லோமியா (Notched butterfly threadfin bream)
தெளிந்த ரோஸ் மிட்டாய் நிறம் கொண்ட லோமியா மீன் நவரைக்கு
உறவுக்கார மீன். பவழப்பாறை களுக்கு அடுத்த பள்ளங்களில் அதாவது பார்விட்டு தாழ்ந்த பகுதிகளில்
வாழும் கடலடி மீன் இது. இந்தியப் பெருங்கடல் இதன் இருப்பிடம். குறிப்பாக பாரசீக வளைகுடாவில்
இந்தவகை மீன்கள் அதிகம்.
லோமியா மீன் 8 அங்குலம் முதல் 29 சென்டி மீட்டர் வரை
நீளமிருக்கும். கடலில் ஆழம் செல்ல செல்ல இந்த வகை மீனின் அளவு பெரிதாக இருக்கும். மீனின்
மேற்பகுதி பிங்க் நிறமாகவும், அடிப்பகுதி வெள்ளி நிறமாகவும் மிளிரும். இந்த இருநிறங்களையும்
எல்லைப் பிரிப்பது போல மெல்லிய சவ்வுத்தோல் ஒன்று செவுள் முதல் வால் வரை ஓடும்.
Membrane எனப்படும் அந்த மெல்லியத் தோலை உரித்தெடுத்தால் அதன்அடியில் ஓர் ஈர்க்குக்குச்சியை
வைக்கும் அளவுக்கு மெல்லிய பள்ளத்தைக் காணலாம். வெட்டுப்பட்ட (Notched) என்று லோமியா
மீனுக்குப் பெயர்வர இந்த பள்ளக் கோடே காரணம்.
லோமியாவின முதுகில் 10 முள்கதிர்தூவிகளும், 9 மென்கதிர்தூவிகளும்
காணப்படும். முதுகுத்தூவியின் முனைகள் தோடம்பழ நிறம் எனப்படும் ஆரஞ்சு நிறத்தவை.
வால்அடியில் 9 கதிர்தூவிகள் காணப்படலாம். அடிப்பக்க
முன்தூவி கூர்மையானது. வாலடித் தூவியைத் தொட்டுவிடும் அளவுக்கு அது
நீளமானது. லோமியாவின் பக்கத்தூவிகள் நீளமானவை. தூவிகள்
அனைத்துமே பிங்க் நிறமானவை. லோமியாவின் வாலின் மேல்நுனி கீழ்நுனியை விட சற்று நீளமானது.
இந்த மீனின் தாடையிலும், விழிகளுக்கு முன்பும் பொன்மஞ்சள்
நிற வரிகள் காணப்படும்.
சிறுகூட்டமாகத் திரியும் லோமியா மீன், பகலில் இரைதேடக்கூடியது.
முத்துப் படுகைகள் மற்றும் மண்டி பகுதியில் இந்த கடலடி மீன் அதிகம்
காணப்படும்.
17 மீட்டர் முதல் 100 மீட்டர் ஆழத்தில் லோமியா வாழக்கூடியது.
Nemipterus peronii என்பது இதன் அறிவியல் பெயர்.
ஓட்டுண்ணிகளுக்கு அதிகம் இடமளிக்கும் லோமியாவில் ஏறத்தாழ
26 வகைகள். அதில், கிளி லோமியா, கிளிப்பச்சை நிற தூவிகள் கொண்டது. ராசியா லோமியா என்பது
8 முதல் 10 கிலோ வரை நிறையுள்ள பெரிய மீன். அழுக்கு சிவப்பு மிட்டாய் வண்ணமாக
இது காணப்படும்.
கண்டல், துள்ளுகெண்டை, சங்கரா என்பது லோமியாவுக்கான
வேறுசில பெயர்கள் எனக்கருதப்படுகிறன.