Saturday, 27 January 2018

பெருந்திரள் மீன்கள்

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.. அலைகடலென திரள்வீர்

இதுபோன்ற அறிவிப்புகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். கடல்களைப் பொறுத்த வரை, அங்கு பெருந்திரள் மீன்கூட்டங்கள் அதிகம்.
இந்த மீன் திரளில் மிகப்பெரிய கூட்டமாகத் திகழும் மீன் அல்லது ஒருகாலத்தில் திகழ்ந்த மீன் வெங்கணைதான். (Herring)
சாளை மீன்கூட்டம்
வெங்கணை அல்லது வெங்கணா என அழைக்கப்படும் இந்த வெள்ளிநிற, சிறிய, எண்ணெய்ச்சத்துள்ள மீன் இனம் ஒரு காலத்தில் பெருங்கடல்களில் பல மைல்கள் நீளத்துக்கு கூட்டமாக பவனி வந்திருக்கிறது.
உலக அளவில் மிக அதிக அளவில் பிடிக்கப்படும் மீன் இனமாகவும் வெங்கணை விளங்கியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பிரிட்டன் போன்ற நாடுகள் பேரரசுகளாக, பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைய இந்த வெங்கணை மீன்களும் ஒருவிதத்தில் காரணம்.
வெங்கணை Clupidea குடும்பத்தைச் சேர்ந்தது. சாளை (Sardin), நெத்தலி (Anchovy) போன்ற மீன் இனங்களும் இந்த Clupidea குடும்பத்தில் அடக்கம்.
வெங்கணையில் ஒட்டுவெங்கணை சிறியது. இளவெங்கணை நடுத்தரமானது. பெரு வெங்கணை பெரியது. திரவெங்கணை இவற்றில் தனி ரகமானது.
கடலில் வெங்கணைக்கு அடுத்தபடி மிகப்பெரிய மீன்திரளாக வலம் வருபவை சாளைகள்தான். (சாளை மீன்களைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு)
சாளைகளும் வெங்கணா போலவே எண்ணெய்ச்சத்துள்ள மீன்கள்தான். சாளைகளில் பல வகைகள். நெய்ச்சாளை, வெள்ளாமுரச் சாளை, பண்ணைச் சாளை என்பன அவற்றுள் சில.
சாளையைப் போலவே இன்னொரு பெருந்திரள் மீன் இனம் சூடை.
இந்தப் பெருந்திரள் மீன்கூட்டங்களில் அடுத்ததாக இடம்பெறத்தக்கது நெத்தலி (Anchovy).
நெய்த்தோலி என்ற இந்த மீன் இனத்துக்கு கொழுமீன் என்ற பெயரும் உண்டு. நெத்தலிகளில் ஏறத்தாழ 144 வகைகள்.
சிறிய உடல்கொண்ட நெத்தலி மீன்கள் வலையில் பட்டதுமே எளிதில் அடிபட்டு இறக்கக் கூடியவை. திமிங்கிலம் போன்ற கடல் பேருயிர்களுக்கு மட்டுமின்றி இதர மீன்கள், கடற்பறவைகளுக்கும்கூட நெத்தலிகள் இரையாகக் கூடியவை. நெத்தலியில் சிறியது வெண்ணா.
பெருந்திரள் மீன்களில் நெத்தலிக்கு அடுத்தபடியாக பொருவா, கோலா, குத்தா, கக்காசி, தோட்டா, காரல் மீன்களைக் குறிப்பிடலாம்.

இந்த வகை மீன்களின் பெருங்கூட்டம் இல்லையென்றால் கடல் என்னும் கண்கவர் அருங்காட்சியகம் பெரும்பாலும் களையிழந்து போக வேண்டியிருக்கும்.

Tuesday, 23 January 2018

ஓங்கலும், ஓம்பிலியும்

ஓம்பிலி
ஓங்கல் என்றால் டால்பின் (Dolphin) என்பது தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒருவேளை இப்போது நன்கு தெரிந்திருக்கும். ஆனால், ஓம்பிலி என்பது என்ன?
ஓங்கல் போலவே கடலில் உலவித்திரிந்து, கடல்மேல் துள்ளிக்குதித்து, ஓங்கல் போலவே நீர்மேல் வந்து மூச்சுவிடக்கூடிய ஒரு வெப்ப ரத்த பாலூட்டிதான் ஒம்பிலி. ஆங்கிலத்தில் இதை போர்பஸ் (Porpoise) என்பார்கள். தமிழில் கடல்பன்றி என்பார்கள். இந்த கடற்பன்றி என்ற சொல்லும் ஓம்பிலியைத்தான் குறிப்பிடுகிறது.
ஓங்கலும், ஓம்பிலியும் பார்வைக்கு ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்தாலும் இவை இரண்டும் தனித்தனி பேரினங்களைச் சேர்ந்த கடல்பாலூட்டிகள்.
ஓங்கலுக்கும் ஓம்பிலிக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என்கிறீர்களா?
ஓங்கலுக்கும், ஓம்பிலிக்கும் உள்ள 6 வித்தியாசங்களில் முதன்மை வித்தியாசம் முதுகுத்தூவிதான். ஓங்கலின் முதுகுத்தூவி சற்று வளைந்திருக்கும். ஓம்பிலியின் முதுகுத்தூவி முக்கோண வடிவம் உடையது. அப்புறம் ஓங்கலின் உடல்வாகு மெல்லிய உடல்வாகு. ஓம்பிலிக்கு கொஞ்சம் தடித்த உடல்வாகு.
ஓங்கலுக்கு கொஞ்சம் முன்நீட்டிய அலகு (Beak) அல்லது வாய் இருக்கும். ஆனால், ஓம்பிலிக்கோ மிகச்சிறிய அலகு மட்டுமே இருக்கும். அதுபோல ஓங்கலின் பற்கள் கூம்பு வடிவம். ஓம்பிலியின் பற்கள் மண்வாரி ரகம்.
ஓங்கல்கள் சீழ்க்கைப் போன்ற ஒலிகள் மூலம் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடியவை. ஆனால், ஓம்பிலிகளின் தாய்மார்கள் விசில் அடிப்பது தவறு என்று கற்றுக் கொடுத்தார்களோ என்னவோ, ஒம்பிலிகள் இதுபோல சீழ்க்கைச் சத்தங்களை எழுப்புவதில்லை. கடல்மட்டத்துக்கு மேலே வந்து மூச்சுவிடும்போது ‘பப்’ என்ற ஒலியை வெளியிடுவதோடு சரி.
ஓங்கல்கள் கொஞ்சம் மனிதர்களோடு ஒட்டிஉறவாடக்கூடிய கடல் உயிர்கள். மனிதர்களின் அண்மையை ஓங்கல்கள் விரும்பக்கூடியவை. ஆனால், ஓம்பிலிகள் கொஞ்சம் உம்மணாமூஞ்சிகள்.
ஓங்கல்களைப் பொறுத்தவரை அவற்றின் உறவுமுறை பங்காளிகள் மிக அதிகம். அதாவது ஓங்கல்களில் மொத்தம் 32 இனங்கள். (இவற்றில் நன்னீர் ஆறுகளில் வாழும் 5 ஓங்கல் இனங்களும் அடங்கும்). ஆனால், ஓம்பிலியைப் பொறுத்தவரை அவற்றில் ஆறே ஆறு இனங்கள்தான்.
ஆனால், அறிவுக்கூர்மையைப் பொறுத்தவரை ஓங்கலும், ஓம்பிலியும் ஒரே ரகம்தான். இவை இரண்டுமே பல பாகங்கள் கொண்ட, சிக்கலான மூளை அமைப்பைக் கொண்டவை.  மெலன் (Melon) என்ற முலாம்பழ முன்திரட்சி உறுப்புமூலம் கடலில் வழியறிந்து செல்லக்கூடியவை.
ஓம்பிலிகளில் 6 வகைகள் இருந்தாலும், அவற்றில் தூவியற்ற ஒருவகை ஓம்பிலி மட்டுமே இந்தியப் பெருங்கடல்களில் வாழ்கிறது. மற்ற ஒம்பிலிகளை விட செங்குத்து நெற்றி கொண்ட ஓம்பிலி இது.
ஓம்பிலிகள், 68 கிலோ முதல் 72 கிலோ வரை நிறைகொண்டவை. ஓங்கல்கள் போலவே ஓம்பிலிகளும் திறமையான மீன்வேட்டையாடிகள்.  பெரிய கறுப்பன் எனப்படும் ‘கில்லர்வேல்‘ (Killer whale) ரக ஓங்கல்களுக்கு இவை அடிக்கடி இரையாகக் கூடியவை.
ஓம்பிலிகளில், மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் வாழும் ‘வெகிட்டா‘ (Vaquita) என்ற ஓம்பிலி இனம் அழிவின் விளிம்பில் தவிக்கிற அரிய இனம்.

Friday, 19 January 2018

ஒரு மீனின் விலை 5 லட்சம்

கோகேல்ஸ்
1938ஆம் ஆண்டு. தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் பகுதி மீனவர்கள் கடலில் இழுவைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விந்தையான ஒரு மீன் சிக்கியது. ஏறத்தாழ ஐந்தடி நீள மீன் அது. அப்படி ஒரு மீனை அந்தப் பகுதி மீனவர்கள் யாரும் அதுவரை பார்த்ததே இல்லை. கனமான செதிள்கள், பெரிய கண், வலுவான தாடை, தடிமனான தூவி, கட்டை குட்டையான வால்.
அந்த மீனை அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் சென்று பேராசிரியர் ஜே.எல்.பி. ஸ்மித் என்பவரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். மீன் இயலில் கரை கண்ட பேராசிரியர் ஸ்மித், அந்த மீனைப் பார்த்ததும் திகைத்து திக்குமுக்காடிப் போனார். காரணம், அது வரலாற்றுக்கு முந்தைய, ஏறக்குறைய 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பழங்கால மீன். (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்).
கோகேல்ஸ் (Coelacanths) என்பது அந்த மீனின் பெயர். ‘70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போனதாகக் கருதப்பட்ட இந்த மீன் இனம், இன்னும் உயிரோடா இருக்கிறது?‘ என்று அதிர்ந்து போனார் ஸ்மித்.
டெவானியன் (Devonian) காலத்தில் வாழ்ந்து, இப்போது ஃபாசில் (Fossil) எனப்படும் புதைபடிவங்களாக மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த பழங்கால மீன், ‘வாழும் வரலாறாகஇன்னும் உயிரோடு கடலில்இருக்கிறது என்பது உயிரிலாளர் ஸ்மித்தை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது.
பிடிபட்ட மீன் இறந்துவிட்ட நிலையில், அதை பாடம் செய்யும் பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரால் மீனின் தோலை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. உள்ளுறுப்புகள் சேதமாகி விட்டன. அது மிகப்பெரிய இழப்பு.
ஆனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலில் உள்ள கொமோரோஸ் தீவுக்கூட்டத்தில் மீண்டும் இதே வகை மீன் சிக்கியபோது வியப்பில் விதிர்விதிர்த்துப் போனார்கள் கடல் வல்லுநர்கள்.
ஆனால் அறிவியல் உலகத்துக்குத்தான் அந்த கோகேல்ஸ் (Coelacanths) மீன் அதிசயமாக இருந்தது. அங்குள்ள மீனவர்களுக்கு அது ஒன்றும் அதிசய மீன் இல்லை. அவ்வப்போது பிடிபடும் மீன் அது. சாப்பிட அவ்வளவு ருசியாக இல்லாத அந்த மீனை, உப்பிட்டு கொமரோஸ் மீனவர்கள் உலர் மீனாகப் பயன்படுத்தி வந்தார்கள்.
கோகேல்ஸ் மீனின் முரட்டுத்தனமான தோலை, சைக்கிள் டியூப்புக்கு பஞ்சர் ஒட்டும்போது, டியூப்பைத் தேய்த்து சரிசெய்ய அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
அதன்பின் மொசாம்பிக் நாட்டின் வடக்கிலும், ஆப்பிரிக்காவுக்கும், மடகாஸ்கர் தீவுக்கு இடைப்பட்ட கடலிலும் கோகேல்ஸ் மீன்கள் உயிர்வாழ்வது தெரிய வந்தது.
கோகேல்ஸ் மீன்கள், 75 முதல் 200 பாவ (Fathom) கடலில் காணப்படும் மீன்கள். பார் சரிவுகளில் இவை காணப்படும். இங்கு போடப்படும் வலைகள் அடவும் என்பதால் கோகேல்ஸ் மீன்களைப் பிடிப்பது மிகவும் கடினம். தற்செயலாக இந்த வகை மீன் வலையில் சிக்கினால்தான் உண்டு.
எஃகு நீலநிறம் கொண்ட இந்த கோகேல்ஸ் மீன்கள், இலேசான பழுப்புநிறச் சாயலுடன் இருக்கும். உடல் முழுக்க வெள்ளையும், கிரீம் நிறமும் கலந்த திட்டுகள் காணப்படும். பெரிய கனமான செதிள்கள் இதன் உடல் முழுவதையும் மூடியிருக்கும். இந்த மீனின் பின்புற முதுகுத்தூவி, அடித்தூவி, பக்கத்தூவிகளில் சிறிய காம்பு போன்ற எலும்பு உண்டு. இதனால், பலம் பொருந்திய மீனாக கோகேல்ஸ் திகழ்கிறது.
முதுகெலும்புள்ள இந்தக் கால மீன்களின் மூதாதை இந்த கோகேல்ஸ் மீன்தான். ஜூராசிக் யுகத்தில் வாழ்ந்த டைனோசர்கள், பூவுலகத்தை விட்டு குட்பைசொல்லி மறைந்து விட்ட நிலையில், இயற்கையின் இடர்பாடுகளைத் தாங்கி ஒரு மீன் இனம், ‘என்றும் வாழும் நம் தென்தமிழ்போல‘, 400 மில்லியன் ஆண்டுகளாக கடலில் நடமாடுவது ஆச்சரியம்தானே?

இந்த வகை அரிய கோகேல்ஸ் மீனில், உயிருள்ள மீனுக்கு உயிரியலாளர்கள் வைத்திருக்கும் விலை ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய். தென்ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியும், மொசாம்பிக் நாடும், கொமோரோஸ் தீவுகளும் இந்தியப் பெருங்கடலில்தான் உள்ளன. ஆகவே, நம் கடலில் கூட இருக்கலாம் இந்த அதிசய கோகேல்ஸ் மீன்.

Thursday, 4 January 2018

பெருங்கண்சீலா (பெருக்கஞ்சீலா) (Sphyraena Forsteri)

சீலா எனப்படும் பாரகுடா (Baracuda) மீன்கள் எல்லாமே கொஞ்சம் பெரிய கண்கள் உள்ள மீன்கள்தான். இதில் பெருங்கண்சீலா மீன், இன்னும் சற்று
கூடுதலாகப் பெரிய கண்கள் கொண்ட மீன். பெருங்கண்சீலா என்ற பெயர்தான் காலப்போக்கில் பெருக்கஞ்சீலா எனவும் மருவி விட்டது.
இந்தியப் பெருங்கடலுக்கே உரித்தான வெப்பக்கடல்மீன்களில் பெருங்கண் சீலாவும் ஒன்று. லேசாக நசுக்கப்பட்ட குழாய் போன்ற உடலமைப்பும், முதுகில் நீளமான கறுப்புக் கோடும், வெள்ளி நிற உடலும் கொண்ட மீன் இது. உடலில் வட்டவடிவில் சிறிய செதிகள்களும், கன்னத்தூவியை அடுத்து ஒரு கறுப்புத் திட்டும் இந்த வகை மீனில் காணப்படும்.
பெருங்கண்சீலாவுக்கு முதுகில் இரு தூவிகள் உண்டு. இரண்டும் நீ யாரோ நான் யாரோ என்பது போல, தனித்து, போதிய இடைவெளியுடன் காணப்படும்.
பெண்களுக்கு இல்லை என்று சொல்வது போல இடை இருக்கும் என்பார்களே அதைப்போல இந்த மீனின் முதல் முதுகுத்தூவி இருந்தும் இல்லாதது போல இருக்கும். முதல் முதுகுத் தூவியில் V வடிவில் பலமான முள்கள் இருக்கும். முதுகில் கதிர்த்தூவிகளும் விளங்கும். வால் அடிப்பக்கத் தூவியிலும்கூட முள் மற்றும் கதிர்த்தூவிகளைக் காணலாம்.
சீலா இனத்துக்கே உரித்தான விதத்தில் பெருங்கண் சீலாவின் கீழ்அலகு மேல் அலகை விட சற்று துருத்தி, முன்நீட்டியபடி இருக்கும். வால் பிளந்திருக்கும். வாயில், ஒரே அளவில் அமையாத ஒழுங்கற்ற பற்கள் அமைந்திருக்கும்.
பெருங்கண் சீலா இரவில் அதிக நடமாட்டம் உள்ள மீன். பெருங்கூட்டமாக இவை திரியும். மீன், கணவாய், இறால்கள் இவற்றின் உணவு.
மற்ற சீலா இன மீன்களைப் போல நீளமாக பெருங்கண்சீலா வளராது. இதன் நீளம் ஏறத்தாழ ஓரடிதான். மிஞ்சி மிஞ்சி போனால் இது ஒன்றரை அடி (50 சென்டிமீட்டர்) நீளம் வரை வளரலாம்.
பெருங்கண்சீலாவின் அறிவியல் பெயரான Sphyraena Forsteri என்பதில் ‘போர்ஸ்டெரி‘ என்ற பெயர், கேப்டன் குக்குடன் (Cook) கடல்பயணம் செய்த ஜெர்மன் நாட்டு இயற்கை ஆர்வலரான ‘ஜோகன் ரெய்ன்னால்ட் போர்ஸ்டெரி‘ என்பவரின் பெயரில் இருந்து வந்தது.
கடல் மீன் இனங்களில் ஒன்று கோவாஞ்சி. கோவாஞ்சி பெரிதானால், மாவுளா. மாவுளா பெரிதானால் ஊழி. ஊழி பெரிதானால் நெடுவா என்பார்கள்.
பெருங்கண் சீலாவை ஊழி என அழைப்பவர்களும் உள்ளனர்.

சீலாவில் மொத்தம் 28 வகைகள் இருக்கும் நிலையில், பெருங்கண்சீலா, சீலா இனத்தைச் சேர்ந்ததில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.