Tuesday, 20 September 2016

ஓங்கல் ஆமை (தோணி ஆமை) (Leather back turtle)

உலகின் மிகபெரிய கடலாமை (turtle) எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு ஓங்கல் ஆமை என்று சொல்லலாம். 7 அடி நீளம், ஐந்தடி அகலம், 900 கிலோ நிறைகொண்ட ஓங்கல் ஆமைக்கு உலகின் மிகப்பெரிய கடலாமை என்ற பெயர் கண்டிப்பாகத் தகும்.
மற்ற ஆமைகள் பத்தாண்டில் அடையக்கூடிய வளர்ச்சியை ஓங்கல் ஆமை இரண்டே ஆண்டு

களில் எளிதாக அடைந்துவிடும். ஓங்கல் ஆமைக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவரும்போது இருப்பதை விட வளர்ந்தபிறகு 30 ஆயிரம் மடங்கு பெரிதாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஓங்கல் ஆமைக்கு தோல்முதுகு ஆமை, ஏழு வரி ஆமை என்று இன்னும் சில பெயர்களும் இருக்கின்றன.
இதன் கரும்பழுப்புநிற மஞ்சள் திட்டுகள் கொண்ட ஓடு மிகமிக மெல்லியது. ரப்பர் போன்றது. வளர்ந்த மீனவர் ஒருவர் ஓங்கி விரலால் குத்தி, ஓங்கல் ஆமையின் முதுகில் ஓட்டைபோட்டுவிட முடியும். கடலாமைகளில் மெல்லிய ஓடு கொண்ட ஒரே ஆமை ஓங்கல் ஆமைதான். ஆங்கிலத்தில் தோல் முதுகு ஆமை என இதற்குப் பெயர் வர இந்த மெல்லிய ஓடே காரணம். நீரியக்க விசை சார்ந்த கட்டமைப்பை இந்த ஓடு ஓங்கல் ஆமைக்குத் தருகிறது. ஓட்டின் மீதுள்ள கரைமேடுபோல ஓடும் 7 கோடுகளால் இது ஏழு வரி ஆமை எனவும் அழைக்கப்படுகிறது.
மீன், மூரை, கணவாய், பாசி போன்றவற்றை ஓங்கல் ஆமை உண்டாலும் இதன் முதன்மை உணவு சொறி எனப்படும் இழுது மீன்கள்தான். இழுது மீன்களைப் பிடிக்க ஓங்கல் ஆமை, 4 ஆயிரத்து 200 அடி வரை கடலில் மூழ்கும். அங்கே 85 விநாடிகள் வரை இந்த ஆமையால் தங்கியிருக்க முடியும். இது ஸ்பெர்ம் எனப்படும் விந்து திமிங்கிலம் மூழ்கக் கூடிய ஆழம்.
W போன்ற மேல்தாடையால் சொறிமீனின் மொழுமொழுக் உடலை இது எளிதாக துண்டாடி உண்ணக்கூடியது.
குளிர்ந்த கடல்களிலும் கூட ஓங்கல் ஆமை உடலில் சூட்டை வரவழைத்துக் கொண்டு உயிர்வாழக்கூடியது. பெண்ஆமை, முட்டையிடுவதற்காக 3 ஆயிரத்து 700 மைல்கள் பயணப்படும். கரையில் பள்ளம் பறித்து 80 முதல் 100 முட்டைகளை இது இடும். மற்ற ஆமைகளைப் போலவே ஓங்கல் ஆமையின் முட்டைகளும் குழியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கேற்ற ஒட்டுமொத்தமாக ஆண் குஞ்சுகளாகவோ அல்லது  பெண் குஞ்சுகளாகவோ மாறும்.
2 மாதத்தில் முட்டையில் இருந்து வெளிவரும் ஓங்கல் ஆமைக்குஞ்சுகள், 2 முதல் 3 அங்குலமே இருக்கும். அதன்பின் ஏலவே நாம் பார்த்தது போல, உயிர்பிழைத்திருந்தால் 30 ஆயிரம் மடங்கு பெரிதாக வளரும்.
ஓங்கல் ஆமையின் ஆயுள் ஏறத்தாழ 45 ஆண்டுகள்.

கடலில் குப்பையாக வந்து சேரும் நெகிழி பைகளை சொறி மீன் என நினைத்து ஓங்கல் ஆமைகள் உண்டுவிடுவதுண்டு. இதனால் அழிவின் விளிம்பில் இப்போது நீந்திக் கொண்டிருக்கின்றன இந்த ஆமைகள்.