Saturday, 31 July 2021

 

காவாவும் ஆலாவும் (Gulls and Terns)



கடற்பறவைகளில் குறிப்பிடத்தக்க இரு சிறிய வகை பறவைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காவா (Gull). மற்றது ஆலா (Tern). காவாப்புள் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் காவா என்பது வேறு. புள் என்பது வேறு.

காவாவை கடற்புறா என்பார்கள். புள் எனப்படும் டெர்ன் பறவைக்கு கடற்காக்கை என்ற பெயர் பொருத்தமானது..

காவா, ஆலா (புள்) இரண்டுமே லாரிடே (Laridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் உள்ள பறவைகள் இவை. ஆனாலும்கூட சிறுசிறு வேறுபாடுகள்மூலம்  காவாவையும், ஆலாவையும் இனம் கண்டறியலாம்.

காவா தண்டியானது. ஆலா (புள்) காக்கை மெலிந்த உடல் கொண்டது. காவாவுக்கு நீண்ட கால்கள். ஆலாவுக்குக் குட்டையான கால்கள். காவா வளைந்த அலகு கொண்டது. ஆலாவுக்கு கொக்கு போன்ற நேரான அலகு. பறக்கும்போது காவாவின் சிறகு வட்டமாகத் தெரியும். ஆலா பறக்கும்போது அதன் வால் கவடு போலத் தெரியும்.

காவா வாத்துபோல கடல்நீரின் மேல் மிதந்து மேற்பரப்பில் நீந்திவரும் மீன்களைப் பிடிக்கக் கூடியது. முக்குளிக்காது. ஆனால், ஆலாக்கள் முக்குளித்து மீன் பிடிக்கக்கூடியவை. ஆனால் இரு பறவைகளாலும் நீரின் மேலே மிதக்க முடியும்.

காவா அடிக்கடி கண்ணில் தட்டுப்படக்கூடிய பறவை. ஆலா அரிதானது. காவா குறுகிய தொலைவு வரை வலசை போகக்கூடியது. ஆலா நீண்டதொலைவு வலசை செல்லக்கூடிய பறவை. காவா அதிக சத்தமாக ஒலியெழுப்பும். ஆலா அமுக்கமான குரல் உடையது. காவாவுக்கு வாத்துக்கு இருப்பது போன்ற சவ்வுக்கால் கிடையாது. ஆலாவுக்கு சவ்வுக்கால் உண்டு.

காவா மீன்களைத்தவிர இதர இரைகளையும் தின்னக்கூடியது. சிறுபறவைகள், எலிகளை வேட்டையாடக்கூடியது. ஆலா மீன்களை மட்டுமே பெரும்பாலும் உண்ணக்கூடியது. மீனைத் தின்றவுடன் பீய்ச்சக்கூடிய பழக்கம் ஆலாவுக்கு உண்டு.

காவாவுக்கு கூடுகட்டும். ஆலா கூடு கட்டாது. தரையில் முட்டைகள் இடும்.

வாடைக்காலம் தொடங்கியதும் காவா,புள் வந்து விடும்.

காவாக்களில், தவிட்டுத்தலை கடற்புறா எனப்படும் Brown Headed Gull க்கு தமிழில் பொந்தர் என ஒரு பெயர் உண்டு. இதன் முகத்தில் முதலில் புள்ளி, பிறகு திட்டு, படர்வு என கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு வண்ணத்துக்கு மாறும். பின்னர் முழு முகமும் கருப்பாகும்.

ஆலா முக்குளிக்கும் பறவை என்பதால், குடைத்துணி போல ஈரம்படாத உடல் கொண்டது. சவ்வுக்கால்களின் உதவியுடன் இது திடீரென வழுக்கி விமானம் போல மேலே ஏறும். எண்பது மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து குழியோடி மீன்குத்தும். இப்படி பாய்ச்சல் போட்டுபுள்குத்துவதன்மூலம் மீனவர்களுக்கு மீன் இருக்கும் இடத்தை ஆலாக்கள் காட்டிக் கொடுக்கும்.

ஆலாக்களில் மசவப்புள் என்பது ஆழ்கடல் பறவை. இது மிக ஆழத்தில் முக்குளிக்க வல்லது. ஆழ்கடலில் அலைந்து திரிந்து கரை தேடி வரும் மாலுமிகளுக்கு ஆலா எனப்படும் புள் ஒரு நற்குறி. ஏனெனில் ஆலா கரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும். ஆலாவைக் கண்டால் கரை 30 கிலோ மீட்டர் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

(படங்களில் இருப்பது பொந்தர் எனப்படும் தவிட்டுத்தலை கடற்புறா (Brown Headed Gull)

…………………………..

Tuesday, 13 July 2021

 கிறிச்சடை (Rainbow Runner) (Elagatis bipinnulata)



கிறிச்சடை.. இப்படி ஒரு கடல்மீன் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. Blle Runner என்பது கும்புளா பாரையை குறிக்கும் ஆங்கிலப் பெயர். அதேப்போல Rainbow Runner என்பது இந்த கிறிச்சடை மீனைக் குறிக்கிறது.

கும்பிளாப் பாரையைப் போல
கிறிச்சடையும் பாரை இனத்து மீன்தான். ஆழ்கடல் மீன் இது. பார்வைக்கு அழகான மீன் என்பதுடன், உண்ணத்தகுந்த சுவையான மீன் இது. கருங்கொப்பரான் (Black Marlin). சூரை (Tuna) மீன்களுக்காகப் போடப்படும் தூண்டிலில் சிலவேளைகளில் கிறிச்சடை சிக்கிக் கொள்ளும். சின்ன கிறிச்சடை மீன்களை சிலர் சூரை, சுறா மீன்களுக்கான தூண்டில் இரையாகவும் பயன்படுத்துவார்கள்.

கிறிச்சடை வானவில் போல ஏழு வண்ணங்கள் கொண்ட மீன். இதன் சிறிய முதுகுத்தூவியும், டார்பிடோ போன்ற உடலும் நீரைக் கிழித்துச் செல்ல உதவுகிறது. இந்த மீனின் தூவிகள் மஞ்சள் நிறமானவை.

உடலின் மேற்பகுதி அடர்நீலம் அல்லது ஒலிவப்பச்சை நிறம். உடலின் நடுப்பகுதி நீலநிறம். அடிப்பகுதி வெண்மை நிறம். உடலில் நீளவாக்கில் இரண்டு வெளிர்நீலக்கோடுகள் ஓடும். உடலின் குறுக்கே மஞ்சள் நிறப் வரிப்பட்டைகளும் காணப்படும்.

வேகமாக நீந்தக்கூடிய மீன் இது. நண்டு, இறால், கணவாய் போன்றவை கிறிச்சடையின் உணவு. கடலின் மேல்மட்டத்துக்கு வந்து அங்கு மிதக்கும் சிறு உயிர்களையும் இது இரையாக்கக் கூடியது.

கிறிச்சடை நாலடி நீளம் வரை வளரக்கூடியது. மிகப்பெரிய மீன் 40 கிலோ வரை எடையிருக்கலாம். முக்குளிப்பவர்களைக் கண்டால் இது இரண்டுமுறை சுற்றிவந்து பார்த்துவிட்டு விலகிச் செல்லும்.

கிறிச்சடைகளில் சிறிய மீன்கள் கூட்டமாகத் திரியும். வளர்ந்த பெரிய கிறிச்சடை தனியாக உலாவும். இடம்விட்டு இடம் பெயர்ந்து, வலசை போகக்கூடிய மீன் இது.

கிறிச்சடை அரிதாக கிடைக்கும் மீன் என்பதால் மிகச்சுவையான மீன் என்றாலும் அதிக விலை போகாது. காரணம் பலருக்கு இதன் அருமை தெரியாது. ஆண்டில் ஒருமுறை மட்டுமே இந்த மீன் இனப்பெருக்கம் செய்யும் என்ற தகவலும் உண்டு.

சென்னைப் போன்ற வட தமிழகப் பகுதிகளில் சிறிய அளவிலான கிறிச்சடை மீன்கள் பூங்குழலி என அழைக்கப்படுகின்றன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பசிபிக் கடலின் மைக்ரோனேசிய தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த மக்கள் கிறிச்சடை மீனைப் பிடித்து உண்டிருக்கிறார்கள் என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது