Thursday, 25 February 2016

கீச்சான் (மொண்டொழியன்)


கீளி மற்றும் குறிமீன்களின் உறவுக்கார மீன் கீச்சான். Cresent Perch, Tiger Perch என்பன கீச்சானின் ஆங்கிலப் பெயர்கள்.  கடலில் மணல் தரையையொட்டித் திரியும் கரையோர மீன் இது. உடல்நெடுக படுக்கை வசமாக கரும்பழுப்புநிற வரிகள் ஓடும். வாலிலும் அவை நீளும். கீச்சானின் இந்த உருவத்தோற்றம் கடலடியில் அதை உருமறைப்பு செய்து கொள்ள உதவுகிறது.
கடல் தரையைக் கிளறி நண்டுகள், சிறுமீன்களை கீச்சான் இரையாகக் கொள்ளும், இதன் இன்னொரு முதன்மை உணவு உயிருள்ள மீன்களின் செதிள்கள்.
மணலுக்குள் பதுங்கியிருந்து அருகில் வரும் மீனின் வாலை இது கவ்வி இழுக்கும், அப்போது நடக்கும் இழுபறி போராட்டத்தில் மணல்புழுதி எழுந்து கண்மறைக்கும் நேரத்தில் எதிரிமீனின் செதிள்களை கீச்சான் கொத்தி எடுத்து உணவாகக் கொள்ளும்.
பெரிய மீன்களிடம் சிக்கும் போது தசைகளுக்கு வலுவூட்டி U போல வில்லாக வளைந்து எதிரிமீனின் வாய்க்குள் நுழையாமல் கீச்சான் தப்பிக்கும்.
நீரின் மேலிருந்து பார்க்கும்போது கீச்சானின் உடலில் இருக்கும் வரிக்கோலம், கிட்டத்தட்ட அம்பு எய்வோர் பயன்படுத்தும் குறிவட்ட இலக்குப் போலத் தோன்றும், அதனால் ஆங்கிலத்தில் Target Fish என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

Thursday, 11 February 2016

வரிப்பாறை (GOLDEN TREVELLY)

பளிச்சிடும் பொன்மஞ்சள் வண்ணத்தால் மற்ற பாரை இன மீன்களில் இருந்து விலகி தனித்துவமாகத் தெரிவது வரிப்பாரை. இதன் பொன்னிறமான உடலில் செங்குத்தாக 7 முதல் 12 வரிகள் ஓடும். கண்வழியாகவும் ஒரு வரி ஓடுவது சிறப்பானது.
இதன் தூவிகள் மஞ்சள் நிறத்தவை. தடித்த சதைப்பற்றுள்ள உதடுகள் இந்த மீனுக்குண்டு. இந்த வாயால் இரையை இது உறிஞ்சவும் கூடியது. வால் நுனிகள் கறுப்பில் தோய்ந்தவை.
வரிப்பாரை வளர வளர இதன் நிறம்மாறி வெள்ளிநிறமாகும். வரிகள் மங்கி மறைந்து திட்டுகளாக உருமாறும். வரிப்பாரைக்கு இளம்வயதில் வாயின் கீழ்த் தாடையில் பற்கள் இருக்கும். வளர்ந்தபின் பற்கள் இருக்காது.
சிறு வரிப்பாரை அம்மணி உழுவை, யானைத் திருக்கை, பெருஞ்சுறாக்களுடன் இணைந்து அவற்றின் அருகே உடன்நீந்தி துணை வரும். இதனால் இதர பெரிய மீன்களின் ஆபத்தில் இருந்து இது தப்பும்.
சுறாக்களின் அருகே அவற்றின் பார்வை படாத இடத்தில் வரிப்பாரை நீந்திவரும். அப்படியே கண்களில் பட்டாலும் பெரிய மீன்களால் உடனே உடல் திருப்பி இவற்றைக் கடிக்கமுடியாது.
பெருமீன்களின் மாங்குடன், அவை சிதறும் உணவையும் வரிப்பாரை உணவாகக் கொள்ளும். மீன்கள், சிறுநண்டுகள், இறால்களும் இதன் உணவு.
வரிப்பாரைக்கு நிறைய வெளிச்சம் தேவை என்பதால் சூரியஒளி படரும் கடல்மேற்பரப்பையொட்டி இது வாழும். கூட்டமீனான வரிப்பாரை ஒரு பார் மீன்.


அதிகாலையிலும், அந்திமயங்கும் வேளையிலும் இது உணவுண்ணும். வரிப்பாரை அரையடி முதல் இரண்டடி வரை வளரக்கூடியது. செம்பாரை, பொடிப்பாரை என வரிப்பாரைக்கு வேறு பல பெயர்களும் உள்ளன.

Tuesday, 9 February 2016

தளப்பத்து (மயில் மீன்)

ஈட்டி போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல், துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.
SAIL FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில் எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.
கீழ்ப்புற முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக நீந்த உதவுவது.
தளப்பத்து அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால் அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.
உதிர்ந்து உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம் வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே மீனாக உருக் கொள்ளும்.

கொப்பரக்குல்லா  (MARLIN)

தளப்பத்து போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம், கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.
தளப்பத்து மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.

SWORD FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன் சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.

Friday, 5 February 2016

வரிச்சூரை (Skip jack)

சூரை எனப்படும் Tuna இனமீன்கள், பெருங்கடல் மாப்பு மீன்கள் (கூட்ட மீன்கள்). சூரை இனத்தில் ஏறத்தாழ 15 இனங்கள். பெரும்பாலும் சூரைகளுக்கு செதிள் கிடையாது. மாங்கு மட்டுமே உண்டு.
சூரையின் 15 இன மீன்களை 3 வகையாகப் பிரிக்கலாம். முதல்வகை நீலச்சூரை அல்லது நீலத்தூவிச் சூரை. (Bluefin Tuna)
அல்பக்கோர் (Albacore) எனப்படும் குளிர்கடல் வெள்ளைச்சூரை இந்த முதல் வகையைச் சேர்ந்தது. வெள்ளை நிற இறைச்சி கொண்ட மீன் என்பதால் வெள்ளைச்சூரை எனவும் அழைக்கப்படுகிறது அல்பக்கோர்.
அல்பக்கோர் என்ற சொல், குட்டி ஒட்டகம், விலை மதிப்பற்றது (Al bakr, Al bakur) என்ற பொருள்படும்

அரபுச் சொல்லில் இருந்து உருவானது.
பெருங்கண் (Big eye tuna) சூரைக்கும், இந்த முதல் பட்டியலில் இடமுண்டு. சூரை இனத்தில் இந்த இன மீன்களே விலை மிக்கவை. சூரை என மதிக்கத் தக்கவை.
இரண்டாவது வகைப்பாட்டில் கேரை அல்லது கீரை மீன் என அழைக்கப்படும் மஞ்சள்தூவி சூரை (Yellowfin Tuna) அடங்கும். மஞ்சள்தூவி சூரைக்கு முதுகிலும், அடிப்புறத்திலும் அரிவாள் போன்ற நீளமான தூவிகள் அமைந்திருக்கும்.
2ஆவது வகையில் இடம்பெறக்கூடிய இன்னொரு மீன் கருந்தூவி சூரை. நீள்வட்ட வடிவ மீனான இது, சூரை இனத்தில் சிறியது. கரிய முதுகுள்ள இந்த மீன் 21 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது.
3ஆவது வகையில் இடம்பெறும் சூரைகளில் ஒன்று வரிச்சூரை. மற்றது Frigate Tuna எனப்படும் எலிச்சூரை.
இதில் வரிச்சூரை சிறிய ரக மீன். இதர சூரைகளுடன் ஒப்பிடும்போது இது மூன்றடி வரை நீளம் கொண்டது. உடல் கீழ்ப்புறத்தில் 4 முதல் 7 வரிகள் இருப்பது இதன் முக்கிய அடையாளம். கருநீல முதுகும், வெள்ளிநிற பக்கங்களும் கொண்ட வரிச்சூரை, 8 முதல் 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
வெப்பக் கடல் மீனான வரிச்சூரை, இரவில் கடல்மேற்பரப்பில் திரியும். பகலில் 850 அடி ஆழம் வரை செல்லும். கடலோரமும் இது வந்து செல்லும்.
கேரை மீன், பெருங்கண் சூரைகளுடன் இணைந்து கூட்டமாகத் திரியும் வரிச்சூரை, இதர சூரைகளைப் போலவே ஒரு கொன்றுண்ணி மீன். கடலின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வரிச்சூரையின் வகிபாகம் மிக முதன்மையானது.

உணவு சேர் பொருள்களில் ஒன்றான மாசிக் கருவாடு உருவாக்கத்துக்கு வரிச்சூரை மிகவும் உதவுகிறது. 

Thursday, 4 February 2016

அய்லஸ் (பறளா மீன்)

பெருங்கடல் மீனான அய்லசுக்கு பல்வேறு மொழிகளில் பலப்பல பெயர்கள்.
ஸ்பானிய மொழியில் இது டொராடோ (தங்கமீன்). ஹவாய் மொழியில் மாகி மாகி (Mahi Mahi) (மிகவும் வலிமை). ஆங்கிலத்தில் டால்பின் மீன். (ஓங்கலையும் அய்லஸ் மீனையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது), இதுபோக லாம்புகா என்ற பெயரும் இந்த வகை மீனுக்கு உண்டு.
கடல்மேற்பரப்பில் திரிந்து, கோலா போன்ற பறக்கும் மீன்களை வேட்டையாடி உண்ணும் அய்லஸ், பல வண்ணங்களில் மின்னக்கூடியது. நெற்றி தொடங்கி வால்வரை முதுகில் இந்த மீனுக்கு கதிர்த்தூவி உண்டு. அதில் 65 கதிர்கள் வரை இருக்கலாம்.
ஆண்மீனின் நெற்றி செங்குத்தாக மேலெழும். பெண் மீன் என்றால் நெற்றி முதுகுத் தூவியை நோக்கி சற்றே சரிந்திருக்கும். அய்லஸ் மீனில் பெண்மீன் ஆணை விட சிறியது.‘
அய்லஸ் மீனின் அடிப்புற பின்தூவி ஏறத்தாழ அதன் உடலில் பாதியளவு இருக்கும். அதில் 30 கதிர்கள் வரை இருக்கலாம். 7 முதல் 18 கிலோ வரை இது எடைகொண்டது.
பிறை போன்ற இதன் வால், மணிக்கு 40 முதல் 50 மைல் வேகத்தில் நீந்த உதவுகிறது. அடிக்கடி கடல்மேல் அய்லஸ் துள்ளிப்பாயும்., படகுகளில் அடிக்கடி இது துள்ளி விழுந்து விடுவதுமுண்டு.  
கோலா மீன்கள், கணவாய், நண்டு போன்றவை அய்லஸின் முதன்மை உணவு. உண்ணச் சுவையான இந்த மீன்,  நீண்டகாலமாக உண்ணத்தகாத மீனாக ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தது உண்மையில் வேடிக்கையான ஒன்று. அய்லஸ் மீனை தேங்காய்ப் பாலில் தோய்த்து பச்சையாக உண்ணும் பழக்கம் சில பகுதிகளில் உள்ளது.
அய்லஸ் மீனின் குட்டிகள், கடல்பாசிகளுக்குள் மறைந்து வாழும், படகின் அடிப்புறம், கடலில் மிதக்கும் குப்பைகளுக்குள்ளும் குட்டிகளுக்கு வாழப் பிடிக்கும்.

அய்லஸ் மீன் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு மீன் பொம்பேனோ (Pompano). ஆனால், அது அய்லஸ் போல துள்ளிக்குதிக்காது.