ்சலை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் ஒரே கணவாய் இந்த தேங்காய் கணவாய்தான். தேங்காய் ஓடு அல்லது கிழிஞ்சலை இது தற்காலிக வீடாக கையில் ஏந்திய படி கடலடியில் சுமந்து செல்லும். எட்டுக் கைகள் இருப்பதால், கிளிஞ்சலின் மீது உட்கார்ந்து கொண்டு இரு கைகளால் அதைத் தாங்கிக் கொண்டு, மற்ற கைகளால் கடலடியில் இந்தக் கணவாய் வேகவேகமாக நகரும்.
ஊர்த்திருவிழாக்களில் வித்தை காட்டுபவர்கள் கட்டைக்கால்களில் நடப்பதைப் போல தேங்காய் கணவாய் மிக விரைவாக கடலடியில் தனது உடமையைச் சுமந்தபடி வேகமாக ஓடக் கூடியது.
தேங்காய் கணவாய்களிடம் இப்படி சிரட்டை அல்லது கிழிஞ்சலை தூக்கிச்செல்லும் வழக்கம் இருப்பது உண்மைதான் என்பதை, 500 மணிநேர ஆய்வுக்குப்பின், 20 வெவ்வேறு தேங்காய் கணவாய்களை உற்று நோக்கியபின் கடலியல் அறிஞர்கள் உறுதிசெய்துள்ளனர்.
அஞ்சாளை, சுறா போன்ற எதிரிகளிடம் இருந்து ஆபத்து வந்தால், தேங்காய் கணவாய் தனது தற்காலிக வீட்டுக்குள் நுழைந்து அதை மூடி, ஒரு கோட்டையைப் போலாக்கி எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும். சிலவேளைகளில் தேங்காய் மூடிக்குள் இருந்தபடி அதை உருட்டிக் கொண்டே நகர்ந்து எதிரியை இது ஏமாற்றும். தேங்காய் கணவாயின் எதிரிகள் இந்த மூடியைத் திறந்து தேங்காய் கணவாயை உண்ணும் அளவுக்கு அறிவில்லாதவை. ஆகவே இந்த தந்திரம் செல்லுபடியாகிறது.
அதேப்போல, தேங்காய்க் கணவாய், தனது தற்காலிக வீட்டுக்குள் ஒளிந்திருந்து உருமறைப்பு செய்து கொண்டு அருகில் வரும் நண்டு, இறால், சிறுமீன்களை வேட்டையாடவும் செய்யும்.
மணலில் புதைந்து கிடக்கும் கிழிஞ்சல்களை இது பறித்தெடுத்து அதன்மீது நீர்ப்பாய்ச்சி சுத்தப்படுத்தி தனது கேடயமாக, வீடாகப் பயன்படுத்திக் கொள்ளும். பயன்தராத தேங்காய் ஓடு, சிப்பிகளை இது தூக்கி தூர வீசியெறியவும் செய்யும்.
பெரும்பாலான கணவாய்களைப் போலவே தேங்காய் கணவாயும் நச்சுத்தன்மை உள்ளது. ஆனால், இதன் நச்சு மனிதர்களுக்கு ஆபத்தற்றது. மட்டி போன்ற கடலுயிர்களின் மேல் தோட்டில் துளையிட்டு, தனது நஞ்சை உள்செலுத்தி எதிரியை மயக்கமடையச் செய்து, அதன் உள்ளிருக்கும் சதையைத் திரவமாக்கி தேங்காய் கணவாய் உறிஞ்சி உணவாக்கிக் கொள்ளும்.
600 அடி ஆழ கடல் பகுதிகளில் தேங்காய் கணவாய் காணப்படும். அதிகாலையிலும், அந்தி மாலையிலும் இது இரை தேடும். தேங்காய் கணவாயின் உறிஞ்சுக்குழாய் முனைகள் இருட்டில் தொடர் மின்விளக்குகளைப் போல பளபளக்கக் கூடியவை. கண்ணைப் பறிக்கும் அழகுடன் கடலடியில் இவை பளபளக்கும்.
தேங்காய் கணவாய், இணைசேரும் காலங்கள் தவிர தனது வாழ்நாள் முழுக்க தனித்து வாழக்கூடியது. தேங்காய் ஓடு, சிப்பி கிடைக்காவிட்டால் மணலுக்கு அடியில் கண்கள் மட்டும் தெரிய இது புதைந்து கொள்ளும்.
பெண் கணவாய், அதன் முட்டைகளைக் காக்கும் போது இடையூறு ஏற்படால் மையைக் கக்கி சுற்றுப்புறத்தை ‘இருட்டாக்கும்’.
தேங்காய் கணவாயின்  எடை ஏறத்தாழ கால்கிலோ.
(தேங்காய் கணவாயைப் போலவே சிப்பியை ஏந்திச் செல்லும் மற்றொரு கடலுயிர் தொப்பி நண்டு. தொப்பி நண்டு பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவு உள்ளது. நவம்பர் 2016)

Monday, 13 May 2019


ஆடா திருக்கை (Common Stingray)

ஆடா திருக்கை
கடல்வாழ் திருக்கை இனங்களில் மிகவும் ‘புகழ்’வாய்ந்த திருக்கைகளில் ஒன்று ஆடா திருக்கை. அப்படி என்ன புகழ் என்கிறீர்களா?  கடலில் முத்து குளிப்பவர்களையும், சங்கு பறிப்பவர்களையும் கேளுங்கள். ஆடா திருக்கையின் பெருமையைப் பற்றி நாள் முழுக்க அவர்கள் விளக்குவார்கள்.
அந்த அளவுக்கு கடலில் முக்குளிக்கும் மனிதர்களைப் பதம் பார்த்து வால் முள்ளால் குத்தக்கூடிய திருக்கை இது. ஆடா திருக்கை கடிக்கவும் செய்யும் என்பார்கள். இதன் கடி ஆபத்தானது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆடா திருக்கை (Dasyatis Pastinaca) உலகின் பல்வேறு கடல்களில் அந்தந்த பூகோள சூழலுக்கேற்ப ஒவ்வொருவிதமான நிறங்களில் விளங்கக் கூடியது. ஆனாலும், கருமையோ, சாம்பலோ, பழுப்போ, ஒலிவப் பச்சையோ எந்த நிறமாக இருந்தாலும், உடல் முழுக்க ஒரே வண்ணமாக ஒருப்போல காட்சிதரும் திருக்கை இது. உடலில் புள்ளிகளோ, கோடுகளோ, வரிகளோ காணப்படாது.
வைரத்தின் வடிவத்தில் பக்கத் தூவிகளைக் கொண்டிருக்கும் ஆடா திருக்கை, 18 அங்குலம் வரை குறுக்களவு கொண்டது. இதன் தோல் பெரும்பாலும் மென்மையானது. வளர்ந்த பெரிய ஆடா திருக்கையின் முதுகின் நடுப்பகுதியில் வரிசையாக சலவைக் கற்களைப் பதித்தது போன்ற ஒரு புடைப்பு வரிசை காணப்படும்.
ஆடா திருக்கையின் வால் நீளமானது. உடலின் அளவில் முக்கால் பங்குக்கு இதன் வாலின் நீளம் அமைந்திருக்கும். வாலில் 14 அங்குல நீளத்துக்கு முள் உண்டு.
கடலில் தன்னருகே முக்குளித்து வருபவர்களைக் கண்டால், ஆடா திருக்கை முதலில் விலகிப் போக முயற்சிக்கும். தெரிந்தோ தெரியாமலோ தன்னை யாராவது  பின் தொடர்ந்தால் வாலை எளிதாக வளைத்து முள்ளால் குத்தும். ஆடா திருக்கையின் முள்குத்து நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த வால் முள், அரிதாக எப்போதாவது விழுந்து, மீண்டும் முளைக்கக் கூடியது.
திருக்கை இனத்தின் குலவழக்கப்படி ஆடா திருக்கையும் கடலடியில் கடல்தரையில் வாழக் கூடியது. மணற்பாங்கான, சகதி நிலத்தில் இது புதைந்திருக்கும். பவழப்பாறைகளின் அருகிலும் இது காணப்படும்.
குட்டியுடன்...
கடலடியில மணலைக்கிளறி, சிப்பி, நண்டு, இறால், மீன் போன்றவற்றை இது தேடித் தின்னும். கடல் சிப்பிகளை இது அதிக அளவில் உண்ணக்கூடியது. வலிமையான தாடையால் சிப்பியை உடைத்து உள்ளிருக்கும் சதையை இது உண்ணும். இளம்பருவத்தில் நண்டு, இறால்களையும், முதிர் பருவத்தில் மீன்களையும் இது இரை கொள்ளும். வளர்ந்த ஆடா திருக்கைகளிலும் கூட ஆண் ஆடாதிருக்கை அதிக அளவில் நண்டுகளையும், பெண் ஆடா திருக்கை அதிக அளவில் மீன்களையும் உணவாகக் கொள்ளுவது தெரிய வந்திருக்கிறது.
ஆடா திருக்கை உண்ணத்தகுந்த மீனல்ல. வலைகளில் தற்செயலாக இது பிடிபடுவதுண்டு. இதன் ஈரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
ஆடா திருக்கை, பகலில் மணலுக்குள் பதிந்திருந்து, இரவில்தான் அதிகமாக நடமாடும்.
ஆடா திருக்கைக்கு ஆடாமுழித்திருக்கை என்ற பெயரும் உண்டு. சுருக்கமாக இது ஆடா திருக்கை என அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
ஆடா திருக்கை எளிதில் பதற்றமடையக் கூடியது. கடலில் தனக்கு மேற்புறமாக நீந்தி வருபவர்களைக் கண்டால் தன்னை இரையாக்க வரும் எதிரி என நினைத்து ஆடா திருக்கை தாக்குதல் மேற்கொள்ளும். ஆடா திருக்கையின் நஞ்சு தோய்ந்த குத்து, சிலவேளைகளில் உயிரிழப்பில் போய் முடியலாம். கடலின் மேற்பரப்பில் பறக்கும் பருந்து போன்ற பறவைகளின் நிழல் தன் அருகே தென்பட்டாலும் கூட, ஆடா திருக்கை சிலிர்த்துக் கொண்டு தாக்கப் பாயும். படகுகளையும் இது தாக்குவதுண்டு.
கடலில் அமைதியாகத் திரியும் ஆவுளியாக்கள் கூட, ஆடா திருக்கையின் கோபத்துக்கு சில வேளைகளில் ஆளாவதுண்டு. முகத்தில் ஆடா திருக்கையின் முள் பாய்ந்து ஆவுளியா ஒன்று உயிரிழந்த நிகழ்வு ஒருமுறை நடந்திருக்கிறது. ஆடா திருக்கையின் முள்ளை மனிதர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்குவதும் உண்டு.
கடலில் முக்குளிக்கும் போது ஆடா திருக்கையைக் கண்டால் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய விலங்கியல்பூங்கா காப்பாளரும், சூழல் ஆர்வலருமான ஸ்டீவ் இர்வினுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். நெஞ்சில் அவர் திருக்கை முள் பாய்ந்துதான் மரணமடைந்தார்.
கடைசியாக ஒரு தகவல். ஆடா திருக்கையின் அறிவியல் பெயரில் உள்ள Dasyatis என்ற சொல்லுக்கு முரட்டுத்தனம் என்று பொருள்.

Friday, 10 May 2019


நண்டுக்கூட்டம்

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலில் கடல் பற்றிய ஒரு கவிதை இடம்பெற்றிருக்கும். அந்த கவிதையில் ஓரிடத்தில்
                    ‘வெள்ளலை கரையைத் தொட்டு
                       மீண்டபின் சிறுகால் நண்டுப்
                    பிள்ளைகள் ஓடியாடி
                       பெரியதோர் வியப்பைச் செய்யும்
என்ற அழகிய வரிகள் வரும்.
கடல் நண்டுகளில் ஏறத்தாழ 842 வகைகள் இருப்பதாகச் சொல்வார்கள். கடல் நண்டுகளைப் போலவே அவற்றின் பெயர்களும் விந்தையானவை. கடல் நண்டுகளில் சில....
அம்பிலி நண்டு (அம்பிலி என்பது முட்டையைக் குறிக்கும்), ஆமை நண்டு, ஆத்து நண்டு, உள்ளி நண்டு, எட்டுக்கால் பூச்சி நண்டு, ஓட்டு நண்டு, ஓலைக்காவாலி நண்டு, கல் நண்டு, கழி நண்டு (சேற்று நண்டு), கருவாலி நண்டு (வேகமாக ஓடும்), கருவாயன் நண்டு, கடுக்காய் நண்டு (எளிதில் சாசாது), கவட்டைக்கால் நண்டு, கண் நண்டு, கண்ணா நண்டு, கிளி நண்டு, குழி நண்டு, குழுவாய் நண்டு, குருஸ் நண்டு (சிலுவை நண்டு), கொட்ட நண்டு, கொழக்கட்டை நண்டு, கோரப்பாசி நண்டு, சம்பா நண்டு (பாரில் வாழ்வது), சிப்பி நண்டு (தொப்பி நண்டு), சில்லா நண்டு, சீனி நண்டு, சீதாலி நண்டு, செம்பாறை நண்டு,  செம்மண் நண்டு, செங்கால் நண்டு (செங்கல் நிறக் கால் உடைய இந்த நண்டு, மிதந்து வரும் நண்டு), தவிட்டு நண்டு, துறவி நண்டு (முனிவன் நண்டு), பால் நண்டு, பாசி நண்டு, பார் நண்டு, பச்சை நண்டு, பஞ்சு நண்டு, பார நண்டு, புளியமுத்து நண்டு (பிஸ்கட் நண்டு), பொட்டு நண்டு, பொட்டை நண்டு, பேய் நண்டு, பேந்தக் கால் நண்டு, வெள்ளை நண்டு, வெள்ளைக் கடுக்கா நண்டு,
மரைக்காரன் நண்டு, முட்டை நண்டு, முக்கு நண்டு (முள்ளு நண்டு), முக்கண்ணன் நண்டு, மூன்று புள்ளி  நண்டு (வெட்டுக்காவாலி), நீல நண்டு, நீலக்கால் நண்டு (பெண் நண்டு சாம்பல் நிறம்).