Saturday, 29 December 2018


வெள்ளை வயிறு கடற்கழுகு (white-bellied sea eagle)

கடற்புரத்து மக்களின் பல்வேறு நாடோடிக் கதைகளில் இடம்பெற்று வாழும் பறவை வெள்ளை வயிறு கடற்கழுகு. வெண்மார்பு கடற்கழுகு எனவும் அழைக்கப்படும் இந்த பறவை, முழுக்க பகல்நேரத்தில் இயங்கும் பறவை. இதன் அறிவியல் பெயர் (Haliaeetus leucogaster).

இந்த வகை கடற்கழுகின் தலை, மார்பு, அடிவயிறு, பிட்டப்பகுதி போன்றவை வெள்ளை நிறமாக இருக்கும். முதுகிலும், சிறகுகளிலும் கருஞ்சாம்பல் நிறம் காணப்படும். பறக்கும்போது, இந்தப்பறவையின் அடிப்பகுதி கருஞ்சாம்பல் நிற பொன்னாடை போர்த்தியது போல சிறகுகளில் சரிபாதியளவுக்கு கருஞ்சாம்பல் நிறத்துடன் காணப்படும். தலைக்கு மேல் பறக்கும்போது இந்த வெண்வயிறு கடற் கழுகை எளிதாக அடையாளம் காண முடியும்.
கடற்கழுகின் நீளம் 85 செ.மீ. எடை 4.2 கிலோ வரை இருக்கும். இந்தப்பறவையின் வளைந்த அலகு சாம்பல் நிறமானது. அலகின் முனை அடர்நிறமானது. கண்கள் கரும் பழுப்பு நிறம். கால்களும் அடிப்பாதங்களும் கிரீம் நிறம். வலிமையான உகிர்கள் (நகங்கள்) கருப்புநிறம்.

வெள்ளை வயிறு கடற்கழுகின் இளம் பறவைகள் ஆரம்பத்தில் பெற்றோர்களைப் போல தோன்றாது. இளம் பறவைகளின் சிறகுகள் ஆரம்பத்தில் கருப்பு நிறத்துக்குப் பதில் கரும்பழுப்பு நிறமாகத் தோன்றும். பறக்கும்போது இளம்கழுகின் வால்பகுதி யில் பாதியளவுக்கு வெண்மை நிறத்துக்குப் பதில் கருஞ்சாம்பல் நிறம் காணப்படும். 4 ஆண்டுகளில் இவை பெரிய கழுகின் வண்ணத்தை முழுமையாகப் பெறும்.
கடற்கழுகுகள் சிறந்த வேட்டையாடிகள். பிற கடற்பறவைகளை பயமுறுத்தி அவற்றின் இரையை நடுவானில் விழவைத்து அதை கவர்ந்து உண்ணும். மீன், ஆமை, கடற்பாம்பு போன்றவற்றுடன், இறந்த ஆடு, மீன்களையும் இது தின்னும். அன்னம் அளவுள்ள பெரிய பறவைகளைக்கூட வெள்ளை வயிறு கடற்கழுகு வேட்டையாடக் கூடியது.
தரையில் இருந்து 30 மீட்டருக்கு மேல் உயரமுள்ள மரங்களில் கடற்கழுகு குச்சி களால் கூடு அமைக்கும். மரங்கள் இல்லாத இடங்களில் பாறைகளில் கூடு கட்டும். நடுவில் சிறுபள்ளம் கொண்ட இந்த கூட்டில் 2 முதல் 3 வெண்ணிற முட்டைகளை பெண்கழுகு இடும். பகலில் ஆண் கழுகும், பெண் கழுகும் மாறிமாறி அடைகாக்கும். இரவில் முழுக்க முழுக்க பெண்பறவை மட்டுமே அடைகாக்கும் பணியைச் செய்யும்.
இளம் கழுகு
குஞ்சுகள் பொரித்து வெளிவந்தபின் ஆண் கழுகு இரைதேடி வரும். பெண் கழுகு குஞ்சுகளுக்குப் பாதுகாப்பாக கூட்டில் தங்கும். இந்த கடற் கழுகின் குரல் காட்டு வாத்தின் கூச்சல்போல ஒலிக்கும்.
இரவில் இதன் குரல் கேட்பது ஆபத்தின் அறிகுறி எனவும், இந்த வகை கடற் கழுகுகள் கூட்டமாகத் தலைக்குமேல் பறந்தால் அது சாவுக்கு அடையாளம் எனவும் கடற்புறத்து மக்களிடம் நம்பிக்கை உள்ளது.
மலேசியாவின் செலாங்கூர் மாநில அரசின் அடையாளச் சின்னமாக இந்த வெள்ளை வயிறு கடற்கழுகு திகழ்கிறது.

Friday, 28 December 2018



கடலின் தோட்டக்காரர்கள்

கடலில்,  வெறும் கண்களுக்குத் தட்டுப்படாத, நுண்ணோக்கி மூலமாக மட்டுமே பார்க்கக் கூடிய சிறியவகை மிதவைத் தாவரங்கள் ஏராளம். பைடோபிளாங்டன் (Phytoplankton) என்பது இவற்றுக்குப் பெயர்.
கவுர் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் நுண்பாசிகளைப் பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் எழுதியிருக்கிறோம். (ஜூன் 2016) கடலின் மேற்பரப்பில் மிதக்கும் இந்த நுண் பாசித்துணுக்குகள்தான் நமது புவிக்கோளத்தில், நாம் உயிர்வாழத் தேவையான உயிர்க் காற்றில் சரிபாதியை உற்பத்தி செய்கின்றன. அதிக அளவில் உயிர்க்காற்றை உருவாக்கி அதன்முலம் புவிவெப்பமயமாவதைக் குறைப்பதும் இந்த நுண்பாசிகள்தான்.
கடலின் உணவுச் சங்கிலியில் முதல் கண்ணியாக விளங்கும் இந்த நுண்பாசித் துணுக்குகள், கடலில் செழித்து வளர, நைட்ரஜனும் இரும்புச் சத்தும் தேவை. இதன்மூலம் இந்த மிதவை உயிர்கள், சூரிய ஒளி மற்றும் கடல்நீரில் உள்ள கரியமில காற்றைப் பயன்படுத்தி, தமக்கான உணவைத் தேடிக் கொள்கின்றன. உயிர்க் காற்றையும் உருவாக்குகின்றன.
ஒரு தாவரம் வளர உரம் வேண்டும் அல்லவா? அந்த வகையில் இந்த நுண்ணியிர் தாவரங்கள் கடலில் செழித்து வளர யாராவது உரம் போட வேண்டுமல்லவா? அந்த உரத்தைப் போடுபவர்கள் யார் என்றால் திமிங்கிலங்கள். ஆம். திமிங்கிலங்களின் கழிவுகளே நுண்ணுயிர்ப் பாசிகளுக்கு உரமாகிறது.
திமிங்கிலங்கள் அவற்றின் பெரிய உடலுக்கேற்ப அதிக அளவில் இரை உண்பவை. குறிப்பாக நீலத்திமிங்கிலம் 1 முதல் 4 டன் உணவை நாள்தோறும் உண்ணக் கூடியது.
கடல்மட்டத்தில் மிதக்கும் நுண்பாசிகள், கிரில்(Krill) எனப்படும் கூனிப்பொடிகளுக்கு உணவாகிறது. கூனிப்பொடிகள் பல்லில்லாத பலீன் வகை திமிங்கிலங்களுக்கு உணவாக மாறுகிறது. கடலில் மீன்களை உண்ணும் திமிங்கிலங்களும் இருக்கின்றன.
திமிங்கிலங்களில் சில கடலின் அடியாழத்தில் மூழ்கி அங்கே இரைதேடக்கூடியவை. இப்படி அதிக ஆழத்தில் மூழ்கும் திமிங்கிலங்கள் அங்கே கழிவுகளை வெளிப்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டாலும் கூட கடலின் ஆழத்தில் அந்த இயற்கை அழைப்பை ஏற்று கழிவுகளை வெளியேற்றாது. மூச்செடுக்க கடலின் மேற்பரப்புக்கு வரும்போதுதான் திமிங்கிலங்கள் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
இந்தத் திமிங்கில கழிவுகளை வைத்து அதை வெளியேற்றிய திமிங்கிலத்தின் வயது, பாலினம் போன்றவற்றைச் சொல்லிவிடலாம். திமிங்கிலக் கழிவு சிவப்பு நிறமாக இருந்தால் அந்தத் திமிங்கிலம் அதிக அளவில் கூனிப்பொடிகளை உண்டிருக்கிறது எனவும், பச்சை நிறமாக இருந்தால் மீன்களை அதிக அளவில் தின்றிருக்கிறது என்பதையும் ஊகித்து விடலாம்.
இந்தத் திமிங்கிலக் கழிவுகள், மிகச்சிறந்த கடல் உரம். ஆம். நீரின்மேல் மிதக்கும் இந்தக் கழிவுகள்தான் பைட்டோபிளாங்டன் (Phytoplankton) என்னும் மிதக்கும் நுண்பாசிகளுக்கு உரமாகி, அவற்றைச் செழிக்கச் செய்கின்றன. இதன்மூலம் கடலென்னும் தோட்டத்தின் தோட்டக்காரர்களாக திமிங்கிலங்கள் விளங்குகின்றன. மனிதகுலத்துக்கு உயிர்க் காற்றை அதிக அளவில் வழங்கி, புவிப்பந்தின் வெப்பம் அதிகரிக்காமலும் காக்கின்றன.
ஆனால், திமிங்கிலங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை தாறுமாறாக குறைந்து வரும் இன்றைய சூழ்நிலையில், புவிக் கோளத்தின் சுற்றுச்சூழல் முழுக்க மாற்றம் கண்டு, அதனால் நமது மனிதகுலம் அழியும் ஆபத்துகூட ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

Tuesday, 25 December 2018


கடலுக்கு அடியில் தோட்டம்

நிலாவில் அல்லது விண்வெளியில் இருந்து நமது புவிக்கோளத்தைப் பார்த்தால் என்னென்ன தெரியும்? நீண்டுகிடக்கும் சீனப் பெருஞ்சுவர் தெரியும். நீலக்கடல்கள் தெரியும். அதில் உள்ள பவழப்பாறைகளும் தெரியும்.
ஆம். ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீப் பவளப்பாறைகள் புவிக்கு அப்பால், 2 லட்சத்து 38 ஆயிரத்து 850 மைல் தொலைவில் இருந்துகூட விண்வெளி வீரர்களின் கண்களுக்குத் தெரியக் கூடியவை. இந்த கிரேட் பேரியர் ரீப் பவளப் பாறைகளின் வயது என்ன தெரியுமா? ஏறத்தாழ 18 மில்லியன் ஆண்டுகள்!
கடலடியில் இயற்றை கட்டிவைத்த கட்டுமானம் போல இருக்கும் பவழப்பாறைகள், உண்மையில் ஒரு சிறியவகை உயிர்கள். ஒரு கடல்சாமந்திப்பூ அளவுக்கு அல்லது ஒரு சிறுகுழந்தையின் பெருவிரல் அளவுள்ள சிறிய உயிர்கள்தான் பவழப்பாறைகளை வடிவமைத்துக் கட்டிய பொறியாளர்கள்.
இடம்விட்டு இடம் நகர முடியாமல் ஒரேஇடத்தில் கட்டிப்போட்டதுபோல வாழும் இந்த சின்னஞ்சிறு உயிர்கள், மென்மையான உடல்களைக் கொண்டவை. தங்களது மென்மையான உடலைக் காப்பாற்றிக் கொள்ள, இந்த பவழ உயிர்கள் கடல்நீரில் இருந்து சுண்ணாம்புச் சத்தைப் பிரித்தெடுத்து கால்சியம் கார்பனேட்டை சுரந்து தங்களைச்சுற்றி ஒரு கடினமான, பலமான வெளிக்கூடு ஒன்றைக் கட்டுகின்றன.
இப்படி குடிசைத் தொழில்போல ஒரு சுண்ணாம்புக்கட்டியைத் தயாரித்து அந்த சுண்ணாம்புக் குகைக்குள் இவை உயிர்வாழ்கின்றன. சிறிய உணர்கொம்புகள் மூலம் சுற்றுப்புற நீரைத் துழாவி தங்களுக்குத் தேவையான இரையை இவை சேகரித்துக் கொள்கின்றன.
இந்த பவழ உயிர்கள் இறந்தபின் அவை சுண்ணாம்புக்கூடுகளின் சுரங்கம் போல ஆகிவிடுகிறது. கடலில் உள்ள இந்த கல்பவழங்கள் எனப்படும் தங்களது முன்னோர் களின் உடற்கூடுகள் மீது அவற்றின் சந்ததிகள், புதிதாக  தங்களது உடற்கூட்டையும் எழுப்புகின்றன. இப்படி பலநூற்றாண்டு காலமாக நடந்து வருவதால், பவழப்பாறைகள் மெல்ல மெல்ல வளர்கின்றன’.
பவழப்பாறைகள் கூம்புகள், குகைகள், கோபுரங்கள், தூண்கள், பள்ளத்தாக்குகள், குகைப் பாதைகள், போல பல விந்தையான வடிவங்களைக் கொண்டவை. 
இந்தப் பவழப்பாறை உயிர்கள் இருவிதமாக உணவு உட்கொள்கின்றன. சிலவகை பவழ உயிர்கள், கடல்நீரில் உள்ள நுண்ணுயிர்களை வடிகட்டி உண்டு வாழ்கின்றன. சில வகை பவழப் பாறைகள், சூவுசான்தெல்லி (Zooxanthellae) என்ற பச்சை நிற ஒரு செல் தாவர உயிரினத்தின் உதவியை நாடுகின்றன.
இந்த ஒரு செல் பாசியால், சூரிய சூரிய ஒளியில் இருந்து தனக்கு உணவு உற்பத்தி செய்ய முடியும். இந்த உணவின் பெரும்பங்கை பவழப்பாறைகள் எடுத்துக் கொள் கின்றன. பதிலுக்கு இந்த பாசியை தங்கள் கூட்டுக்குள் வைத்து பாதுகாப்பு அளித்து, அந்த பாசிக்குத் தேவையான கரியமில காற்றை பவழப்பாறைகள் அளிக்கின்றன. இதனால் இருதரப்பும் பலனடைகிறது.
மேலும் பவழப்பாறைகளுக்கு கண்கவர் வண்ணங்களைத் தருவது இந்த பாசிகள்தான். இல்லாவிட்டால், பவழப்பாறைகள் நிறமற்று வெளிறிப்போய்தான் காட்சிதர வேண்டியிருக்கும்.
சரி. பவழப்பாறைகளால் என்ன நன்மை?
மழைக்காடுகள் நமது புவிக்கோளத்துக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கடல்வாழ் பவழப்பாறைகள், புவிக்கோளத்துக்கும், அதில் வாழும் மனிதகுலமாகிய நமக்கும் முக்கியம். புவியின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகள் என பவழப்பாறைகளைக் குறிப்பிடலாம்.
கடலோரம் கடற்கரை என்ற பெயரில் பெரும் மணல்வெளி இருக்கிறது அல்லவா? இந்த மணல்வெளிகள் தோன்ற, பவழப்பாறைகளும், அதில் வாழும் கிளிஞ்சான் (Parrot fish) வகை மீன்களுமே காரணம். தீவுகள், கடற்கழிகள், மாங்குரோவ் போன்ற கடலோரக் காடுகள் தோன்றவும் பவழப்பாறைகள்தான் காரணம். இந்த பவழப் பாறைகள்தான் கடல் அலைகளின் வேகத்தைத் தடுத்து, கடலரிப்பைத் தடுக்கின்றன. புயல், ஆழிப்பேரலையான சுனாமி போன்றவை தாக்கும்போது கரைப்பகுதியில் அவை அதிகம் சேதம் விளைவிக்காத வகையில் பவழப்பாறைகள்தான் தடுத்து காக்கின்றன. கடற்புல்வெளிகள், கடற்கழிகளை காப்பதும் பவழப்பாறைகள்தான். பவழப்பாறைகள் மட்டும் இல்லாவிட்டால், நமது உலக உருண்டையில் மாலைத்தீவு, கிரிபடி எனப்படும் கிரிபாஸ், துவலு, போன்ற தீவு நாடுகளே இருக்காது. அவை எப்போதோ துடைத்தெறியப்பட்டிருக்கும்.
நகரின் நடுவே நாம் ஓய்வெடுக்க பூங்கா இருக்கிறது அல்லவா? அதுபோல, கடலில் பலவகை மீன்களுக்கு உள்ள பொழுதுபோக்கு பூங்கா பவழப்பாறைகள்தான். இளம் மீன்குஞ்சுகளின் காப்பகமாக இருந்து அவற்றைப் பேணி வளர்ப்பதும் கூட பவழப் பாறைகள்தான்.
கடலடியில் உள்ள மொத்தப்பரப்பளவில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் 0.2 முதல் 1 விழுக்காடுதான். அதாவது கடலின் மொத்தப் பரப்பளவில் 2 லட்சத்து 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களுக்கு பவழப்பாறைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இப்படி பரப்பளவில் சிறியதாக இருந்தாலும்கூட, ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்கு 5 முதல் 15 டன் கடலுணவுகளை பவழப்பாறைகளால் தர முடியும்.
உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கடலுயிர்களில் 25 விழுக்காடு உயிர்கள், உணவுக்காகவும், பாதுகாப்புக்காவும், இனப் பெருக்கத்துக்காகவும் பவழப்பாறைகளையே நம்பியுள்ளன. பவழப்பாறைகளில் 4 ஆயிரம் வகை மீன்கள், 700 வகை பவழங்கள், இன்னும் கடல்பூண்டுகள், கடல்சாமந்திகள், இறால், மூரை, மட்டி போன்ற பல ஆயிரம் தாவரங்கள், கடலுயிர்கள் வாழ்கின்றன.
பவழப்பாறைகள் உயிர்வாழ சூரிய ஒளி வேண்டும். எனவே, ஆழம் குறைந்த கடல் பகுதிகளையே பவழப்பாறைகள் நம்பியுள்ளன. ஆனால், புவிவெப்பமயமாதல் காரணமாக கடல்நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பவழப் பாறைகள் நீரின் அடிஆழத்தில் மூழ்கி, அழிவை எட்டி வருகின்றன. சூரிய ஒளியில் இருந்து உணவுத் தயாரிக்கப் பயன்படும் பாசிக்கு  பவழப்பாறைகளில் இனி வேலை இல்லை என்பதால் அவை பவழப்பாறைகளை விட்டு விலகிச் செல்கின்றன. இதனால், பவழப்பாறைகள் அவற்றின் வண்ணத்தையும் வனப்பையும் இழந்து வெளிறி வெண்மை நிறமாக மாறும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
புவிக்கோளத்தைக் காக்க காடுகளை மட்டுமின்றி, கடலடி தோட்டங்களான பவழப் பாறைகளையும் காக்க வேண்டியது நமது கடமை.

Sunday, 23 December 2018


களவா மீனின் சைகை மொழி

களவா 
களவா எனப்படும் Grouper மீன், பவழப்பாறைப் பகுதிகளில் வாழும் பெரிய வகை மீன். இது மிகச்சிறந்த முறையில் வேட்டையாடும் மீனும் கூட. திறந்தவெளியில் இரையை வேகமாக விரட்டிப்பிடித்து வேட்டையாடுவதில் களவா வல்லது. 
இந்தப் பவழப்பாறை களவா மீன், மற்ற பெரிய வகை மீன்களுடன் ஒருவித சைகை மொழியில் பேசுவது கடல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
களவா விரட்டிச் செல்லும் இரைமீன், பவழப்பாறை இடுக்குகளில் நுழைந்து மறைந்து கொண்டால், களவா அதற்கே உரித்தான, தனித்துவமான சைகை மொழியில் மற்ற பெரிய இருவகை மீன்களை உதவிக்கு அழைக்கிறது.
இப்படி களவா உதவி கோரும் மற்ற பெரிய இருவகை மீன்களில் ஒன்று பெரிய அஞ்சாளை மீன் (Moray eel). மற்றது கருந்திரளி மீன் (Wrasse). இந்த மீன்களின் உதவிக்காக சிலவேளைகளில் 25 நிமிடநேரம் வரை கூட களவா காத்திருக்கிறது.
நண்பர்கள் கண்ணில் பட்டதும், இரை ஒளிந்திருக்கும் பகுதியை மூக்கால் சுட்டிக் காட்டி, தன் உடலை இருபுறமும் களவா அசைக்கிறது. இதன்மூலம் இரைமீன் பதுங்கி இருக்கும் இடத்தை நண்பர்களுக்குக் குறிப்பால் உணர்த்துகிறது.
அடுத்து கூட்டாக வேட்டை ஆரம்பம்.
நெப்போலியன் கருந்திரளி
மீன்களில் கருந்திரளி மீன் பலம்மிக்க தாடை உடையது. வலுவற்ற துளைகளுடன் கூடிய பவழப்பாறைகளில் மோதி அதை உடைத்துப் பெயர்த்து விடக் கூடியது. இரைமீன் ஒளிந்திருக்கும் பவழப்பாறைப் பகுதியை கருந்திரளி இப்படி உடைக்கும்போது, இரை மீன் பொடிப் பொடியாகும். அல்லது தப்பித்து ஓடும்.
இரைமீன் உடைக்க முடியாத அளவுக்கு வலுவான பவழப்பாறையில் உள்ள பொந்துக்குள் போய் மறைந்து கொண்டால், இப்போது அஞ்சாளையின் முறை. அஞ்சாளை அதன் ஒல்லியான உடலைப் பயன்படுத்தி பார் இடுக்கில் புகுந்து இரை மீனைப் பிடிக்கும். இரைமீன் அப்போதும் தப்பித்து திறந்தவெளியில் ஓடினால் வேகத்துக்குப் பேர்பெற்ற களவா மீன் அதை விரட்டி இரையாக்கி விடும்.
இப்படி கூட்டாக வேட்டையாடப்படும் இரைமீனை இந்த 3 வகை மீன்களும் ஒன்றுக் கொன்று பகிர்ந்து கொள்வதில்லை. எந்த மீனின் வாயில் இரைமீன் சிக்குகிறதோ  அந்த மீன், இரையைத் தனதாக்கி முழுதாக விழுங்கிவிடும்.
பொதுவாக, களவா மீனின் வேட்டை முயற்சிகளில் 20ல் ஒன்றுதான் வெற்றி பெறும். ஆனால், இப்படி கூட்டணியமைத்துக் கொண்டு வேட்டையாடினால் ஏழில் ஒரு வேட்டை முயற்சி வெற்றியடையும்.
பெரிய அஞ்சாளை
சில வேளைகளில் இரைமீன் கண்ணில்படும் முன்பே களவா, மற்ற தோழர்களான கருந்திரளி, அஞ்சாளை போன்றவற்றுடன் சைகை மொழியில் கூட்டணி அமைத்துக் கொள்வதும் உண்டு. இந்த மூவகை மீன்களும் தத்தமக்கு உரிய வேட்டைத் திறமையுடன் பவழப்பாறைகளில் அங்குமிங்கும் இரைதேடும். அதனதன் திறமைக் கேற்ப இரைமீனைக் கவர முயற்சிக்கும். இப்படி மூவகை மீன்களும் ஒன்றுசேர்ந்து இரையைத் தேடித் திரியும் காட்சி அழகானது.  
பொதுவாக மனிதர்கள், குரங்குகள், சிலவகை பறவைகளால்தான் சைகை மொழியைக் கடைபிடிக்க முடியும். மீன்களுக்கு சின்னஞ்சிறிய மூளை இருப்பதால் அவற்றால் சைகை மொழியைக் கடைபிடிக்க முடியாது என இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால், சைகை மொழியில் தன்னால் பேச முடியும் என்பதை களவா மீன் எண்பித்துக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நன்றி: நேஷனல் ஜியாக்ரபி

Friday, 21 December 2018


சங்குக் குளியல்

முத்துக்குளிப்பு போலவே தமிழக கடற் கரைகளில் நடக்கும் மற்றொரு குளிப்பு சங்குக் குளிப்பு. கடலடியில் சங்கு விளையும் நிலம் என்றே சில இடங்கள் உள்ளன. அங்கு சங்குக்காக சங்கு குழியாட் கள் மூழ்கி சங்கெடுப்பார்கள்.
இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி கடலில் தமிழகக் கரை வரை ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து கொள்ளுங்கள். இந்த கற்பனைக் கோட் டுக்கு வடக்கே உள்ள சங்குகள் பட்டி என அழைக்கப்படும். குட்டையாக சற்று தட்டையான தலையை இந்த சங்குகள் கொண்டிருக்கும். இந்தக் கற்பனைக் கோட்டுக்கு தெற்கே உள்ள சங்குகள் நீளமானவை. சற்று கூரிய தலையை இவை கொண்டிருக்கும். இவை பச்சேல் என அழைக்கப் படுகின்றன.
சங்குகள் உயிரோடு இருக்கும்போது, பச்சை நிற மேற்பரப்புத் தோல் ஒன்று சங்கை மூடியிருக்கும். சங்கை வேட்டையாட வரும் சுறா, திருக்கைகளிடம் இருந்து சங்கைக் காப்பாற்றுவது இந்த மேற்தோல்தான். சங்கின் மேலுடல் அரிக்கப்படாமல் காப்பதும் இந்த மேற்தோல்தான். மணலில் புதைந்து சங்கு உருமறைப்பு செய்து ஒளிந்து கொள்ளவும் இந்த மேல் தோல்தான்தான் பயன்படுகிறது.
சங்கு இறந்ததும், இந்த மேல்தோல் உரிந்து கொள்ளும். அப்போது சங்கு அதன் பாரம்பரிய வண்ணமான வெண்மை நிறத்துக்கு மாறும். இந்த வகை இறந்த சங்குகள், கிட்டத்தட்ட புதைபடிவ சங்குகள் போன்றவை. இறந்து, நினைவுச்சின்னங்கள் போல மாறிவிட்ட இந்த சங்குகளை ஆதாம் சங்குகள் என மீனவர்கள் குறிப்பிடுவார்கள். கடலில் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக இந்த ஆதாம் சங்குகள் காணப்படும்.
கடலடியில் பாறைநிலங்களில் இருக்கும் சங்குகளே அதிக விலைமதிப்புடையவை. கடற்புற்களின் நடுவே இருந்து எடுக்கப்படும் சங்குகள் பெரிய அளவில் விலை போகாது. கடலில் மூழ்கி எடுக்கப்படும் சங்குகள் அவற்றின் தன்மைக்கேற்ப விலை போகும். கரடு, சூத்தை, கூழை என சங்குகள் சில குற்றங்குறைகளுக்கும் உள்ளாகும்.
இளம் சங்குகளை சுறா, திருக்கை, நண்டு போன்றவை கடிப்பதுண்டு. அப்படி கடிபட்ட தடம், வடு, விழுப்புண் இருந்தால் அந்தச் சங்குகள் கரடு, சுளுக்கடி, நண்டுக்கடி என கருதப்பட்டு ஒதுக்கப்படும். காரச்சங்கு போன்றவற்றால் துளையிடப்பட்ட சங்குகள், சூத்தை எனக் கருதப்படும். வழக்கத்தை விட உயரம் குறைவான சங்குகள் கூழை எனக் கருதப்பட்டு அவையும் பெரிய அளவில் விலைபோகாது.
சங்குகளில் விலை உயர்ந்த சங்கு வலம்புரிச் சங்கு (Turbinella pyrum). மன்னார் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே உள்ள பட்டி சங்குகள், தெற்கே உள்ள பச்சேல் சங்குகள் இவை இரண்டிலும் கூட வலம்புரிச் சங்குகள் கிடைக்கக்கூடும். 2 லட்சம் சங்குகளில் ஒன்றுதான் அரியவகை வலம்புரிச் சங்காக மாறும்.
சங்குச் சதையை உண்ணலாம். சங்கை அறுத்து வளையல்கள் செய்யலாம். சங்கு, உணவாக, ஆபரணமாக மட்டுமின்றி ஆயுதமாக, இசைக் கருவியாக, மருந்தாக, மத வழிபாட்டுப் பொருளாக பலவகைகளில் மனிதர்களுக்குப் பயன்தருகின்றன.

Saturday, 15 December 2018


திமிங்கில ‘அம்மாக்கள்’

நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் திமிங் கிலக் குட்டி என்ற பதிவு ஏற்கெனவே உண்டு. அது போதுமா? போதாது இல்லையா? ஆகவே, திமிங்கில அம்மாக்கள் என்ற புதிய தகவலை இப்போது பதிவிடலாம்.
திமிங்கிலங்களில் கருவுற்ற பெண் திமிங் கிலங்கள், அவற்றின் கர்ப்பக் காலத்தில் ஆர்ட்டிக் அல்லது அண்டார்டிக் போன்ற வட, தென் துருவக் கடல்களில் சுற்றித் திரியும். இங்கு அதிக இரையை உண்டு, குட்டியீனுவதற்கு தோதாக தனது உடலை அது வலுப்படுத்திக் கொள்ளும்.
கருவுற்ற திமிங்கிலம் பின்னர் வெப்பக்கடல்களுக்கு இடம்பெயரும். திமிங்கிலம் அதன் குட்டியை ஈனுவதற்கு பொருத்தமான இடம் வெப்பக்கடல்தான்.
வெப்பக்கடல்களில் இரை குறைவு என்றாலும், அங்கே கொன்றுண்ணிகளால் ஏற்படும் ஆபத்தும் குறைவு. வெப்பக்கடல்களில்தான் திமிங்கிலக் குட்டி பாதுகாப்பாக வாழ முடியும். குட்டித் திமிங்கிலம் வளரவும், நீந்தப் பழகவும் சரியான இடம் வெப்பக் கடல்தான்.
எனவே திமிங்கிலங்களில், குறிப்பாக கூனல்முதுகுத் திமிங்கிலம் எனப்படும் Humpback திமிங்கிலங்களில், 60 விழுக்காடு திமிங்கிலங்கள், வடதுருவப் பகுதிகளில் ஒன்றான அலாஸ்காவில் இருந்து, குட்டி ஈனுவதற்காக மூவாயிரம் மைல்களைக் கடந்து ஹவாய்த்தீவுப் பகுதிக்கு வந்து சேரும்.
அதுபோல, தெற்கத்தி ரைட் திமிங்கிலங்கள், தென்துருவமான அண்டார்டிக் கடலில் இருந்து, குட்டி ஈனுவதற்காக ஆஸ்திரேலியாவின் வடக்கே, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்து சேரும்.
இப்படி வயிற்றில் குட்டியுடன் வெப்பக்கடல் பகுதிக்கு வந்துசேரும் பெண் திமிங்கிலம், அங்கே குட்டியீனும். யானைகளைப் போலவே திமிங்கிலங்களும் ஒரே ஈற்றில், ஒரேயொரு குட்டியை ஈனுவதுதான் வழக்கம்.
திமிங்கில குட்டி பிறந்தவுடன் அது கடல்மட்டத்துக்கு வந்து மூச்சு எடுக்க தாய்த் திமிங்கிலம் உதவும். திமிங்கிலக் குட்டியின் நுரையீரல் சிறியது. எனவே 3 அல்லது 4 நிமிடங்களுக்கு ஒருமுறை அது நீர்மேல் வந்து மூச்சு எடுத்தாக வேண்டும். அப்படி அடிக்கடி வந்து மூச்செடுக்க தாய்த் திமிங்கிலம் உதவும்.
திமிங்கிலக் குட்டிக்கு மென்மையான நாக்கு என்பதால், அதனால் தாய் தரும் பாலை சப்பிக் குடிக்க முடியாது. எனவே தாய்த்திமிங்கிலம் நேரடியாக அதன் பாலை குட்டியின் வாய்க்குள் பீய்ச்சியடிக்கும். தாய்த் திமிங்கிலம் நாளொன்றுக்கு 400 லிட்டர் வரை பால் புகட்டும். திமிங்கில பாலில் 40 விழுக்காடு கொழுப்பு இருப்பதால் குட்டி மிகவேகமாக வளரும்.
கூனல் முதுகுத் திமிங்கிலங்கள் எப்போதும் குட்டியைப் பிரியாமல் திரியும். வெப்பக் கடல்களில் இரை குறைவு என்பதுடன் குட்டிக்கு பாலூட்டும் கடமை வேறு இருப்பதால் அந்த காலகட்டங்களில்  தாய்த் திமிங்கிலம் பெரிதாக உண்ணாது. பல மாதங்களாக இப்படி உண்ணாநோன்பு இருப்பதால் தாய்த் திமிங்கிலங்களின் உடல் வற்றிப் போகும்.
எடுத்துக்காட்டாக, தெற்கத்தி ரைட் திமிங்கிலங்கள் பாலூட்டும் காலத்தில் 8 டன் வரை எடைகுறைந்து போகும். ‘பாலூட்டும் அன்னை நடமாடும் தெய்வம்’ என்பது திமிங்கிலத்தைப் பொறுத்தவரை மிகச்சரியானது.
புதிதாகப் பிறந்த திமிங்கிலக் குட்டி 12 முதல் 15 அடி நீளமும், 1 முதல் 2 டன் எடையும் இருக்கும். முதல் ஆண்டில் பத்து மீட்டர் நீளம் வரை குட்டி வளரும்.
குட்டி சற்று வளரும்போது, தாய்த் திமிங்கிலம் இரை தேடி ஆழ்கடலில் மூழ்க வேண்டியிருந்தால், குட்டியை மற்றொரு பெண் திமிங்கிலத்தின் பொறுப்பில் விட்டு விட்டுச் செல்லும். காரணம், குட்டிகளால் அதிக ஆழத்துக்கு முக்குளிக்க முடியாது.
ஆனால் மறந்தும் கூட ஒரு தாய்த்திமிங்கிலம், மற்ற திமிங்கிலங்களின் குட்டி களுக்கு பாலூட்டுவதை ஒருபோதும் விரும்பாது. ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற தமிழ்ப்பழமொழியை தாய்த் திமிங்கிலம் ஏற்கவும் ஏற்காது.
குட்டித் திமிங்கிலத்துடன் மிக மெல்லிய குரலில் தாய்த்திமிங்கிலம் உரையாடும். அதிக சத்தமாக உரையாடினால், அது கொன்றுண்ணி களான கருங்குழவி ஓங்கல்களுக்கு (Killer Whale) கேட்டு அவை வந்து விடலாம் என்பதால், இப்படி மெல்லிய குரலில் உரையாடும்.
பிற ஆண் திமிங்கிலங்கள் குட்டியை நெருங்கி னால் பெண் திமிங்கிலம் அவற்றைத் தாக்கி விரட்டி, குட்டியைக் காப்பாற்றும்.
குட்டி வளர்ந்து, நீந்தக் கற்றுக்கொண்டு, நெடும்பயணத்துக்குத் தயாராகி விட்டால் குட்டியை அழைத்துக் கொண்டு துருவக்கடல் பகுதிக்கு தாய்த் திமிங்கிலம் இடம் பெயரும். அங்கு செல்வதற்கான வலசைப் பாதைகளை குட்டிக்குக் கற்றுத்தரும்,
குளிர்க்கடல்களில் குளிரைத் தாங்க வசதியாக இப்போது குட்டியின் உடலைச் சுற்றி பிளப்பர் (Blubber) எனப்படும் எண்ணெய்க் கொழுப்புப் படலம் உருவாகி இருக்கும்.
துருவப் பனிக்கடல் பகுதிகளில் நன்கு இரையுண்டுவிட்டு ஓராண்டில் குட்டியுடன் தாய் மீண்டும் வெப்பக்கடலுக்குத் திரும்பும். வெப்பக்கடற்பகுதிக்கு அது மீண்டும் வரும்போது குட்டி வளர்ந்திருக்கும். இப்போது குட்டியை தாய் பிரியும் காலம்.
கூனல்முதுக்குத் திமிங்கிலக் குட்டிகள் பிறக்கும் போது வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். அவை வளர வளர கருப்பு நிறமாக மாறும். 3 ஆண்டுகளில் குட்டியின் வாலில் அதை அடையாளம் காண உதவும் குறியீடுகள் தோன்றும். அப்படி குறியீடுகள் தோன்றினால் அது வளர்ந்த திமிங்கிலமாகி விட்டது என்பது பொருள்.
இப்போது தாய்த் திமிங்கிலம் மீண்டும் பனிக்கடல்களை நோக்கி பயணப்படும் ஆனால், இந்தமுறை குட்டி அதனுடன் வராமல் தனித்து வாழத் தொடங்கி யிருக்கும். தாய்த் திமிங்கிலம் ஒருவேளை இப்போது மீண்டும் தாய்மைப்பேறு கூட அடைந்திருக்கலாம். இதையடுத்து காலமென்னும் வட்டம் மீண்டும் சுற்றிச் சுழலத் தொடங்கும்.
அதன்பின் மீண்டும் ஒரு பிறப்பு. உண்ணாநோன்பு, வளர்ப்பு, தாயன்பு.

Tuesday, 11 December 2018


கைகாட்டி நண்டு (Fiddler Crab)

பெரும்புகழ் பெற்ற பிடில் இசைக் கலைஞர் போல, தனது பெரிய கடிகாலை உயர்த்திக் கொண்டு உலவும் ஒரு நண்டின் பெயர் கைகாட்டி நண்டு. இதன் வண்ணம்மிக்க பெரிய கடிகால், பார்வைக்கு பிடில் இசைக்கருவி போல இருப்பதால், இதற்கு பிடில் நண்டு என மேற்கு உலகத்தினர் பெயர் வைத்து விட்டனர்.
கைகாட்டி நண்டில் ஏறத்தாழ 100 வகைகள் உள்ளன. Uca என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த கைகாட்டி நண்டுகள்  கடல்நீரிலும், கடலோரமாக நிலத்திலும் வாழக் கூடியவை.
கடல்நீருக்குள் மூச்சுவிட இந்த நண்டுக்கு செவுள்கள் (Gills) உள்ளன. இதுபோக இலவச இணைப்பாக ஒரு நுரையீரலும் உண்டு. இதனால், கரையிலும் கூட .. கைகாட்டி நண்டால் வாழ முடியும். ஈரமான தரை இருந்தால்கூடபோதும். மாதக் கணக்கில் கைகாட்டி நண்டு அங்கே வாழக் கூடும்.
கைகாட்டி நண்டின் அடையாளமே அதன் ஒரு கடிகால் மட்டும் பெரியதாக இருப்பது தான். ஆண் நண்டுகளுக்கு மட்டுமே இப்படி அளவுக்கு மீறி பெருத்த பெரிய ஒரு கடிகால் இருக்கும். பெண் நண்டுகளுக்கு இப்படி இருக்காது.
இந்த பெரிய கடிகால், ஒவ்வொரு வகை நண்டுக்கும் ஒவ்வொரு விதமான நிறத்தில் கண்ணை கவரக் கூடியதாக இருக்கும். இந்த பெரிய கடிகால் கிட்டத் தட்ட நண்டின் உடல்நீளத்துக்கு சமமாக இருக்கும்.
இந்த பெரிய கடிகாலால் கைகாட்டி நண்டுக்கு என்ன பயன் என்கிறீர்களா? உண் பதற்கு இந்த பெரிய கடிகால் பெரிதாக உதவாது. மற்ற நண்டுகளிடம் சண்டையிடக் கூட இது பயன்படாது. பிறகு எதற்குத்தான் இந்த பெரிய கடிகால் என்கிறீர்களா?
தனது நிலப்பரப்புக்குள் ஊடுருவும் மற்ற நண்டுகளை இந்த பெரிய கடிகால் மூலம் கைகாட்டி நண்டு எச்சரிக்க முடியும். பெரிய கடிகாலை தரையில் தட்டி மற்ற நண்டுகளுக்கு இது எச்சரிக்கை விடுக்கும்.
இந்த பெரிய கடிகாலின் மற்றொரு பெரிய பயன், பெண் நண்டுகளை கவரப் பயன் படுவதுதான். பெண் நண்டைக் கண்டால் ஆண் நண்டு இந்த பெரிய கடிகாலை உயர்த்தி விந்தையான நடன அசைவுகளை மேற்கொள்ளும். விநோதமான உடல் மொழியைக் கையாளும்.
அதில் மயங்கிப்போகும் பெண் நண்டை, ஆண் நண்டு தனது வளைக்குள் அழைத்துச் செல்லும்.
இந்தகடிகால் நடன அசைவுகள்ஒவ்வொரு வகை, கைகாட்டி நண்டுக்கும் வேறு படும். சற்று குழப்பமான ஒரு சைகை மொழி இது. ஒருவகையில் இந்த நடன அசைவு, குறிப்பிட்ட ஒரு அந்த வகை நண்டு கூட்டத்தின் கடவுச்சொல் (Password) என்றும் கூட சொல்லலாம். கைகாட்டி நண்டுகளில் ஏறத்தாழ 100 வகைகள் இருப் பதால் இந்த நண்டு இனங்களுக்குள் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், ஒவ் வொரு வகை நண்டும் ஒவ்வொருவித கடிகால் நடன அசைவுகளை கைக்கொள் கின்றன.
கைகாட்டி நண்டுகள் கடற்கரையில், சேற்றுப் பாங்கான நிலத்தில் இரண்டடி ஆழமான வளை தோண்டி அதில் வாழும். உறங், இனப்பெருக்கம் செய்ய, ஒளிந்து கொள்ள இந்த வளை பயன்படும்.
கைகாட்டி நண்டு பகலில் நடமாடும். இரவில் வளைக்குள் உறங்கும். குளிர்காலத்தில் வளைக்குள் இவை நீண்டகால (Hibernate) துயில் கொள்ளும். வளைக்குள் கடல்நீர் புகும் என்று தெரிந்தால் வளையின் வாசலை இந்த நண்டு சேறு மற்றும் மணலால் அடைக்கும்.
அழுகிய பாசிகள், இறந்த கடலுயிர்களின் உடல்கள் போன்றவை தான் கைகாட்டி நண்டின் இரை. அதுபோல மடையான் எனப்படும் கொக்குக்கும் இந்த நண்டு இரையாகும். ஆபத்து நேரிட்டால் மணலில் புதைந்து கைகாட்டி நண்டு மறைந்து கொள்ளும். ஆபத்து விலகிய பின் வெளியே வரும்.
கைகாட்டி நண்டால் நன்னீரில் வாழ முடியாது. கடற்பகுதிகளில், கடற்கரைகளில் மட்டுமே வை காணப்படும்கைகாட்டி நண்டால் முன்னும் பின்னும் நகர முடியாது, பக்கவாட்டில் இது நகர்ந்து செல்லும்.
கைகாட்டி நண்டின் பெரிய கடிகால் முறிந்து விட்டால் அதனால் பிறழ்ச்சனை எதுவு மில்லை. உடைந்த பெரிய கடிகால் மீண்டும் வளர்ந்து விடும். எல்லா நண்டு களையும் போலகைகாட்டி நண்டும் தன் உடல்கூட்டைக் கழற்றும். 8 வாரங்களுக்கு ஒருமுறை இந்த உடற்கூடு கழற்றும் வேலை நடைபெறும். பெரிய கடிகாலை இழந்துவிட்ட கைகாட்டி நண்டு, இப்படி 3 முறை உடற்கூடுகளை மாற்றி, அதன்மூலம் புதிய பெரிய கடிகாலைப் பெற்றுவிடும். பழைய கடிகாலின் அளவில் ஏறத்தாழ 95 விழுக்காட்டை புதிய கடிகால் எட்டிப்பிடித்து விடும்.
கைகாட்டி நண்டுகளின், பெரிய கடிகால் உடைந்து போனால், மறுபக்கம் உள்ள சிறிய கடிகாலைக்கூட அவை பெரிய கடிகாலாக வளரச் செய்யும் (!)