Wednesday, 29 August 2018


ஃபுகு (Fugu)

பேத்தா அல்லது பேத்தை அல்லது பலாச்சி எனப்படும் Puffer மீன்களில் உலகம் முழுக்க 120 வகைகள் உள்ளன. சிறிய அளவிலோ பெரிய  அளவிலோ நச்சுத்தன்மை வாய்ந்த மீன்கள் இவை.
இந்த பேத்தா இன மீன்களில் ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுகு (Fugu) மீன்களும் அடங்கும். ஃபுகு மீன்களில் மொத்தம் 40 வகைகள் உள்ளன. பேத்தா மீன்களில் மிகக் கொடிய நஞ்சுகொண்ட மீன்கள் இவை.
உலகில் முதுகெலும்புள்ள உயிரினங்கள் வரிசையில் ஆகக் கொடிய ‘விடம்‘ கொண்ட 2ஆவது உயிரினம் ஃபுகு மீன்தான். இந்த ஃபுகு மீன், ஒரு வகை நுண்ணுயிரியை (பாக்டீரியாவை) தன் உடல்முழுவதும் குடியேறி வாழ இசைவு தருகிறது. முன்பணம் தராமல் குடியேறும் அந்த நுண்ணுயிரி, வாடகை பணத்துக்குப் பதிலாக, ஃபுகு மீனின் உடலில் டெட்ரோடோ (Tetrodotoxin). என்ற நஞ்சை உருவாக்குகிறது. துர்நாற்றம் வீசும் இந்த நஞ்சு, சயனைடை விட ஆயிரத்து 200 மடங்கு அதிக கொல்லும் திறன் வாய்ந்தது.
ஃபுகு மீனின் தோல், சிறுநீரகம், கண், குடல், கருப்பை, கல்லீரல் உள்பட பல இடங்களில் ஆபத்தான இந்த டெட்ரோடோ (Tetrodotoxin) நஞ்சு நீக்கமற நிறைந்திருக்கும். ஒரு ஃபுகு மீனின் நஞ்சு 30 பேர்களைக் கொல்லக் கூடியது. ஃபுகு மீனின் நஞ்சை முறியடிக்கும் நச்சுமுறிவு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆபத்தான இந்த ஃபுகு மீனை யாரும் சீந்தமாட்டார்கள், அதன் அருகிலேயே யாரும் போக மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஜப்பானில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் ஃபுகு மீன்கள் உண்ணப் படுகின்றன (?) இந்த ஃபுகு மீன் மூலம் தயாராகும் உணவின் விலை அதிகம். ஓர் உணவின் விலை கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாய்.
ஆபத்தான இந்த மீனை நஞ்சை நீக்கி சமைப்பதற்காகவே ஜப்பானில் திறமை வாய்ந்த சமையல் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த ஃபுகு மீனை சமைப்பதற்காக இரண்டு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சியும், சான்றிதழும் பெற்றவர்கள். இவர்கள் மட்டுமே ஜப்பானில் ஃபுகு மீனை சமைக்க முடியும். சமையலில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும், உண்பவர் களுக்கு அதுவே இறுதி உணவாகி விடும்.
ஜப்பானில், சரியாக சமைக்கப்படாத ஃபுகு மீன் உணவை ருசி பார்த்த பலர் மரண மடைந்து இருக்கிறார்கள். ஃபுகு மீனி னால் சிக்கல் ஏற்பட்டால், சிக்கல் ஏற்பட்டவர்களில் 60 விழுக்காடு பேர் களுக்கு இறப்பு உறுதி.
ஃபுகு மீனின் நஞ்சு முதலில் மனிதர் களின் உதடுகள் மற்றும் நகங்களில் வேலையைக் காட்டும். உதடுகளும், நகங்களும் மரத்துப் போகும். உடல் தளரும். கட்டுப்பாட்டை இழக்கும். விரைவில் சுவாசம் பாதிக்கும். ஒருவர் முழு விழிப்புடன் இருக்கும்போதே அவரது உடல் கட்டுப்பாட்டை விட்டு நீங்கும். அவரது உடலே அவருக்கு கல்லறையாக மாறும். விரைவில் மூளை செயல் இழந்து மரணத்தில் முடியும். இருந்தாலும் ஜப்பானியர்கள் பாரம்பரிய பெருமை கருதி ஃபுகு மீன் உணவை விருந்துகளில் உண்கிறார்கள். பலர் மரணத்தைத் தழுவவும் செய்கிறார்கள்.
ஃபுகு மீனின் உடலில் வாழும் நுண்ணுயிரிகளால்தான் நஞ்சு உருவாகிறது என்ற நிலையில், ஜப்பானில், நுண்ணுயிரிகள் அண்டாத வகையில் ஃபுகு மீன்கள் சிறப்புக் கவனத்துடன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த வகை ஃபுகு மீன்களால் எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 23 August 2018


சிங்கி இறால் (Spiny Lobster)

‘நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வளர்க‘, என்று வாழ்த்துவார்களே. இதுபோன்ற வாழ்த்துக்கு மிகப் பொருத்தமான உயிர் சிங்கி இறால்தான் (Spiny Lobster). அது ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.
இறால் இனத்தில் பற்பல வகைகள் இருப்பது தெரிந்ததே. இதில் Krill என்பது கூனிப்பொடி யையும், Shrimp என்பது கூனி இறாலையும், Prawn என்பது இறாலையும், Lobster என்பது சிங்கி இறாலையும் குறிக்கும். 
இறால்களில் பெரிய இனமான சிங்கி இறால்களில், கிளிச்சிங்கி, தாழைச் சிங்கி, மணிச் சிங்கி, தூள்பட்டைச் சிங்கி, மட்டைச் சிங்கி, பச்சை நிறச் சிங்கி, ராஜா ராணி சிங்கி என ஏறத்தாழ 60 வகைகள் உள்ளன.
சிங்கி இறால்கள் கடலடியில் சகதிப் பகுதியிலும், பார்அடர்ந்த கடற் கோரைகள் மிகுந்த பகுதிகளிலும் வசிக்கும். சிங்கி இறாலின் உடல் 19 பாகங்களால் ஆனது. ஒவ்வொரு பாகத்தையும் கனத்த தோடு மூடி யிருக்கும். ஒவ்வொரு பாகமும் இணையும் இடத்தில் உள்ள தோல் மெல்லியது. இதன் மூலம் சிங்கி இறாலால் வளையவும், நெளியவும் முடிகிறது. நண்டைப் போலவே சிங்கி இறாலும் அதன் வெளி உடற்கூட்டை அவ்வப்போது கழற்றக் கூடியது. உடற் கூட்டை கழற்றும் ஒவ்வொரு முறையும் சிங்கி இறால் 20 விழுக்காடு வளரும்.
சிங்கி இறாலின் முதன்மை அடையாளமே ஆண்டெனா போன்ற அதன் நீண்ட இரு உணர் கொம்புகள்தான். சாட்டை போல நீளமான இந்த உணர் கொம்புகள் சிங்கி இறாலின் மிகப்பெரிய ஆயுதம். சிங்கி இறாலின் இந்த உணர்கொம்புகள் சில வேளைகளில் சிங்கி இறாலின் நீளத்தை விட அதிகமாக இருக்கும்.
இவை தவிர, இரு சிறிய உணர் கொம்புகளும் சிங்கி இறாலுக்கு உண்டு. கடலில் அசைவுகளை கண்டுகொள்ளவும், கடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த சிற்றுணர் கொம்புகள்  சிங்கி இறாலுக்குப் பயன்படுகின்றன.
சிங்கி இறால், வெப்பப் பகுதி கடல்களில் வாழக்கூடிய உயிர். வெப்பம் அதிகரிக்கும் போது சிங்கி இறால் கரையை நோக்கி வரும். குளிர் மிகுந்தால், ஆழ்கடல் நோக்கி இது நகரும். கடலில் குளிரும், கொந்தளிப்பும், அதிகரித்தால், சிங்கி இறால்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே வரிசையில் ஆழ்கடல் நோக்கி, கடலடியில் நகர்ந்து ஊர்வலமாகச் செல்லும். இந்த ஒற்றை வரிசையை ‘கியூ‘ என ஆங்கிலத்தில் சொல் வார்கள்.
சிங்கி இறால் இரவில் நடமாடும் உயிர். மீன், நண்டு, மட்டி, சிப்பி, கடல் நத்தை, மூரை (Urchin) போன்றவை இதன் உணவு. பசி அதிகமாகி இரை கிடைக்காவிட்டால் சிறிய சிங்கி இறால்களை, பெரிய சிங்கி இறால்கள் தின்னும்.
சுறா, திருக்கை, கணவாய், பன்னா (Cod) போன்ற மீன்கள் சிங்கி இறாலின் முதன்மை எதிரிகள். இதில் வரிக்கொடுவா மீன், சிறிய சிங்கி இறால்களை அப்படியே உயிருடன் இரையாக விழுங்கக் கூடியது.
சிங்கி இறால் பின்பக்கமாகவும் நீந்த வல்லது. எதிரியைக் கண்டால், வாலை அடித்து பின்பக்க மாகவும் இது நீந்தித் தப்பிக்கப் பார்க்கும். உடல் முழுவதும் உள்ள முன்னோக்கிய முட்கள் சிங்கி இறாலுக்கு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைத் தருகின்றன. எதிரி நெருங்கினால், தனது நீளமான உணர்கொம்புகளை உடலில் தேய்த்து, ‘கிரீச்‘ என்ற சத்தத்தை உண்டாக்கி, சிங்கி இறால் எதிரியை பயமுறுத்தும். உணர்கொம்புகளை சாட்டை போல பயன்படுத்தி எதிரியை அடித்து காயப்படுத்தி விரட்டவும் செய்யும்.
சிங்கி இறாலின் உணர்கொம்பு முறிந்து போனால் அது மீண்டும் வளர்ந்து விடும். உணர் கொம்புகள் முழுமையாக வளர, குறிப்பிட்ட கால கட்டத்தில், 3 முதல் 4 முறை சிங்கி இறால், தோடு கழற்ற வேண்டியிருக்கும். அதுபோல எதிரியின் பிடியில் உணர்கொம்பு சிக்கிக் கொண்டு இனி தப்ப முடியாது என்று தெரிந்தால், சிங்கி இறால், உணர்கொம்பைக் கழற்றிவிட்டு தப்பிக்கும். உணர் கொம்புகள் மட்டுமின்றி சிங்கி இறாலுக்கு அதன் வாலும் ஓர் ஆயுதம். வாலால் அடித்தும் இது எதிரியை மிரட்டும். கடற்காய்களை வாலால் அடித்து, உடைத்து சாப்பிடும்.
சிங்கி இறாலின் பார்வைத் திறன் குறைவு. ஆனால், மோப்பத்திறனும், சுவையறியும் திறனும் அதிகம். சிங்கி இறாலின் இரத்தம் மனித இரத்தம் போல சிவப்பு நிறம் இல்லை தெளிந்த நீர் போல இதன் இரத்தம் இருக்கும்.
சிங்கி இறால்களில் ஆண் இறாலை சேவல் என்றும், பெண் இறாலை கோழி என்றும் அழைப்பார்கள். சிங்கி இறாலின் வாலில் உள்ள சதை மிகவும் சுவையானது என்பதால் இப்படி சேவல் என்றும் கோழி என்றும் சிங்கி இறால்கள் அழைக்கப்படுகின்றன.
சிங்கி இறால்களின் வாலடியில், உடலை ஒட்டியுள்ள முதல் இணை Swimmeret பாகம் கல் போல இருந்தால் அது ஆண் சிங்கி. இறகு போல மென்மையாக இருந்தால் அது பெண்சிங்கி.
பெண் சிங்கி இறால், அதன் வாலில் பல ஆயிரம் முட்டைகளைச் சுமக்கக் கூடியது. இதனால், பெண்சிங்கி இறாலின் வால், ஆணின் வாலைவிட பெரியது. பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் குண்டூசி தலை அளவுள்ள 8 ஆயிரம் முதல் 17 லட்சம் முட்டைகளை பெண்சிங்கி இறால் அதன் வாலில் சுமக்கும். பொரிக்காத நிலையில் இந்த முட்டைகள் கருப்புக் கோடு போலத் தோன்றும். சிங்கி இறாலைப் பிடிக்கும் மனிதர்கள் அதன் முட்டைகளையும் உண்பார்கள்.
இந்த முட்டைகளை ஓராண்டு காலம் கூட வாலில் சுமந்து செல்லும் பெண் சிங்கி, கடலில் தகுந்த வெதுவெதுப்பு நிலை ஏற்படும்போது, முட்டைகளைப் பொரிக்கச் செய்யும். முட்டைகளில், இருந்து வெளிவரும் லார்வா வடிவ புழுக்கள், 4 முதல் 6 வாரங்களுக்கு கடல் நீரின் மேல் மிதக்கும். அவற்றில் பல மீன்களுக்கும், கடற்பறவைகளுக்கும் இரையாகும். 0.1 விழுக்காடு லார் வாக்களே உயிர்பிழைக்கும். அவை கடலில் அமிழ்ந்து, சிங்கி இறால்களாக உருவெடுக்கும்.
இப்போது இறுதிக்கட்டத்துக்கு வருவோம். சிங்கி இறால்கள் 100 முதல் 150 ஆண்டுகள் கூட உயிர்வாழக்கூடியவை. ஒவ்வொரு முறை ஓடுகளை கழற்றி புதுஓடு மாற்றும் போதும் சிங்கி இறால் புத்துயிர் பெற்று, புது வாழ்வை அடைகிறது. ஓடு கழற்றுவதன்மூலம் சிங்கி இறால்கள் மீண்டும் மீண்டும் இளமை அடைகின்றன. மூப்படைந்து சிங்கி இறால்கள் இறப்பதேயில்லை.
சிங்கி இறால்கள் முதிர்ச்சி அடைந்தாலும் அவற்றின் பசி குறையாது. உணவின் அளவையும் சிங்கி இறால் குறைத்துக் கொள்ளாது. அதன் உயிர்ப் பரிமாணமும் மாறாது. சிங்கி இறாலுக்கு இனப்பெருக்கத்தில் ஆர்வமோ, திறனோ குறையாது. உடல்நலமும் கெடாது.
இயற்கையாக வாழும் சிங்கி இறால், மீனவர்களால் பிடிக்கப்பட்டோ, அல்லது சுறா, கணவாய் போன்ற மீன்களுக்கு இரையாகியோ இறந்தால் தான் உண்டு. மற்றபடி நூறாண்டுகளை கடந்து நோய் நொடியில்லாமல் சிங்கி இறால் சிறப்பாக வாழும்.

Tuesday, 14 August 2018


உலுக்கு (Electric Ray)

உலுக்கு எனப்படும் மின்சாரத் திருக்கை களில் உலகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில் ஆறடி நீளம் முதல் ஓரடிக்கும் குறைவான உலுக்கு மீன்களும் உள்ளன. சிமிழ், அம்மணத்திருக்கை என்பன உலுக்குக்கு உள்ள வேறு பெயர்கள்.
உலுக்கில் சிலவகை மீன்கள் சிறிய கண்கள் கொண்ட மீன்கள். சில இன உலுக்குகள் பார்வையற்ற மீன்கள். ஆம், கடலடியில் கலங்கிய மண்டிப் பகுதியில் வாழும் உலுக்குகளுக்கு பெரிய அளவில் பார்வைத் திறன் எதுவும் தேவையில்லை.
உலுக்கு இனங்களில் சில ஆழ்கடல்களில் காணப்படும். சில கடலோரமாக வாழ்க்கை நடத்தும். உலுக்கு பெரிதாக நீந்தாது. வாலைப் பயன்படுத்தி அவ்வப்போது மெதுவாக நகரும். அடிக்கடி மணலில் புதைந்து கொள்ளும். உலுக்கு மீன்களுக்கு மற்ற திருக்கை இன மீன்களைப் போன்ற நீண்ட சாட்டை வால் கிடையாது. மிகக் குட்டையான வால் கொண்ட மீன் இது.
உலுக்கின் தோல் மென்மையானது. மற்ற இனத் திருக்கைகளுக்கு இருப்பதைப் போல உலுக்கின் தோல் முரடானது அல்ல. தோலின் மீது பல்வேறு குறிகள் காணப்படும். சுறா, திருக்கை போல உலுக்கும் முட்டையிடாமல் நேரடியாக குட்டி ஈனும்.
உலுக்கின் சிறப்பம்சமே அதன் மின்சாரத் தாக்குதல்தான். கடலில் மின்சார விலாங்கு (Electrical Eel) மீனுக்கு அடுத்த படி அதிக மின்உற்பத்தி செய்து தாக்கு தல் நடத்தும் மீன் நமது உலுக்குதான்.
உலுக்கின் முன்பாகத்தை நேர்கோடாக வகிர்ந்தால் அந்த கோட்டின் இருபுறமும் உள்ள தசைத்திசுக்களில்தான் உலுக்கின் மின்னுற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. இந்த இரு மின்னுற்பத்தி உறுப்புகளின் எடை உலுக்கின் மொத்த எடையில் ஆறில் ஒரு பகுதி.
இந்த மின்உற்பத்தி நிலையம், அறுகோண வடிவில் தேன்கூடு போல எண்ணற்ற அறைகளுடன் அமைந்திருக்கும். இந்த அறுகோண அறைகளின் சுவர்கள் நாரிழையால் உருவாக்கப்பட்டவை. இணைப்புத் தசைத்திசுக் களால் பகுக்கப்பட்ட இந்த அறைகள் கூழ்மம் போன்ற ஒன்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இந்த அறைகளுக்குள் எண்ணற்ற மின்தகடுகள் புதைக்கப்பட்டிருக்கும். ஓர் அறுங்கோண அறைக்குள் 150 முதல் 5 லட்சம் வழவழ தட்டுகள் இருக்க வாய்ப்புண்டு. இந்த ஒவ்வொரு அறையும், உலுக்கு மீனின் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த சிற்றறைகள் ஒவ்வொன்றும் ஒரு மின்கலம் (பேட்டரி) போல செயல்படக் கூடியவை. கீழிருந்து மேலாக மின்சாரம் பாயும் விதத்தில் மிக நெருக்கமாக செல்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இரு சிறப்பு உறுப்புகளையும், உலுக்கு மீனின் 4 மத்திய நரம்பு மண்டலங்கள் கட்டுப் படுத்துகின்றன.
இந்த அறுங்கோண மின்கலத்தில் கீழ்ப்பகுதி தட்டு எதிர்மறை (நெகட்டிவ்). மேற்பகுதி தட்டு நேர்மறை (பாசிட்டிவ்).
எந்த ஒரு வேகமான இயக்கமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பது தெரிந்ததுதான். அதன் அடிப்படையில் இந்த செல்கள் உள்இயக்க விசையை விரைவுபடுத்துவதால் அதன்மூலம் உலுக்கு மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது.
ஒரு பெரிய உலுக்கின் மின் உறுப்பில், பல லட்சம் நுண்ணறைகள் இருக்க வாய்ப்புண்டு. உலுக்கு நினைத்தால் ஒரே நேரத்தில் எல்லா அலகு களையும் இயக்கி, 220 வோல்ட் மின்னாற்றலை வெளியிட முடியும்.
இந்த விந்தையான ஆற்றலைப் பயன் படுத்தி உலுக்கு அதன் இரையை வேட்டையாடுகிறது. இரை மீனின் மீது படர்ந்து மின்தாக்குதல் நடத்தி நிலை குலைய வைத்து அதைக் கொன்று உண்ணுகிறது. எதிரிகளை பயமுறுத்தி விரட்டவும் மின்னாற்றலை  உலுக்கு பயன்படுத்துகிறது.
உலுக்கு, அடுத்தடுத்து தொடர்ந்து மின்னாற்றலை வெளிப்படுத்திக் கொண்டே  இருந்தால் அதன் மின்கலம் தளர்ச்சியடையும்.  உலுக்கும் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் பலமிழக்கும். அதன்பிறகு சற்று ஓய்வெடுத்தபின் மீண்டும் மின்தாக்குதலைத் தொடரும்.
இருட்டில் குறைந்த அளவு மின்ஆற்றலை வெளிப்படுத்தி உலுக்கு மீன் மற்ற உலுக்கு மீன்களோடு தகவல் தொடர்பு கொள்வதாகவும் நம்பப் படுகிறது.
உலுக்குக்கான கிரேக்க பெயர்ச்சொல் Narke. நார்காட்டிக் (Narcotic) என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. தமிழிலோ, மின்ஆற்றல் மூலம் 
ஓர் உலுக்கு உலுக்குவதால் நம் உலுக்கு மீனுக்கு ‘உலுக்கு‘ என்ற பெயர் வந்திருக்கலாம்.

Monday, 13 August 2018


ஆமைப்பூச்சி (Mole Crab)

அலைகடலைப் பொறுத்தவரை அங்கே ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் பல. கரையோர உயிரினங்களும் பல. அலை ஆர்ப்பரித்து தரையோடு தாளமிடும் இடத் தில்கூட சில கடலுயிர்கள் வாழ்கின்றன. ‘அலை மடக்கும்‘ இடத்தில் வாழும் இந்த சிற்றுயிர்களில் ஒன்று ஆமைப்பூச்சி. ஆங்கிலத்தில் இதன் பெயர் மோல் கிரேப் (Mole Crab). அறிவியல் பெயர் எமரிட்டோ அனலோகா (Emerite Analoga).
அழகின் சிரிப்பு என்ற கவிதை நூலில் பாவேந்தர் பாரதிதாசன், கடல் என்ற தலைப்பில் எழுதிய கவிதையில்,
‘வெள்ளலை கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளைகள் ஓடி ஆடி
பெரியதோர் வியப்பைச் செய்யும்‘
என எழுதியிருப்பார். இப்படி வெள்ளலை கரைக்கு வந்த மீண்டும் திரும்பும் போது தென்படும் ஒரு சிறு உயிரினம்தான் ஆமைப்பூச்சி.
ஆமைப்பூச்சிக்கு தமிழில் ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. எலிப்பூச்சி, மச்ச நண்டு, கடல்எலி, உறல், பொத்திப்பூச்சி என்பன அவற்றுள் சில, குமரி மாவட்ட கடல்பகுதிகளில் ஆமைப்பூச்சி, உறை என அழைக்கப் படுகிறது.
அலை கரையில் வந்து மோதிவிட்டு திரும்பிச் செல்லும்போது மணலில் V வடிவத்தில் வரிகள் தோன்றும். அங்கு முறுமுறுவென காற்றுக் குமிழி களும் தோன்றும். அப்படித் தோன்றினால், அந்த இடத்தில் மணலுக்குள் ஆமைப் பூச்சி பதுங்கியிருக்கிறது என்று பொருள்.
ஆமைப்பூச்சி ஓர் அங்குல நீளமுள்ள உயிர். அலையடிக்கும் அலைவாய்க் கரையில் ஈரமணலில் மட்டுமே இது வாழும். உலர் மண்ணில் வாழாது. உலர்ந்த மண்ணில் ஆமைப்பூச்சிக்கு உண்ண எதுவும் கிடைக்காது.
அலை அடித்து திரும்பும் போது ஆமைப் பூச்சியின் கண்கள் வெளியே தள்ளும், இறகுத் தூவல் போன்ற ஆண்டெனாக்கள், அங்குமிங்கும் தென்னை ஓலைகள் போல அசைந்தாடி, அலை நீரில் பாசித் துணுக்குகளைத் தேடி உணவாக்கும். அலை வடியும் போது ஆமைப்பூச்சி உடனடியாக மண்ணுக்குள் புதைந்து மறைந்து கொள்ளும்.
ஆமைப்பூச்சி இப்படி அவசரமாக மண்ணுக்குள் புதைந்து கொள்ள காரணம் உள்ளது. சற்று தாமதித்தால் கூட இது, கடற்பறவைகளுக்கு இரையாக வாய்ப்புள்ளது. இதனால், அலைதிரும்பும் போது கண்ணிமைக்கும் வேகத்தில் ஆமைப்பூச்சி மணலைத் தோண்டி உள்ளே புகுந்து கொள்கிறது. பின்னங்கால்களால் மணலைத் தோண்டி, பின்பக்கமாகத்தான் ஆமைப்பூச்சி மணலுக்குள் நுழையும். பின்னங்கால்கள் இப்படி மணலைத் தோண்டும் போது, முன்னங்கால்கள் துடுப்புகள் போல அதற்குப் பயன்படுகின்றன.
உண்மையில் ஆமைப்பூச்சி, அதன் வாலால் தனக்கு கீழிருக்கும் மணலை அடித்து அதை திரவம் போல ஆக்குகிறது. பாதித் திரவநிலைக்கு மணல் வரும்போது சூழஉள்ள மணல் துகள்களை ஆமைப்பூச்சி மேலே தள்ளுகிறது. பூகம்பத்தின் போது, ஒரு வீட்டைச்சுற்றி நிலம் அதிரும்போது அந்த வீடு மண்ணுக்குள் புதையும் இல்லையா? அந்த தத்துவப்படி ஆமைப்பூச்சி மணலுக்குள் புதைந்து கொள்கிறது. இவையெல்லாம் கண் இமைக்கும் வேகத்தில் நடந்து முடிந்து விடுகிறது.
ஆமைப்பூச்சி, நண்டு, வெட்டுக்கிளி போல வெளிஉடற்கூடு (Exoskeleton) கொண்ட உயிரினம். நண்டுகளைப் போல ஆமைப்பூச்சிகளும் உடற் கூட்டை அவ்வப்போது கழற்றும். அந்த உடற்கூடுகள் நூற்றுக்கணக்கில் கரையொதுங்கும். பலர் அதை இறந்த ஆமைப்பூச்சிகளின் உடல்கள் என நினைத்துக் கொள்வார்கள்.
அலைவாய் கரையில் விளையாடும் சிறுவர் சிறுமிகளுக்கு ஆமைப் பூச்சியைப் பிடிப்பது ஒரு விளையாட்டு. சிலருக்கு ஆமைப்பூச்சி உணவாவதும் உண்டு. ஆமைப் பூச்சிகளை சமைத்தும், ஏன் பச்சையாக ‘கறுக் முறுக்‘ என கடித்து உண்பவர்களும் இருக்கிறார்கள். வரிக்கொடுவா மீன்களைத் தூண்டிலில் பிடிக்க ஆமைப்பூச்சி, சிறந்த தூண்டில் இரை யாகவும் பயன்படும்.