Wednesday, 28 March 2018


கருங்கொப்பரன் (Black Marlin)

மேலே நீலக்கொப்பரன்
கீழே கருங்கொப்பரன்
பில் பிஷ் (Bill fish) எனப்படும் ஈட்டி போன்ற மூக்குநீண்ட கடல்ஊசி மீன்களில் ஒன்று கொப்பரன் (Marlin). கொப்பரன்களில் நமக்குத் தெரிந்தவரை நான்கு வகைகள் உள்ளன. 1. கருங்கொப்பரன், 2. நீலக்கொப்பரன், 3. வரிக்கொப்பரன், 4. வெண் கொப்பரன்.
என்பு மீன்கள் எனப்படும் போனிபிஷ் (Bony Fish) வகையறாவில் மிகப்பெரிய மீன்களில் கொப்பரன்களும் ஒன்று. கடலில் அங்குமிங்குமாக சிதறி வாழும் இந்த கொப்பரன் மீன்கள், மிகவேகமாக நீந்தக் கூடியவை. தளப்பத்து எனப்படும் Sail fish, ஈட்டிமீன் எனப்படும் Swordfish, சூரை எனப்படும் Tuna மீன்களுக்கு நீச்சலில் கடும்போட்டியாக கொப்பரன்கள் திகழக் கூடியவை. பெருங்கடல்களில் 6 ஆயிரம் மைல்கள் வரை இவை வலசை போகும். முழுநிலா காலத்தையொட்டி கடல்மட்டத்துக்கு வரும் மீன்களைப் பிடிக்க கொப்பரன்களும் மேலே எழும். கணவாய், அயலை இன மீன்கள் கொப்பரன்களின் முதன்மை இரை. அதேப்போல வரிப்புலியன் போன்ற சுறா மீன்களுக்கு கொப்பரன் மீன்கள், இரையாகும்.
கொப்பரன்களிலும் நீலக்கொப்பரன், வரிக் கொப்பரன், வெண்கொப்பரனை விட கருங்கொப்பரனே (Black Marlin) மிகப்பெரியது. Istiompox indica என்பது இதன் அறிவியல் பெயர்.
வளர்ந்த கருங்கொப்பரன், 4.55 மீட்டர் நீளம் இருக்கலாம், நிறை 750 கிலோ வரை இருக்கலாம்.  ஆண் கொப்பரன்களை விட பெண் கொப்பரனே பெரியது, எடை கூடியது. விலை மதிப்புடையது.
கருங்கொப்பரனின் உடல் எடை நீலக்கொப்பரனுக்கு இருப்பதைப் போல உடல் முழுவதும் சமஅளவில் பரவியிருக்காது. தலையிலும், தோளிலும் எடை குவிந்திருக்கும். அதிக எடையும், முழுதிண்மையும், குட்டையான ஈட்டி வாயும் கொண்டது கருங்கொப்பரன்.
மற்ற கொப்பரன்களைப் போல் இல்லாமல் கரையோரம், அதாவது நூறடி ஆழத்துக்கும் குறைவான இடங்களிலும் கருங்கொப்பரன் சுற்றித்திரியும்.
கருங்கொப்பரனின் பக்கத் தூவி ஒவ்வொன்றும் 71 கிலோ வரை எடை உள்ளது. மற்ற கொப்பன்களைப் போல கருங்கொப்பரானால் அதன் பக்கத் தூவியை உடலோடு ஒட்டிவைத்துக் கொள்ள முடியாது. வீம்பாக, விறைப்பாக, வணங்கா முடியாக நிற்கும் இந்த பக்கத்தூவியே கருங்கொப்பரனை கண்டு கொள்ள சிறந்த அடையாளம்.
கொப்பரன்களில் நீலக் கொப்பரனுக்கு நீலநிற வரிகள் காணப்படும். மீன் இறந்து விட்டால் இந்த வரிகள் மாயமாகி விடும். வரி கொப்பரனை விட குட்டையான ஈட்டிஅலகு கொண்ட மீன் நீலக் கொப்பரன்.
அதுபோல வரிக்கொப்பரன் மெலிந்த கூர்மூக்கும், லாவெண்டர் நிற வரிகளும் உடையது. வெண் கொப்பரனின் முதுகு மற்றும் அடித்தூவி கூரின்றி வளைந்து நிற்கும்.
கொப்பரன்கள் ஒருபுறம் இருக்கட்டும், தளப்பத்து என்கிற Sail fish மீனைப்பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உள்ளது.

Wednesday, 21 March 2018


காலா (Threadfin)

மடவைக்கு மிகவும் உறவுக்கார மீன் காலா (Threadfin). மடவை மீனைப்பற்றி பதிவு இட்டபிறகு காலாவைப் பற்றி குறிப்பிடாமல் இருந்தால் காலா மீன் ஒருவேளை நம்மீது கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால், காலாவைப் பற்றியும் பதிவிட்டு விடலாம்.
தனித்துவமாக அமைந்த உருட்டு விழிகள்,கன்னப் பொருத்துகளில்
தொடங்கும் நூல் இழை போன்ற நீண்ட நெடிய மீசை, முதுகில் இருவேறு தனித்தனித் தூவிகள்இவையெல்லாம் காலா மீனின் அடையாளங்கள்.
மடவையைப் போலவே வெள்ளி சாம்பல் நிறத்தில் விளங்கும் மீன், காலா மீன்.
குழப்பமான 100 வகை குடும்பங்களை உள்ளடக்கிய Perciformes என்ற வகைப் பாட்டில் அடங்கும் மீன் இது. சூரை, கொடுவா போன்ற மீன்களும் கூட இந்த வகைப்பாட்டுக்குள் அடங்கும் மீன்களே.
காலா மீனின் கன்னத்தூவிகளை மேற்பகுதி, கீழ்ப்பகுதி என இருவேறாகப் பிரிக்கலாம். அதில் கீழ்ப்பகுதியில் ஆறு முதல் அதற்கும் அதிகமான நூல் போன்ற இழைதூவிகள் தன்னிச்சையாக அசைந்தாடும். இந்த நூலிழைத் தூவிகள் அனைத்தும் உணர்வான்கள். காலா மீன் கடல்தரையில் இரையைக் கண்டுணர இந்த நூல்தூவிகள் பயன்படுகின்றன.
காலாவின் மூக்கு, மடவையின் மூக்கைவிட மொண்ணையானது. கண்கள் பெரியவை. காலாவின் கண்களை ஒளிஊடுருவக்கூடிய ஒரு சவ்வுத் தோல் மூடியிருக்கும்.
காலா மீனின் முதுகில் மடவை மீனைப்போலவே இரு தனித்தனி தூவிகள் காணப்படும். நெகிழும் தன்மை கொண்ட முதல் தூவியில் 7 முதல் 8 முட்களும், 2ஆவது தூவியில், ஒரு முள்ளும் 11 முதல் 18 கதிர்த்தூவிகளும் விளங்கும்.
காலா மீன்களில், 15 சென்டி மீட்டர் நீளம் முதல் ஆறடி நீளம் வரையிலான பலவித காலாக்கள் உள்ளன. மிகப்பெரிய காலா 140 கிலோ வரை கூட நிறையிருக்கும். காற்றுப்பை எனப்படும் பள்ளை உள்ள காலாக்களும், ஏன் பள்ளை இல்லாத காலாக்களும்கூட இருக்கின்றன.
காலா மீனில் 33 வகைகள் உள்ளன.
சீனாக்காலா, கட்டிக்காலா, தாழங்காலா, உள்ளங்காலா, பனிக்காலா, வாளன் காலா, வெள்ளைக்காலா, கணாக்காலா போன்றவை தமிழில் உள்ள காலாக்களில் சில.
காலாவின் வயிற்றில் உள்ள பள்ளை, மீன்கூழ்பசை தயாரிக்கப் பயன்படுகிறது.

Thursday, 15 March 2018


மடவை, மடவா (Mullet)

முகிலிடை உதித்த முழுநிலா என்பார்களே. அதைப்போல, Mugilidae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் மடவை.
பல்லாயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றோடு ஒட்டி உறவாடும் ஒரு மீன் இனம் இது. கயல், கெண்டை என்ற பெயர்களோடு பாண்டியரின் கொடியில் இடம்பெற்ற பெருமைக்குரிய மீனும் இதுதான். மங்கையரின் விழிகளை மீன்களுக்கு ஒப்பிடுவார்களே. அப்படி கயல்விழி என அழைக்கப்பட காரணமான மீனும் மடவைதான். இன்னும் சொல்லப்போனால் தமிழில் மீன் என்ற சொல் மடவையைத்தான் குறிக்கிறது. (மீன் என்ற பெயர் மின்னுவதால் வந்த பெயர்)
ரோமானியர்கள் காலத்தில், நடுநிலக்கடல் (மத்தியத்தரைக்கடல்) பகுதியில் பெரிய அளவில் ஓர் உணவு ஆதாரமாகத் திகழ்ந்த பெருமையும் மடவைக்கு உண்டு.
மடவை சதைப்பற்றுள்ள, வேகமாக நீந்தக்கூடிய பெரும்கூட்ட மீன் (School Fish).உடலின் இருபுறமும் வெள்ளி கலந்த நிறத்துடன், முதுகில் பச்சை நிறமாகவும் மடவை மிளிரும். நீலம் கலந்த சாம்பல் நிற மடவையும் உண்டு. மடவையின் அடிவயிறு மற்ற மீன்களுக்கு இருப்பதைப் போலவே பால் வெள்ளை நிறம்.
மடவை திண்மையான நீள்சதுர வடிவ உடல் கொண்டது.
மடவையின் முதுகில் இரு தனித்தனி தூவிகள் இலங்கும். முதல் முதுகுத் தூவியில் விறைப்பான 4 முட்கள் இருப்பது இந்த மீனின் தனி அடையாளம். தட்டையான தலை, வட்ட செதிள்கள், மழுங்கலான மூக்கு, கவை வால், சிறிய முக்கோண வடிவ வாய் போன்றவை பிற அடையாளங்கள்.
மடவை மீனின் தாடையில் வலுவற்ற சிறிய பற்கள் இருக்கும். சிலவகை மடவைகளுக்கு பற்களே கிடையாது. மடவைகளில் நூறுக்கும் சற்று குறைவான வகைகள் உள்ளன.
மடவைகள் ஓரடி நீளம் முதல் 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
மடவை பொதுவாக சைவம். பாசிகள், சிறிய கடலுயிர்கள் இதன் உணவு. மண்டியைக் கிளறி இது இரை தேடும். மடவை மீனுக்கு பறவைகளுக்கு இருப்பது போல குடலில் ரைவைப் பை உண்டு. அதன்மூலம் உணவை இது அரைக்கக் கூடியது. செரிக்காத உணவை வெளியே துப்பும் பழக்கமும் மடவைக்கு உண்டு.
மடவை அடிக்கடி துள்ளிக்குதிக்கும் மீன். கடல்மேல் மூன்றடி உயரத்துக்கு இது துள்ளிவிழும். உடலை விறைப்பாக வைத்து பொத் என்ற சத்தம் எழ இது கடலில் விழும். மடவை துள்ளுவதை வைத்து அதன் கூட்டம் இருக்கும் இடத்தை கடலில் எளிதாக கண்டுகொள்ளலாம்.
மடவை ஏன் துள்ளுகிறது என்பதற்கு 4 வகை காரணங்களைச் சொல்கிறார்கள்.
1.கொல்மீன்கள் துரத்துவதால் இது துள்ளிப் பாய்கிறது. 2. உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை கழற்றிவிட மடவை துள்ளுகிறது. 3. அதிக உயிர்க்காற்றைத் தேடி மடவை துள்ளி விழுகிறது. 4. முட்டையீனும் காலத்தில் முட்டைப் பையைத் திறக்க மடவை துள்ளுகிறது. இவையே அந்த 4 காரணங்கள்.
மடவை (Mullet) மீன்கள் உண்ண சுவையான மீன்கள். வெண்ணிற மடவை, பாலை மீனுடன் (Milk Fish) நெருங்கிய தொடர்புள்ள மீன்.